கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, April 22, 2013


                                                         13. கடைசி அத்தியாயம்

றுநாள் காலை இன்ஸ்பெக்டர் கதிர்வேலிடம் நடந்த விஷயங்களையெல்லாம் கூறினார் துப்பறியும் பரஞ்சோதி. எல்லாவற்யையும் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்த கதிர்வேல், தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தார். “நீங்கள் சொல்வதெல்லாம் நான் ஏற்றுக் கொள்கிறேன் பரஞ்சோதி. ஆனால் இப்பொழுது சுந்தர் எங்கே இருக்கிறான் என்று நீங்கள் கண்டுபிடித்தால்தான் நான் மேற்கொண்டு விசாரணையில் இறங்க முடியும்” என்றார்.

அவரிடம் மேற்கொண்டு பேசிப் பயனில்லை என்று புரிந்து கொண்ட பரஞ்சோதி, அங்கிருந்து கிளம்பினார். தமயந்தி, சுந்தருக்குப் புகலிடம் அளித்திருக்கக் கூடுமென்று அவருக்குத் தோன்றியது. எனவே அன்றிரவு தமயந்தியின் ஜாகைக்குச் சென்று சோதனை இடுவதென்று முடிவு செய்தார். அவர் தனது ஜாகையை அடைந்த பொழுது அவருக்காக சுசீலாவும் அகல்யாவும் காத்துக் கொண்டிருந்தனர். முதல் நாளிரவு அகல்யா, சுசீலாவின் ஜாகையில் தங்கியிருந்தாள். அவர்கள் இருவரிடமும் தன் திட்டத்தைப் பற்றிக் கூறினார் பரஞ¢சோதி.

மயந்தியின் வீட்டு கம்பவுண்ட் சுவரைத் தாண்டிக் குதித்தார் பரஞ்சோதி. எங்கும் ஒரே நிசப்தமாக இருந்தது. மாடியில் ஒரு அறையில் விளக்கு வெளிச்சம் தெரிந்தது. அந்த வீட்டிற்குள் எப்படி நுழைவதென்று சுற்றிலும் பார்த்தார் பரஞ்சோதி. அங்கே ஒரு பெரிய மாமரம் தன் கிளைகளைப் பரப்பியவாறு காட்சியளித்தது.  உடனே அதில் தாவி ஏறினார் பரஞ்சோதி, அதன் வழியாக விளக்கு வெளிச்சம் தெரிந்த ஜன்னலருகே நீண்டிருந்த கிளையில் ஊர்ந்து சென்றார். உள்ளே, கட்டிலில் படுத்தபடி ஏதோ பத்திரிகை படித்துக் கொண்டிருந்தான் சுந்தர்.

வேறொரு கிளைக்குத் தாவிய பரஞ்சோதி, ஒரு கம்பியில்லா ஜன்னலருகே ஊர்ந்து சென்று உள்ளே குதித்தார். அவர் குதித்த இடம் மோகன் கொலையுண்டிருந்த அறைதான். ஓசைப்படாமல் டெலிபோனருகே சென்ற பரஞ்சோதி, இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்கு டெலிபோன் செய்தார். பிறகு சுசீலாவுக்கு டெலிபோன் செய்து அகல்யாவைக் கூட்டி வரும்படிக¢ கூறிவிட்டு டெலிபோனைக் கீழே வைத்தார். அந்தச் சமயத்தில் யாரோ தடதடவென்று ஓடும் சத்தம் கேட்டது. அதைத் தொடர்ந்து ஒரு துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டது. பரஞ்சோதி அவசரம் அவசரமாக வெளியே ஓடினார். சுந்தர் படுத்திருந்த அறை வாசலில் தமயந்தி தேம்பியபடி நின்றுகொண்டிருந்தாள்.

பரஞ்சோதியைக் கண்டதும், "நீங்கள்தான் அவரை கொன்றுவிட்டீர்கள்! நான் எவ்வளவோ கஷ்டப்பட்டு திருப்பி அழைத்துக் கொண்டு வந்த என் சுந்தரைக் கொன்று விட்டீர்களே! நீங்கள் டெலிபோனில் பேசியதைக் கேட்டுத்தான் அவர் தற்கொலை செய்து கொண்டு விட்டார்" என்று சீறினாள்.

பரஞ்சோதி மௌனமாக சுந்தரின் பிணத்தையே பார்த்து கொண்டிருந்தார். அவர் மரத்தின் மேலிருந்து பார்த்தபோது சுந்தர் எப்படிப் படுத்திருந்தானோ அப்படியேதான் இப்பொழுதும் படுத்திருந்தான். அவன் எதற்காகத் தற்கொலை செய்து கொண்டான் என்று பரஞ்சோதிக்குப் புரியவில்லை.

சில நிமிஷங்களில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல் தனது போலீஸ் படையுடன் வந்து சேர்ந்தார். அவர் வந்த சில வினாடிகளுக்கெல்லாம் சுசீலாவும் அகல்யாவும் வந்து சேர்ந்தனர். "அகல்யா! நீ போய் அங்கே இறந்து கிடப்பது சுந்தர்தானா என்று பார்த்துச் சொல்" என்றார் பரஞ்சோதி.

"கூடாது! அவள் அங்கே போகக் கூடாது! என் சுந்தரை பார்க்க அவள் போகக் கூடாது. அவளை நிறுத்துங்கள்" என்று வீரிட்டாள் தமயந்தி. அவள் கை இப்பொழுது அவளது இடுப்பருகே சென்றது. அடுத்த வினாடி அவள் கையில் ஒரு துப்பாக்கி காட்சியளித்துக் கொண்டிருந்தது.

வினாடிகூடத் தாமதிக்காமல் பாய்ந்து அவள் கையிலிருந்த துப்பாக்கியைப் பிடுங்கினார் பரஞ்சோதி, அந்தப் போராட்டத்தில் வெடித்த குண்டு, அங்கிருந்த நிலைக் கண்ணாடியில் பாய்ந்து அதைத் தூள் தூளாக்கியது. "இவளைக் கைது செய்யுங்கள், இன்ஸ்பெக்டர்! இவள் தான் சுந்தரைக் கொலை செய்து விட்டாள்" என்றார் பரஞ்சோதி. அதேசமயம் இறந்து கிடந்த மனிதனின் அருகில் சென்று அவன் முகத்தைப் பார்த்த அகல்யா, ‘‘மனோகர்! சுந்தர் இல்லை இது! இவன் மனோகர்!’’ என்று வீறிட்டலறினாள்.

போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கதிர்வேல், பரஞ்சோதி, ராஜூ, அகல்யா, சுசீலா, தமயந்தி, மாணிக்கம் முதலியவர்கள் அமர்ந்திருந்தனர். தமயந்தி தலை கவிழ்ந்தவாறு அமர்ந்திருந்தாள். அகல்யா அழுது கொண்டிருந்தாள். பரஞசோதி பேச ஆரம்பித்தார்.

"கள்ளக் கடத்தலில் ஈடுபட்டிருந்த சுந்தரைத் திருமணம் செய்து கொண்டிருநதாள் அகல்யா. அவர்கள் குடும்பம் மகிழ்ச்சிகரமாகவே நடந்து வந்தது. ஆனால் ஒரு சமயம் சென்னைக்குச் சுந்தர் சென்றிருந்தபோது தமயந்தியைச் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டான். ஆனால் அப்பொழுது சுந்தருக்கு ஏற்கனவே ஒரு மனைவி இருப்பது தமயந்திக்கு தெரியாது.

பணக்காரியான தமயந்தியைத் திருமணம் செய்து கொண்டதும் கள்ளக் கடத்தல் பொருள்களை விற்பனை செய்வதை விட்டு விட்டு நல்லவனாக மாறிவிட வேண்டுமென்று துடித்தான் சுந்தர். ஆனால் அவன் நண்பர்களான பாஸ்கரும், மனோகரும் அவ்வாறு அவனை விடவில்லை. எனவே அவன் மீண்டும் தன் தொழிலில் இறங்கினான். அந்தச் சமயத்தில், சுந்தருக்கு முன்பே ஒரு மனைவி இருந்தது தமயந்திக்குத் தெரிந்து விட்டது. தன்னை சுந்தர் ஏமாற்றி விட்டதாகக் கொதித்துப் போயிருந்திருக்கிறாள். அதோடு ஒரு முறை அகல்யாவைச் சந்தித்து, சுந்தரை விவாகரத்து செய்து விடும்படியும் கூறி இருக்கிறாள். ஆனால், அதற்கு அகல்யா மறுத்து விட்டதாக மாணிக்கம் கூறினார்.

அதனால் வெறி கொண்ட தமயந்தி, சுந்தர் தனக்கும் இல்லாமல் அகல்யாவுக்கும் இல்லாமல் போகட்டுமென்று முடிவு செய்திருக்கிறாள். எனவே பாஸ்கரிடம் மூன்று லட்ச ரூபாய் கொடுத்து சுந்தரைக் கொன்று விடும்படி கூறி இருக்கிறாள். ஆனால் சுந்தரைக் கொல்ல பாஸ்கர் விரும்பவில்லை. எனவே சுந்தர் கடத்தப்பட்டு விட்டதாக ஒரு நாடகம் ஆடவேண்டுமென்று கூறி இருக்கிறான் பாஸ்கர். அதன் விளைவாக சுந்தரை பாழடைந்த மாளிகையின் சுரங்க அறையில் சங்கிலியால் கட்டி வைத்து விட்டு, மனோகர், சுந்தராக நடித்து எனக்கு டெலிபோன் செய்தான். நான் அதை நம்பினேன்.

எனக்கு மனோகர் டெலிபோன் செய்துகொண்டிருந்தபோது உள்ளே வந்துவிட்ட மோகன், மனோகரை மிரட்டி இருக்கிறான், அதைக் கண்ட மனோகர், அவனை உடனே சுட்டுக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பி ஒடிவிட்டான். மனோகருக்கிருந்த மன பதைபதைப்பில் தன் மனைவியிடம் எல்லாவற்றையும் கூறி இருக்கிறான். அவற்றை எங்களிடம் கூறி விடுவதாக பவானி கூறிய பொழுதுதான், கடைப்பையன் ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்து பாஸ்கருக்கு டெலிபோன் செய்து விட்டான். அதனால் தன் குட்டு வெளி வந்து விடுமே என்று பயந்த பாஸ்கர் பவானியைக் கொன்று விட்டான்.

ஒரு சமயம் என் உயிரை பாஸ்கரிடமிருந்து காப்பாற்றிய சங்கர் மீது எல்லா பழியும் விழ வேண்டுமென்று நினைத்த பாஸ்கர், அதற்கு வேண்டிய தடயங்களை சங்கரின் அறையில் வைத்தான். அதற்கு உடந்தையாக இருந்தாள் சந்தியா. ஆனால் அன்றிரவே அவளும் கொலை செய்யப்பட்டு விட்டாள்.

இரண்டு மூன்று நாட்கள் கழித்து அவர்கள் சென்று சுந்தரைப் பார்த்தபொழுது அங்கு அவன் எலும்புகள்தான் இருந்தன. சுரங்கத்தில் குடியேறி இருந்த ராட்சஸ எலிகள் அவனைத் தின்று விட்டன. இந்தக் காட்சியைக் கண்டதும் வெலவெலத்துப் போனான் பாஸ்கர். இருந்தபோதிலும், தமயந்திக்கு டெலிபோன் செய்து வேலை முடிந்து விட்டதென்று கூறி, என்னை இந்த விவகாரத்திலிருந்து விலகி விடும்படிக் கூறி வற்புறுத்தி இருக்கிறான். அதன் விளைவாகத் தான் தமயந்தி எனது ஆபிசிற்கு வந்து ஒரு நாடகம் ஆடி இருக்கிறாள்.

இந்தச் சமயத்தில், மனோகரை சுந்தராக நடிக்கும்படி கூறி இருக்கிறாள் தமயந்தி. ஏனென்றால் திடீரென்று சுந்தர் என்னவானான் என்று யாராவது கேள்வி கேட்டால் தான் மாட்டிக் கொள்ளாமலிருக்க வேண்டுமென்று! அதோடு சுந்தரை யாருமே பார்த்ததில்லை.

ஏனென்றால் தமயந்தி அவனை ரகசியமாகத்தான் ரெஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டாள். அதற்கு சாட்சிக் கையெழுத்துப் போட்டவர்களில் கார் டிரைவர் ஒருவன், மோகன் ஒருவன், மூன்றாவது நபர் மாணிக்கம்தான். கார் டிரைவர் ஒரு விபத்தில் இறந்து விட்டான். மோகனை மனோகர் கொலை செய்து விட்டான். மாணிக்கம் தான் உண்டு தன் வேலை உண்டு என்றிருப்பவராதலால் அவரைப் பற்றி அவள் கவலைப்படவில்லை.

இந்தச் சமயத்தில் எனது குறுக்கீடு அவளைச் சங்கடத்தில் ஆழ்த்தியது. எனவே பாஸ்கரிடம் சொல்லி என்னையும் ஒழித்துக் கட்டி விடும்படிக் கூறினாள். எனக்கு உதவி செய்த கட்டிடக் காவல்காரனான வேணுவையும் கொலை செய்து விட்டான் பாஸ்கர். என்னையும் கொண்டு போய் சுந்தரை அடைத்த அறையிலேயே அடைத்து விட்டான். ஆனால் அதைக் கவனித்த அகல்யா, என் காரியதரிசி சுசீலாவுக்கு டெலிபோன் செய்து விட்டாள். எனவே நானும் எலிகளுக்கு இரையாகாமல் தப்பினேன். அந்தச் சமயத்தில் தான் நான் அகல்யாவின் ஆட்களிடமும், சுசீலா பாஸ்கரிடமும் அகப்பட்டுக் கொண்டோம்.

அப்பொழுதுதான் நான் அகல்யாவை மீண்டும் சந்தித்து அவள் மூலம் பல தகவல்களைப் பெற்றேன். இதற்குள் பாஸ்கரின் ஆட்களுக்கும் அகல்யாவின் ஆட்களுக்கும் சண்டை ஏற்பட்டு எல்லோரும் மடிந்து விட்டனர். நானும் அகல்யாவும் தப்பி வரும்போதுதான் சுசீலாவை மீட்டோம். எங்களை முதல் நாள் துரத்தி வந்த எலிகளைத் தடுப்பதற்காக நாங்கள் பாஸ்கரின் கள்ளிப் பெட்டிகளைப் பயன்படுத்தி அந்த சுரங்க அறையின் வாயிலை மூடினோம். பாஸ்கர் அந்தக் கள்ளிப் பெட்டிகளை எடுக்கவே அதற்குப் பின்னாலிருந்த எலிகளெல்லாம் வெளியே வந்து பாஸ்கரையும் அவன் ஆட்களையும் அடித்துக் குதறித்தின்று விட்டன. சுசீலாவை அவன் தடுத்திருக்காவிட்டால், அவனும் அவன் கூட்டத்தினரும் உயிரோடு தப்பி இருக்கலாம்.

மறுநாள் காலை நான் வந்து உங்களிடம் சில விவரங்களை மட்டும் கூறினேன். இன்ஸ்பெக்டர். ஆனால் நீங்கள் சுந்தரைக் கண்டுபிடிக்க வேண்டுமென்று கூறினீர்கள். எனக்கு சுந்தர் ஏற்கனவே இறந்து விட்டது அப்பொழுது தெரியாது. அகல்யா வந்து பிணத்தை அடையாளம் கூறியபொழுதுதான், நான் அங்கு நடந்திருந்த ஆள் மாறாட்டத்தைக் கண்டு பிடித்தேன்.

நான் தமயந்தியின் வீட்டிலிருந்து உங்களுக்கு டெலிபோன் செய்தபொழுது அதை ஒட்டுக் கேட்டுக் கொண்டிருந்த தமயந்தி மனோகர் மனம் மாறி போலீஸ் தரப்பு சாட்சியாக மாறிவிடுவானோ என்று நினைத்து அவனைக் கொலை செய்து விட்டாள். அதைத் தற்கொலையாக மாற்றுவதற்கு அவள் முயன்றபோதிலும், மனோகரின் கையிலிருந்த செய்திதாளும் அவன் வாயிற்படியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்ததும், அது கொலையாக இருக்குமென்று எனக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதோடு மட்டுமல்லாமல் அவன் தற்கொலை செய்து கொண்டிருந்தால் அவன் கையிலோ கீழேயோ துப்பாக்கிக் கிடந்திருக்கும். ஆனால் அங்கே துப்பாக்கியையே காணோம்.
 
அகல்யாவைச் சுட்டுக் கொல்ல தமயந்தி முயன்றபொழுது நான் அவள் கையிலிருந்து கைப்பற்றிய துப்பாக்கியிலிருந்து இரண்டு குண்டுகள் வெடிக்கப்ட்டிருந்தன. ஒன்று கண்ணாடியில் பாய்ந்ததை நீங்களே பார்த்தீர்கள். மற்றொன்று மனோகரின் பிரேதத்திலிருந்து எடுக்கப்பட்டது. தமயந்தி, மனோகரை சுட்ட உடனேயே நான் சென்றுவிட்டதால், துப்பாக்கியை அவள் தன் இடுப்பில் செருகிக் கொண்டாள். இல்லாவிட்டால் அவள் கொலை செய்ததை நாம் கண்டு பிடித்து இருக்க முடியாது. அகல்யா மனோகரை அடையாளம் கண்டுபிடித்து விடுவாள் என்றுதான் அவளைத் தடுக்க முயன்றாள் தமயந்தி, ஆனால் தமயந்தியின் திட்டம் இந்த இடத்தில் பலிக்கவில்லை. இதுதான் நடந்தது" என்று நிறுத்தினார் பரஞ்சோதி.

அங்கு சிறிது நேரம் மௌனம் நிலவியது. அகல்யா விசும்பிக் கொண்டிருந்தாள். சுசீலா அவளைச் சமாதானப்படுத்த முயன்று கொண்டிருந்தாள். "சுந்தரின் போட்டோ ஏதாவது உன்னிடமிருக்கிறதா?" என்று தமயந்தியைப் பார்த்துக் கேட்டார் இன்ஸ்பெக்டர் கதிர்வேல்.

"இல்லை" என்றாள் தமயந்தி.

"என்னிடமிருக்கிறது" என்று கூறிய அகல்யா, ஒரு புகைப்படத்தை எடுத்து கதிர்வேலிடம் கொடுத்தாள்.

அந்தப் புகைப்படத்தில் காணப்பட்ட இளைஞனைக் கண்டதும் பிரமை தட்டிப் போய்விட்டார் கதிர்வேல். அந்த இளைஞனின் முகம் மிக அழகாக இருந்தது. அவனது சுருட்டை முடி, அவன் நெற்றியில் வந்து விழுந்திருந்தது. அவனது கண்கள், அறிவுக்களை வீசின. அவனை இரு பெண்களும் காதலித்ததில் வியப்பில்லை என்று அவருக்குத் தோன்றியது. அவனைக் கொலை செய்யச் சொல்லும் அளவுக்கு தமயந்திக்கு எப்படி மனம் வந்ததென்று இன்ஸ்பெக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு தமயந்தியின் மேல் ஆத்திரமும் வெறுப்பும் கொண்டனர்.

"என் கணவர் இன்னொருத்திக்கு உரியவர் என்று நினைத்ததும் என்னால் என் ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை" என்று உணர்ச்சியற்ற குரலில் கூறினாள் தமயந்தி.

"அந்த ஆத்திரம் அகல்யாவுக்கு ஏற்பட்டிருந்தால் அது நியாயமானதாக இருந்திருக்கும்" என்றான் ராஜூ.

அந்த சமயத்தில் உள்ளே வந்த இரண்டு போலீஸ்காரர்கள் பாஸ்கர் கும்பலுடைய எலும்புகளையெல்லாம் கைப்பற்றி விட்டாதாகவும் அந்த எலிகளை ஒழிக்க ஆலோசனை நடப்பதாகவும் கூறினார்கள். எல்லோருடைய கவனமும், போலீஸ் கான்ஸ்டபிள்கள் கூறியவற்றில் லயித்திருந்தபோது, சட்டென்று தனது வைர மோதிரத்தைக் கடித்து விழுங்கி விட்டாள் தமயந்தி.

"தமயந்தி! என்ன காரியம் செய்து விட்டாய்?" என்று பதறினார் மாணிக்கம். சில நிமிஷங்களில் அவள் உயிர் பிரிந்தது.

                                                                 --- நிறைவு ---

10 comments:

  1. எத்தனை ஆள்மாறாட்டம்...!
    கொலை செய்த குற்றத்தினால்...
    முடிவு இப்படி ஆகி விட்டதே...

    ReplyDelete
    Replies
    1. ஆசை அதிகமாவதன் விளைவுதான் இப்படியெல்லாம் குற்றங்கள்! நமக்குக் கிடைப்பதோ நல்ல த்ரில்லர்!‘ ரசித்துப் படித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  2. ஒரு கொலையை மறைக்க எத்தனை கொலைகள்!!!!

    வைரமோதிரம் இப்படி வேஸ்டாப் போச்சே:(

    ReplyDelete
    Replies
    1. ‌கரெக்ட் டீச்சர்1 தப்பு பண்ண ஆரம்பிச்சுட்டா, ஒண்ணு மேல ஒண்ணா வளர்ந்துட்டோதான் போகுதுல்ல..! இந்த க்ரைம் கதைய முழுமையாப் படிச்சு ரசிச்ச உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete
  3. அடடா... கடைசியில் போலீஸுக்கு வேலையில்லாமல் குற்றவாளிகள் அனைவருமே இறந்து விட்டார்களே.....

    விறுவிறுப்பு குறையாமல் ஒவ்வொரு பகுதியும் சென்றது நன்று.

    கதையினை விரும்பிப் படித்தேன் - தங்களது பகிர்வுகளின் வாயிலாக. மிக்க நன்றி கணேஷ்.....

    ReplyDelete
    Replies
    1. க்ளைமாக்ஸ்ல போலீஸ் அரெஸ்ட் இருக்கற சினிமாக்கள் வந்த நாள்ல இந்தக் கதைலயும் அது வேணாமேன்னு தவிர்த்துட்டார் போலருக்கு கதாசிரியர். முழுமையாகப் படித்து ரசித்த உங்களுக்கு என் உளம்க கனிந்த நன்றி!

      Delete
  4. பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது, மேதாவி, சிரஞ்சீவி போன்றோரின் துப்பறியும் கதைகள் அநேகம் படித்திருக்கிறேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு மேதாவி அவர்களின் கதையைப் படிக்க வாய்ப்பு தந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
    Replies
    1. சிறு வயது நினைவைப் புதுப்பி்த்து இந்த த்ரில்லரை முழுமையாகப் படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  5. எதிர் பாரா திருப்பங்கள்! முடிவு அருமை!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஐயா! அடுத்தடுத்த திருப்பங்களும், அதனால் ஏறும் விறுவிறுப்பும், எதிர்பாராத முடிவும்தான் என்னை ரசித்துப் பகிர வைத்தது. இங்கே படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

      Delete