கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, June 23, 2012


‘சிறுகதைகள்’ என்றாலே புதுமைப்பித்தன் தான் முதலில் நினைவுக்கு வருவார். மிக அசாதாரணமான, பிரமிக்க வைக்கும் எழுத்து நடை அவருடையது. அவருடைய இந்த ‘சிற்றன்னை’ புதினத்தால் எழுந்த சிந்தனைப் பொறிதான் இயக்குனர் மகேந்திரன் ‘உதிரிப் பூக்கள்’ என்ற மகத்தான திரைப்படத்தை இயக்குவதற்கான உந்துசக்தி. இந்த ‘சிற்றன்னை’யை முழுமையாகப் படித்தால், புதுமைப்பித்தனின் மற்ற படைப்புகளையும் படித்துவிட விரும்பி தேடியலைவீர்கள் என்பது நிச்சயம்.

                            சிற்றன்னை
                                    - புதுமைப்பித்தன் -

சுந்தரவடிவேலு சர்வ கலாசாலையில் பி.ஏ. பரீட்சையில் இங்கிலீஷ் இலக்கியத்தில் பேப்பர் திருத்துபவர். மகன் ராஜா இறந்த பிறகு வேலை பார்‌க்கவே அவருக்குப் பிடிக்கவில்லை. குழந்தை குஞ்சுவின் பொருட்டும் (இரண்டாவது) மனைவி மரகதத்தின் பொருட்டும் வேலைக்குச் சென்று வருகிறார்.

சுந்தரவடிவேலுவின் வேலைக்காரனுக்கு லஞ்சம் கொடுத்து, திருத்திய பேப்பரில் தன் மார்க்கைப் பார்க்க ஆசைப்படும் மாணவன் ஒருவன் அவர் இல்லாத நேரம் வீட்டிற்கு வர, மரகதத்தின் அழகில் மயங்கி, காதலிப்பதாக உளறி, அவளிடம் அடி வாங்கிக் கொண்டு ஓடுகிறான். மரகதம் குழந்தை குஞ்சுவுடன் கொஞ்சி விளையாடியபடி மாடிக்குச் சென்று சுந்தரவடிவேலு வரும் வரை கதவைச் சார்த்திக் கொள்கிறாள்.

குஞ்சுவைப் பார்க்க அவள் தாத்தா வரப் போவதாக சுந்தரவடிவேலு சொல்கிறார். அவர் வேலைக்கச் சென்றபின் மரகதம் உறங்கிக் கொண்டிருக்க, பால்காரனிடம் தானே பால் வாங்கி சின்னம்மாவுக்கு காபி கலக்க எண்ணி சமையலறையை கொட்டிக் கவிழ்த்து அதகளம் செய்கிறது குஞ்சு. அதனால் கோபமாகும் மரகதத்தை ‘அக்கா’ என்று குஞ்சு அழைக்க, ஒரு பூனையைப் பிடித்து குழந்தையின் அருகில் கொண்டு வந்து பயமுறுத்துகிறாள். குழந்தை வீரிட்டு அலற, அப்போது வரும் சுந்தரவடிவேலு, மரகதத்தைத் தள்ளிவிட்டு குழந்தையைத் தூக்கிச் செல்கிறார். அந்த அதிர்ச்சியால் குஞ்சுவுக்கு ஏற்பட்ட ஜுரம் தெளிய மூன்று நாட்களாகிறது. மூன்று நாட்களும் அருகிலேயே இருந்து கவனித்துக் கொள்கிறார் சுந்தரவடிவேலு.

நான்காம் நாள் சுந்தரவடிவேலு வேலைக்குச் சென்று மா‌லை திரும்பும் வரை குஞ்சு வீட்டுக்குள் வராமல் தோட்டத்திலேயே விளையாடிய படி பொழுதைக் கழிக்கிறது. அதைக் கண்டு வருந்துகிறார் சுந்தரவடிவேலு. மனைவியையும் குழந்தையையும் சமாதானப்படுத்துகிறார். மறு நாள் வரும் தாத்தா. சுந்தரவடிவேலுவிடம் குழந்தையைத் தன்னுடன் கிராமத்துக்கு அழைத்துச் செல்வதாகச் சொல்கிறார். ரயில் நிலையத்திற்குச் சென்று மரகதமும், சுந்தரவடிவேலுவும் வழியனுப்புகின்றனர். ரயில் முன்னோக்கி நகர, கதை பின்னோக்கி நகர்கிறது.

சுந்தரவடிவேலுவின் இரண்டாவது திருமணம். சிறுவன் ராஜா உற்சாகமாக தன் வயதுச் சிறுவர்களுடனும் குஞ்சுவுடனும் விளையாடி மகிழ்கிறான். திருமணத்தின் பின் மரகதத்தை ‘அக்கா’ என்று குஞ்சு அழைக்க, ‘சித்தி’ என்ற அவள் திருத்துகிறாள். இரண்டு குழந்தைகளும் மரகதத்துடன் நன்கு பாசமாகப் பழக ஆரம்பிக்கின்றனர்.

ஒருநாள் புயல் வர, காற்றும் மழையும் கலந்து அடிக்கிறது. கோடைப் புயல் மின்னலும் இடியும் கிடுகிடு பாய்கின்றன. பால் வாங்கிவர, சிறுவன் ராஜாவிடம் குடையைக் கொடுத்து அனுப்புகிறாள் மரகதம். புயல் காற்றில் தத்தளிக்கும் சிறுவனை, குடையைக் கண்டு மிரண்ட மாடு ஒன்று முட்டி விடுகிறது. மாடு துரத்தியதில் குடையை வீசி எறிந்து விட்டு வெறுங்கையுடன் வீட்டுக்கு வரும் அவனை, குடையைத் தொலைத்ததுட்ன் பாலும் வாங்கி வராததற்காக மரதகம் அடிக்கிறாள்.

அப்போது சுந்தரவடிவேலு கடுங்கோபத்துடன் வீட்டினுள் வருகிறார். தான் எடுத்து வைக்கச் சொன்ன ஒரு முக்கியக் கடிதத்தை மறந்ததற்காக மரகதத்தைத் திட்டி, கன்னத்தில் அறைந்துவிட்டு, அதை எடுத்துக் கொண்டு கிளம்புகிறார். ராஜா குறுக்கே வந்து ஏதோ சொல்ல வர, தன்னிலை மறந்தவராய் அவனையும் பூட்ஸ் காலால் உதைத்துத் தள்ளி விட்டுப் போகிறார். அறை வாங்கிய கோபத்தில் மரகதம் தன் அறைக்குச் சென்று கதவைச் சார்த்திக் கொண்டுவிட, சுந்தரவடிவேலுவின் உதை வர்மத்தில் விழுந்ததால் துடிக்கிறான் ராஜா.

மாடு முட்டியது, மழையில் நனைந்த ஜுரம், சுந்தரவடிவேலுவின் உதை எல்லாம் சேர, கஷ்டப்பட்டு மாடி ஏறுகிறான். அவன் வலி புரியாத குழந்தை, அவனை மடியில் ‌படுக்க வைத்துத் தாலாட்ட, குழந்தையின் மேலேயே சரிந்து விழுந்து விடுகிறான் ராஜா. அவன் உயிர் பிரிகிறது. வீட்டுக்குத் திரும்பிய சுந்தரவடிவேலு நடந்தவற்றைக் கண்டு பேரதிரச்சி அடைகிறார்.

ராஜாவின் அந்திமக் காரியங்கள் முடிகிறது. தனிமையில் தன்னிரக்கத்துடன், ராஜாவின் மரணத்துக்குத் தானே காரணம் என்று சுந்தரவடிவேலு பேச, மரகதமோ, ராஜாவின் மரணத்துக்கு அவர் காரணமில்லை, தானே காரணம் என்கிறாள். தெருவில் ஒரு பிச்சைக்காரன் ‘உலகமே பைத்தியக்காரக் கும்பல், காரண காரியத் தொடர்பற்ற குழப்பம்’ என்ற பொருளில் ஒரு பாடலை உச்ச ஸ்தாயியில் கர்ண கடூரமான குரலில் பாடியபடி செல்கிறான்.


25 comments:

  1. புதுமைபித்தன் எனக்கு பிடித்த எழுத்தாளர். அவரது இயற் பெயர், எங்கள் ஊர் (விருத்தாசலம்) பெயரைக்கொண்டு இருப்பதால் அல்ல.அவரது கதைகளை பிடித்திருப்பதால்.

    ReplyDelete
    Replies
    1. அவரது கதைகள் படித்தால் பிடித்துப் போகும் ரகம்தானே...

      Delete
  2. தட்டச்சு செய்தது பின்னூட்டத்தில் விட்டுப் போய்விட்டதால் தொடர்கிறேன். சிறுகதை மன்னனின் ‘சிற்றன்னை’ சிறுகதையை சுருக்கி தந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. சிறுகதை மன்னனின் நாவல் சுருக்கத்தை ரசித்துப் படித்த உங்களுக்கு நானல்லவா நன்றி சொல்ல வேண்டும். என் இதயம் நிறைந்த நன்றி.

      Delete
  3. அருமையாக சுருக்கியிருக்கிறீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. உற்சாகம் தரும் வார்த்தைகள் சொன்ன உங்களுக்கு உளம் கனிந்த நன்றி ஸ்ரீராம்.

      Delete
  4. தங்களுக்கே உரித்த பாணியில் வெகு அழகாய் சுருக்கி தந்துவிட்டீர்கள் :)

    ReplyDelete
    Replies
    1. சுருக்கிய வடிவத்தை ரசித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  5. வெகு வேகமாகச் செல்லும் கதை... படித்து ரசித்தேன்... அவர் எழுதிய புதினங்கள் படித்தது இல்லை. கண்டிப்பாக படிக்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. படித்துப் பாருங்கள் சீனு, பிடித்துப் போகும். உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. புதுமைப் பித்தன் அவர்களது அருமையான ”சிற்றன்னை” சிறுகதையை “கேப்சூல்” வடிவில் படித்து மகிழ்ந்தேன்....

    தொடர்ந்து பகிர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  7. அருமையான நடையில் சுருக்கி சிற்றன்னையை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சுருக்கிய இந்த இலக்கியத்தை ரசித்த தங்கைக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  8. +2 படிக்கும்போது பாடத்தில் துணைப்பாடத்தில் வந்த புதுமைப் பித்தனின் ஒரு நாள் கழிந்தது என்ற சிறுகதையைத் தவிர வேறு எதையும் நான் படித்ததில்லை.தற்போது ஒரு கதையை சுருக்கமாகத் தந்து என் குறையத் தீர்த்துவிட்டீர்கள்.அருமை.

    ReplyDelete
    Replies
    1. புதுமைப்பித்தன் முழுமையாகப் படித்தால் மனதைக் கொள்ளையடிப்பார் முரளிதரன். படித்துப் பாருங்கள். உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

      Delete
  9. எப்போதோ படித்த நினைவு! சுவை குறையாமல் சுருக்கித்
    தந்துள்ளீர் நன்றி!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. இப்போதும் படித்து ரசித்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.

      Delete
  10. Replies
    1. அருமையாக எழுதி உள்ளேன் என்று ஊக்கம் தந்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  11. எனக்கும் புதுமைப்பித்தன் பிடிக்கும் அவரின் ஒருநாள் கழிந்தது சிறுகதை ஒரு சிறப்புமிக்கது! சிற்ற்னையை வாசிக்க உதவிய கணேஸ் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்§

    ReplyDelete
    Replies
    1. ரசித்துப் படித்த நேசனுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  12. புதுமைப்பித்தனின் சிறுகதைகளுள் ஒன்றைப் பற்றிய அறிமுகத்துக்கு மிகவும் நன்றி கணேஷ். ஒருநாள் கழிந்தது கதை மட்டுமே நானும் வாசித்திருக்கிறேன். அவருடைய மற்றக் கதைகளையும் வாசிக்கும் ஆவல் விஞ்சுகிறது. நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. இது சிறுகதை அல்ல கீதா. குறுநாவல் என்கிற வகையில் அடங்கும். இக்கால பாணியில் சற்ற்ற்றே நீண்ட சிறுகதை எனலாம். சிறுகதை மன்னனின் மற்றப் படைப்புகளையும் படித்துப் பாருங்கள். மிக ரசிப்பீர்கள். உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  13. புதுமைபித்தன் பற்றி சரியான நேரத்தில் நினைவுப்பதிவு.
    நான் கூட இந்த வாரம் அவரோட ஒரு கதையைப் பத்தி எழுதலாம்னு நினைச்சேன்.. இப்ப நீங்க செஞ்சுட்டது நல்லதா போச்சு.
    கதைச் சுருக்கம் நன்று. பாராட்டுக்கள்.

    ReplyDelete