கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, April 8, 2013


                                          8. பாதாள அறையில் பயங்கர ஒளி

பூட்டிய அந்த அறைக்குள், கதவுக்கு எதிரே நாற்காலியில் ஒரு மனிதன் அமர்ந்தபடி, ஒரு துப்பாக்கியைப் பரஞ்சோதியை நோக்கி நீட்டிப் பிடித்துக் கொண்டிருந்தான். சந்தியாவின் ஜாகையில் பரஞ்சோதி பார்த்த அதே மனிதன்தான் அது.


“கைகளைத் தூக்கியபடி உள்ளே வா” என்றான் அந்த மனிதன். அவன் குரலைக் கொண்டு அவன் யாரென்று புரிந்து கொண்டார் பரஞ்சோதி. அன்றிரவு டெலிபோனில் பேசிய சுந்தர்தான் அவன்! வியப்போடு அவன் முகத்தைப் பார்த்து, தனது கைகளை உயரத் தூக்கியபடி உள்ளே நுழைந்தார் பரஞ்சோதி.

நாற்காலியில் அமர்ந்திருந்த சுந்தர், நாற்காலியை விட்டு எழுந்து, பரஞ்சோதியை அதில் அமரும்படிக் கூறினான். அதே சமயம் பாஸ்கர் வந்து சேர்ந்தான். பரஞ்சோதியின் அருகே வந்து அவர் வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டான். பிறகு சுந்தர் அவரைத் துப்பாக்கி கொண்டு மிரட்ட, பாஸ்கர் அவரை நாற்காலியோடு சேர்த்துக் கட்டினான்.

 “நீ வெளியே சுதந்திரமாக உலாவிக் கொண்டிருக்கும் பொழுது எதற்காகக் கடத்தப்பட்டு விட்டதாக நடிக்கிறாய், சுந்தர்?” என்று கேட்டார் பரஞ்சோதி.

“என் மனைவி என் காரியங்களில் குறுக்கிடாமல் இருப்பதற்காகத்தான் அப்படி செய்தேன்” என்று கூறிய சுந்தர், “நீங்கள் எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டீர்கள்?” என்று கேட்டான்.

“நான் உன் குரலைக் கொண்டு உன்னை அடையாளங் கண்டுகொண்டேன். எதனால் உன் மனைவிக்கு உன் செய்கைகள் தெரியக்கூடாதென்று நீ விரும்புகிறாய்?” என்று கேட்டார் பரஞ்சோதி.

“தான் ஒரு கடத்தல்காரனின் மனைவி என்பதை அவள் தெரிந்து கொள்ளும் பொழுது நிலைமை எப்படி இருக்குமென்று யோசித்துப் பாருங்கள். அதனால்தான் நான் கடத்தப்பட்டு விட்டதாகக் கூறி ஒளிந்துகொண்டு என் கடத்தல் வேலைகளைத் தொடர்ந்து செய்ய நான் இங்கே வந்தேன்” என்று கூறினான் சுந்தர்.

“இதையெல்லாம் உன்னிடம் கூறுவதால், நீ போய் போலீசில் கூறி விடலாமென்று நினைக்காதே, பரஞ்சோதி! ஒரு முறை என் பிச்சுவாவிற்குத் தப்பி விட்டாய். ஆனால் இப்போது நீ உயிரோடு தப்பப் போவதில்லை” என்று கூறிச் சிரித்த பாஸ்கர், “உனக்கு என் அறைச் சாவியைக் கொடுத்த வேணுவின் கதையைத் தீர்த்து விட்டு வருகிறேன்” என்று கூறியபடி தனது துப்பாக்கியை எடுத்துக் கொண்டு மாடிப் படிகளில் தட தடவென்று இறங்கினான்.

தன்னால் வேணுவுக¢கு தீங்கு நேர்ந்து விட்டதே என்று தவித்தார் பரஞ்சோதி. ஆனால் அவர் செய்யக்கூடியது எதுவுமில்லை. சில நிமிஷங்களில் துப்பாக்கி வெடிக்கும் சத்தமும், வேணுவின் மரண ஓலமும் கேட்டன. அதைக் கேட்டதும் பரஞ்சோதியின் ரத்தம் கொதித்தது. தனது ஆத்திரத்தை வெகு சிரமப்பட்டு அடக்கிக் கொண்டார். சில வினாடிகளில் பாஸ்கர் திரும்பி வந்தான். பரஞ்சோதியின் கைகள் இரண்டையும் பின்புறம் இழுத்து வைத்துக் கட்டினான் பாஸ்கர். பிறகு அவரை நாற்காலியோடு சேர்த்துக் கட்டியிருந்த கட்டை அவிழ்த்து விட்டு, பரஞ்சோதியை நிற்க வைத்தான்.

“இவரை என்ன செய்யலாம், பாஸ்கர்?” என்று கேட்டான் சுந்தர்.

“பாழடைந்த மாளிகையில் உள்ள சுரங்க அறையில் அடைத்து விடு” என்றான் பாஸ்கர்.

உடனே சுந்தர் முகம் பேயறைந்தாற்போல் மாறியது. அவன் முகத்தில் ஏற்பட்ட மாறுதலை பரஞ்சோதி கவனித்து விட்டார். சில வினாடிகளில் தன்னைச் சமாளித்துக் கொண்ட சுந்தர், பரஞ்சோதியை கீழே தன் கார் நின்ற இடத்திற்கு அழைத்துச் சென்றான். பரஞ்சோதி ஒன்றும் பேசாமல் அவனோடு சென்றார்.

“பவானியை யார் கொன்றார்கள்?” என்று சுந்தர் காரைக் கிளப்பியதும் கேட்டார் பரஞ்சோதி.

“பாஸ்கர்தான் அவளைக் கொன்று விட்டான்” என்று கூறிய சுந்தர், “அங்கு கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பையன்தான் டெலிபோன் செய்து யாரோ இருவர் அவளைப் பார்ப்பதற்கு வந்துள்ளதாகக் கூறினான். நான் எவ்வளவோ தடுத்தும் கேட்காமல் பவானியைச் சுட்டுக் கொன்று விட்டான்” என்று கூறும்பொழுதே அவன் குரல் கரகரத்தது.

“சந்தியாவை நீதான் கொலை செய்தாயா?”

“ஆமாம்! அவளிடம் யாராவது பணம் கொடுத்தால், பேசக் கூடாத விஷயங்களையெல்லாம் பேச ஆரம்பித்து விடுவாள். அதனால் தனக்கு ஆபத்து வந்து விடுமென்று பயந்தான் பாஸ்கர். சங்கருக்கு எதிராக நாங்கள் சாட்சியைத் தயாரித்ததை அவள் அறிந்திருந்தாள். அவளை நான் எப்படிக் கொலை செய்தேன் என்று இப்பொழுதுகூட எனக¢கு ஆச்சரியமாக இருக்கிறது” என்றான் சுந்தர்.

அதற்குள் அந்தப் பாழடைந்த மாளிகையை அவர்கள் அடைந்து விட்டனர். பரஞ்சோதியும் தமயந்தியும் வந்து பணத்தை வைத்த அதே மாளிகைதான் அது.
“உன்னுடைய மெய்க்காப்பாளன் மோகனைக் கொலை செய்தது யார்?” என்று கேட்டார் பரஞ்சோதி.

“பாஸ்கர்தான் அவனைக் கொன்றான்.”

அந்த இடம் பயங்கரமாகக் காட்சியளித்தது. மாலை ஆறு மணியாகி விட்டதால் அந்த மாளிகை இருண்டு, பேய்க்களை பரப்பியபடி நின்று கொண்டிருந்தது. அந்த மாளிகையை ஒட்டி இருந்த ஒரு சிறிய மண்டபத்தருகே பரஞ்சோதியை அழைத்துச் சென்றான் சுந்தர்.

இருவரும் அங்கு உள்ளே சென்ற சுரங்கப் பாதையில் நடந்து சென்றனர். வளைந்து வளைந்து சென்ற அந்தப் பாதையில், தனது டார்ச் விளக்கை அடித்தபடி பரஞ்சோதியை அழைத்துச் சென்ற சுந்தர், ஒரு இடத்தில் நின்றான். அந்த இடம் ஒரு அறையை போல இருந்தது.

ஒரு மூலையில், சாக்குகளால் மூடப்பட்டு ஏதோ ஒன்று குவியலாகக் கிடந்தது. அதற்குக் கொஞ்ச தூரத்தில் மூன்றடி நீளச் சங்கிலி இரண்டு தொங்கிக் கொண்டிருந்தன. அதனருகே பரஞ்சோதியை அழைத்துச் சென்ற சுந்தர். அவரைச் சுவற்றோடு சேர்த்து சங்கிலியால் பிணைத்தான். பிறகு அவரது கைக்கட்டை அவிழ்த்து விட்டான். அவரிடம் ஒரு டார்ச் விளக்கையும் கொடுத்தான்.

“என்னை என்ன செய்வதாக உத்தேசம்?” என்று கேட்டார் பரஞ்சோதி.

“உங்களை இங்கேயே விட்டு விடுவோம் இந்தச் சுரங்கத்தில் ஏதோ ஒரு மிருகம் இருக்கிறது. அது உங்களைத் தின்றுவிடும்” என்று கூறியபொழுதே சுந்தரின் உடல் வெடவெடவென்று நடுங்கியது. திகிலோடு திரும்பி அந்த சாக்குக் குவியலைப் பார்த்தபடி பேச ஆரம்பித்தான்.

“போன வாரம் மனோகரை இங்கே கொண்டு வந்து கட்டி வைத்தோம். இரண்டு நாட்களுக்குப் பிறகு நாங்கள் வந்து பார்த்தபோது அவனது எலும்புகள் மட்டுமே இங்கே இருந்தன. அந்த சாக்குகளுக்கடியில் கிடப்பது மனோகரின் எலும்புகள்தான்” என்றான். பிறகு, “உங்களுக்கு நான் டார்ச் விளக்கு கொடுத்திருப்பது பாஸ்கருக்குத் தெரிந்தால் என்னைக் கொலை செய்து விடுவான். இருந்தபோதிலும் இன்னும் மூன்று நான்கு நாட்களுக¢கு அவன் இங்கே வரமாட்டான். நீங்கள் தப்பிச் செல்ல நான் அனுமதிக்க முடியாது, பரஞ்சோதி, உங்கள் உயிர் நற்கதி அடையவேண்டுமென்று நான் கடவுளைப் பிரார்த்திக்கிறேன்” என்று கூறியபடி அங்கிருந்து கிளம்பினான் சுந்தர்.

மனோகரைப் பற்றி சுந்தர் கூறியது உண்மைதானென்று பரஞ்சோதி புரிந்து கொண்டார். ஏனென்றால், தனது டார்ச் விளக்கின் ஒளியில் பார்த்தபோது சாக்குகளுக்கடியில் மனித எலும்புகள் கிடப்பதைப் பார்த்தார்.  ஒரு மனிதனை அப்படி சாப்பிடும் மிருகம் என்னவாக இருக்கும் என்று வியந்தபடி தனது டார்ச் விளக்கை அணைத்து வைத்துக் கொண்டார். அடுத்தாற்போல் என்ன செய்வதென்று யோசனையில் ஆழந்தவர் திடுக்கிட்டார். சில அடி து£ரத்தில் இரண்டு நெருப்புக் கோளங்கள் பயங்கரமாக ஜ்வாலை வீசின.

-இன்னும் வரும்...!

5 comments:

  1. பரஞ்சோதி நிச்ச்சயம் தப்பித்துவிடுவார் எனத் தெரிந்தாலும், அந்த இரண்டு நெருப்புக் கோளங்கள் என்ன என்று அறிய ஆவலுடன் காத்திருக்கிறேன்,

    ReplyDelete
  2. இப்போதான் முதல் முறை படிக்கறேன்.. நல்ல விறுவிறுப்பா போகுது.. பாஸ்கரால் கொல்லப்பட்ட மோகன் யாரு, சுந்தரால் கொல்லப்பட்ட சந்தியா யாரு, மனோகர் யாருன்னு எல்லாம் படிச்சுட்டு அப்புறம் பின்னூட்டம் போடுறேன்..

    ReplyDelete
  3. ராஜேஷ் குமார் நாவல் மாதிரி விறுவிறுப்பு - வாழ்த்துக்கள் அண்ணே...!

    ReplyDelete
  4. மிருகங்கள் இல்லை என்று தெரிந்து விட்டது... அதென்ன இரண்டு நெருப்புக் கோளங்கள்...? காத்திருக்கிறேன்...

    ReplyDelete
  5. விட்டுப்போனதையெல்லாம் ஒரே மூச்சாக வாசித்தேன். பரபரன்னு இருக்கு.

    அந்த ரெண்டு கண்கள் மியாவ்தானே?

    ReplyDelete