கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Thursday, April 18, 2013

                                             11. காட்டில் கண்ட கட்டழகி

ந்தப் பொறிக் கதவு இருந்தஇடத்தில் ஒரு வழி தோன்றியது. அங்கிருந்து குளிர்க் காற்றும் வெளிச்சமும் வந்தன. பரஞ்சோதி மெதுவாக அதன் வழியாக நடக்க ஆரம்பித்தார். அவரைத் தொடர்ந்து சுசீலாவும் சென்றாள். கொஞ்ச தூரம் சென்றதும், பாழடைந்த மாளிகையின் பின் பக்கம் வந்து சேர்ந்தனர். அப்பொழுது பிற்பகல் மூன்று மணியாகியிருந்தது. அங்கு சிறிது தூரத்தில் ஒரு லாரியிலிருந்து சிலர் இறங்குவதைக் கண்டனர்.

‘‘அவர்கள் எல்லோரும் பாஸ்கரின் ஆட்களாக இருப்பார்கள் போலிருக்கிறது. நீ இங்கேயே பதுங்கிக் கொள் சுசீலா! நான் காட்டுப் பக்கம் ஓடப் போகிறேன். அந்த ஆட்கள் என்னைத் துரத்துவதிலேயே கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு நீ சோலைப்பாக்கம் நோக்கி ஓடி, எப்படியாவது போலீசாருக்குத் தகவல் கொடுத்து விடு’’ என்று கூறி விட்டு சட்டென்று ஓட ஆரம்பித்தார். அந்த லாரியில் வந்த ஆட்கள் பரஞ்சோதியைப் பார்த்து விட்டனர். உடனே அவரைத் துரத்த ஆரம்பித்தனர். பரஞ்சோதி திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஓடிக் கொண்டிருந்தார்.

அவரைச் சுமார் ஐந்து பேர் துரத்திக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களால் பரஞ்சோதியின் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. இருந்த போதிலும் அவரை விடாமல் துரத்தினர். பரஞ்சோதி மரங்களுக்கிடையில் புகுந்து புகுந்து வளைந்து ஓடிக் கொண்டிருந்தார். தன்னை இவர்கள் பிடிப்பதற்கு முன்னர் சுசீலா அந்த இடத்தை விட்டுத் தப்பி விட வேண்டுமென்று என்று விரும்பினார் பரஞ்சோதி. எனவே தன்னால் முயன்ற அளவு வேகமாக அங்கிருந்த மரங்களை வட்டமிட்டு ஓடினார்.

சுமார் அரை மணி நேரம் இவ்வாறு ஓடிய பரஞ்சோதி மிகவும் களைத்து விட்டார். மெதுவாகத் திரும்பிப் பார்த்தார். அவரைத் துரத்திய ஆட்களில் நான்கு பேரைக் காணவில்லை. ஒரே ஒருவன் மட்டும் ஓடிக் கொண்டிருந்தான். பரஞ்சோதியினால் தொடர்ந்து ஓட முடியவில்லை. முதல் நாளிரவு உணவும் அவர் சாப்பிடவில்லையாதலால் அவர் மிகவும் சோர்ந்து போயிருந்தார். எனவே தள்ளாடியபடி ஒரு இடத்தில் அமர்ந்து விட்டார். இதற்குள் அந்த மனிதன் அவரை நெருங்கி விட்டான். அவனுக்கு மூச்சு வாங்கியது. அவரருகில் அவனும் அமர்ந்து விட்டான். சில வினாடிகள் இருவரும் ஒன்றும் பேசவில்லை.

வாட்டசாட்டமாக இருந்த அந்த மனிதன், தனது சட்டைப் பையிலிருந்து ஒரு சிகரெட் பெட்டியை எடுத்து ஒரு சிகரெட்டை உருவிப் பற்ற வைத்துக் கொண்டான். பிறகு பரஞ்சோதிக்கும் ஒரு சிகரெட் கொடுத்தான். ‘‘எதற்காக இப்படி தலை தெறிக்க ஓடினாய்?’’ என்று கேட்டான் இந்த மனிதன்.

‘‘நான் எவ்வளவு வேகமாக ஓடுகிறேன் என்பதை பரீட்சை செய்து பார்த்துக் கொள்வதற்காகத்தான் ஓடினேன்’’ என்று புன்னகையோடு கூறிய பரஞ்சோதி, ‘‘நீ ஏன் என்னை துரத்தினாய்?’’ என்று கேட்டார்.

‘‘நீ ஏதோ திருட்டுக் காரியத்தில் இறங்கி இருக்கிறாய் என்று நினைத்தேன். அதனால்தான் உன்னைத் துரத்தினேன்’’ என்று கூறிய அந்த மனிதன், ‘‘வா, நாம் போகலாம்’’ என்று கூறியபடி எழுந்தான். பரஞ்சோதியும் அவனோடு எழுந்து நடந்தார். அதன் பிறகு இருவரும் ஒன்றும் பேசவில்லை. கொஞ்ச தூரம் நடந்து சென்றதும், ஒரு பாறையின் இறக்கத்தில் ஒரு வீடு அமைக்கப்பட்டிருப்பதைப் பார்த்தார் பரஞ்சோதி. அவரோடு வந்த அந்த மனிதன் அவரை அந்த வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். இருவரும் உள்ளே நுழைந்த போது, ஒரு பெண் அவர்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்று கொணடிருந்தாள். அவர்கள் காலடியோசயைக் கேட்டு சட்டென்று திரும்பினாள் அந்தக் கட்டழகி. அவளைக் கண்டதும்  பிரமை தட்டிப் போனார் பரஞ்சோதி.

                                                          12. பயங்கர முடிவு

‘‘பிரமை தட்டிப் போய்விட்டீர்களா, பரஞ்சோதி?” என்று ஒயிலாகக் கேட்டாள் அந்தப்  பெண்.

“உன்னை இந்த இடத்தில சந்திப்போனென்று நான் கனவு கூட காணவில்லை, அகல்யா” என்று கூற¤ய பரஞ்சோதி, “நீதான் சுசீலாவுக்கு டெலிபோன் செய்தாயா?” என்று கேட்டார்.

“ஆமாம்! உங்களை யாரோ ஒரு மனிதன் கொண்டு வந்து கையைக் கட்டி இழுத்துச் செல்வதைப் பார்த்தேன் . ஆனால் அந்த மனிதன் யாரென்று நான் சரியாகக்  கவனிக்கவில்லை” என்றாள் அகல்யா.

“அவன் தான் சுந்தர்!”

“என்ன? என் சுந்தரா?” என்று சட்டென்று கேட்டாள் அகல்யா.

“உன் சுந்தரா?” என்று வியப்போடு கேட்டார் பரஞ்சோதி.

“ஆமாம்” என்று எங்கோ பார்த்தபடி கூறிய அகல்யா, “அவர் என் கணவர்” என்றாள். “அவன் தான் தமயந்தியை மணந்து கொண்டிருக¢கிறானே?” என்று சந்தேகத்துடன் கேட்டார் அவர்.

“அவர் முதலில் என்னைத்தான் திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு ஒருசமயம் சென்னைக்குச் சென்றிருந்தபோது தமயந்தியைப் பார்த்துக் காதல் கொண்டார். அவளும் அவரை விரும்பியதால் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். முதல் மனைவி நான் இருக்கும்பொழுது அவர் இரண்டாந் திருமணம் செய்து கொண்டது சட்டப்படி செல்லாதென்றபோதிலும், அவர் மகிழச்சியில் அக்கறை கொண்ட நான், அவருக்காக விட்டுக் கொடுத்தேன். இருந்தபோதிலும் அவர் என்னை வந்து சந்தித்துக் கொண்டுதானிருந்தார். அன்றிரவு நான் உங்களைச் சந்தித்த பொழுதும் அவர் என்னை வரச் சொல்ல இருந்ததின் பேரில்தான் நான் அங்கு வந்தேன். ஆனால் அவரைச் சந்திக்க முடியாமல் போய்விட்டது” என்று நிறுத்தினாள் அகல்யா.

“சுந்தர் கள்ளக் கடத்தல் செய்பவனென்று உனக¢குத் தெரியுமா?”

“தெரியும்! ஆனால் அவருக்கும் தமயந்திக்கும் திருமணமான பிறகு அவர் அநத்த் தொழிலிலிருந்து விலகிவிட எண்ணினார். ஆனால் பாஸ்கருக்கு அதில் சிறிதும் விருப்பமில்லை. எனவே அடிக்கடி சுந்தருடன் அவனுக்குத் தகராறு ஏற்பட்டது. இருந்தபோதிலும் இருவரும் பிறகு ஒற்றுமையாகி விட்டார்கள்” என்றாள் அகல்யா. பிறகு, இதுவரை அங்கே ஒரு மூலையில் நின்று கொண்டிருந்த, பரஞ்சோதியோடு வந்த மனிதனை நோக்கி, “ராஜவேல்! பாஸ்கர் அங்கே என்ன செய்து கொண்டிருக்கிறானென்று நமது ஆட்களை விட்டுக் கவனிக்கச் சொல்” என்று கூறிய அகல்யா, “இவர் எந்த திசையில் ஓடிக் கொண்டிருந்தார்?” என்று கேட்டாள்.

“காட்டுப் பக்கம் ஓடிக் கொண்டிருந்தார்,”

“இவரோடு வேறுயாராவது இருந்தனரா?”

“இல்லை!”

“உன்னிடமிருந்து இவர் தப்ப வேண்டுமென்று எண்ணியிருந்தால் இவர் சோலைப்பாக்கம் நோக்கி ஓடாமல் எதற்காக காட்டை நோக்கி ஓடினார்?”

“அதுதான் எனக்கும் தெரியவில்லை” என்று ஒப்புக¢ கொண்டான் ராஜவேல். “அவரோடு இருந்த வேறு யாரோ தப்பிச் செல்வதற்காகத்தான் இவர் உங்களுக்கெல்லாம் போக்குக் காட்டியபடி காட்டை நோக்கி ஒடி இருக்கிறார்” என்று கூறிய அகல்யா, பரஞ்சோதியின் பக்கம் திரும்பி, “அப்படித்தானே?” என்று கேட்டாள். “ஆமாம்” என்றார் பரஞ்சோதி. அந்தச் சமயத்தில் வேகமாக ஒரு மனிதன் உள்ளே வந்தான். “என்ன விஷயம், பவானந்தம்?” என்று கேட்டாள் அகல்யா.

“நம் வீட்டைச் சுற்றிலும் பாஸ்கரின் ஆட்கள் இருக்கிறார்கள்! எல்லோரும் துப்பாக்கிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றான் பவானந்தம். “நமது ஆட்களை மறைந்திருந்து அவர்களது முன்னேற்றத்தைக் கண்காணிக்கச் சொல்” என்ற அகல்யா வேகமாக உள் அறையை நோக்கி நடந்தாள். சில நிமிஷங்களில் அவள் திரும்பி வந்தபொழுது அவள் கையில் ஒரு டிரே இருந்தது. அதில் பிஸ்கட்டுகளும். ரொட்டிகளும், சர்க்கரையும், ஒரு கோப்பை தேநீரும் இருந்தன அவற்றை மேஜை மீது வைத்த அகல்யா பரஞ்சோதியைச் சாப்பிடும்படி கூறினாள். ரொம்பப் பசியோடு இருந்த பரஞ்சோதி அவற்றை சாப்பிட்டு முடித்தார். அதற்குள் அவரது துப்பாக்கியில் குறைந்திருந்த குண்டுகளைப் போட்டு நிரப்பினாள்.

ந்தச் சமயத்தில் உள்ளே வந்த ராஜவேல், “அவர்கள் நம் ஆட்களை நோக்கிச் சுடுகிறார்கள். நம்மிடம் இருக்கும் சொற்ப ஆட்களை வைத்துக் கொண்டு அவர்களைச் சமாளிப்பது கஷ்டம் அதனால் நீங்கள் இருவரும் எப்படியாவது இங்கிருந்து தப்பிச் சென்று விடுங்கள்” என்றான். ‘‘அது முடியாத காரியம் ராஜவேல்!” என்று கூறிய அகல்யா “நானும் வருகிறேன். நாம் எப்படியும் சமாளித்து விடலாம்” என்றாள். அதற்குள் பரஞ்சோதி அவசர அவசரமாகக் கதவருகே சென்று நிலவரம் எப்படி இருக்கிறதென்று பார்த்தார். வெளியே சுமார் பதினைந்து பேர் புதர்களின் மறைவில் அமர்ந்தபடி வீட்டையே கண்காணித்துக் கொண்டிருந்தனர்
.
எங்கிருந்து சுட்டால் அவர்களை முறியடிக்க முடியுமென்பதை அறிந்த பரஞ்சோதி, அகல்யாவின் ஆட்களை ஒவ்வொரு இடத்தில் உட்கார வைத்து, எந்தத் திசையில் சுடவேண்டுமென்பதையும் கூறினார். பிறகு அந்த வீட்டின் ஜன்னல் ஒன்றின் வழியாக வெளியே சுட்டார். அதைத் தொடர்ந்து பயங்கரமான பல துப்பாக்கி வெடிச்சத்தங்கள் கேட்டன. இருதரப்பு ஆட்களும் மாறி மாறி சுட்டனர். சிலர் பயங்கரமாக ஒலமிட்டு அலறித் துடித்த சத்தமும் கேட்டது. பரஞ்சோதி, அகல்யா இருந்த இடத்திற்கு வேகமாக ஓடி வந்து, “நீ உன் உடமைகளையெல்லாம் ஒரு சிறு பெட்டியில் அடைத்துக¢ கொள், அகல்யா! நாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் இங்கிருந்து கிளம்ப வேண்டும்” என்றார்.

உடனே அகல்யா உள் அறையை நோக்கி ஒடினாள். சில நிமிஷங்களில் தனது பொருள்களையெல்லாம் ஒரு பெட்டியில் வைத்து அடைத்துக் கொண்டு வெளியே எடுத்து வந்தாள். அதற்குள் வெளியே எல்லா சத்தமும் ஓய்ந்து விட்டிருந்தது. வெளியே வந்து எட்டிப் பார்த்தார் பரஞ்சோதி. அகல்யாவின் ஆட்கள் எல்லோருமே இறந்து விட்டிருந்தார்கள். பாஸ்கரின் ஆட்களில் பலர் இறந்து விட்டனர். சிலர் குற்றுயிராய்க் கிடந்தனர். அவர்களைச் சோதித்துப் பார்த்தார் பரஞ்சோதி. அவர்களுக்குச் சிகிச்சை செய்தாலும் அவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்பது தெரிந்துவிட்டது.

அங்கிருந்து அகல்யாவை அழைத்துக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தார் பரஞ்சோதி. கொஞ்ச தூரம் சென்றதும் கீழே ஏதோ வெளிச்சம் தெரிவதைப் பார்த்தார். அவர்கள் இருவரும் இன்னும் கொஞ்ச தூரம் நெருங்கியதும் கீழே காஸ் லைட்களை வைத்துக் கொண்டு பாஸ்கர் தனது ஆட்களை விட்டு கள்ளிப் பெட்டிகளைக் கொண்டு வருவதைப் பார்த்தார். அவர்களுக்கு சில கஜ தூரத்தில் ஒரு லாரி நின்று கொண்டு இருந்தது.  “லாரியிலிருந்து யாரோ ஒரு பெண்ணின் புடவை பறக்கிறது” என்றாள் அகல்யா.

“அடக்கடவுளே! அது சுசீலாதான்!” என்று கூறிய பரஞ்சோதி, “நீ இங்கேயே இரு. நான் போய் அவளைக் கூட்டி வருகிறேன்” என்று கூறிவிட்டு அவள் பதிலுக்குக்கூட காத்திராமல் வேகமாக லாரியை நோக்கிச் சென்றார். யாரோ வரும் அரவம் கேட்டு சுசீலா திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தாள். அவள் வாயில் ஒரு துணிப்பந்து திணிக்கப்பட்டிருந்தது வேகமாக அவளருகே சென்ற பரஞ்சோதி அவள் வாயிலிருந்து துணிப்பந்தை எடுத¢து வெளியே எறிந்துவிட்டு, அவள் கைகளையும் கால்களையும் பிணித்திருந்த கயிறுகளையும் அவிழ்த்து விட்டு தானும் கீழே குதித்தார். பிறகு இருவரும் அகல்யா இருந¢த இடத்துக்குச் சென்றனர். அகல்யாவையும், சுசீலாவையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்தி வைத்தார்.

“நீ எப்படி இவர்களிடம் அகப்பட்டுக் கொண்டாய் சுசீலா?” என்று கேட்டார் பரஞ்சோதி. “நான் போகும்போது வழியில் பாஸ்கரின் ஆட்கள் என்னை பார்த்து விட்டனர். உடனே என்னைப் பிடித்துக் கட்டி வைத்து விட்டனர்.” என்றாள். அந்தச் சமயத்தில் ஏதோ சத்தம் கேட்டது. உடனே மூவரும் திரும்பி, தங்களுக்கு ஐம்பது கஜ தூரத்தில் கீழே என்ன நடக்கிறதென்று பார்த்தனர்.  அங்கே, சுரங்கப் பாதையிலிருந்து சில ஆட்கள் பயங்கரமாகக் கத்தியபடி வெளியே ஓடி வந்தனர். சிலரின் உடலில் காயம் ஏற்பட்டு இரத்தம் கசிந்து கொண்டிருந்தது.

அவர்களையெல்லாம் வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்தான் பாஸ்கர். ஆனால் அதே சமயத்தில ஆயிரக்கணக்கில் ராட்சஸ எலிகள் வெளியே ஓடிவந்து பாஸ்கரின் கும்பலைச் சூழ்ந்து கொண்டது. அவைகளிடமிருந்து யாருமே தப்பிக்க முடியவில்லை. சில வினாடிகளில் அவர்கள் எல்லோரையும் கீழே தள்ளிக் குதற ஆரம்பித்தன அந்த வெறி கொண்ட எலிகள்.

தங்களையும் மீறி அலறிவிடாமலிருக்க அகல்யாவும் சுசீலாவும் தங்கள் புடவைத் தலைப்பைச் சுருட்டித் தங்கள் வாயை மூடிக் கொண்டனர். பரஞ¢சோதிக்கு அந்தக் காட்சியைக் காண சகிக்கவில்லை. “சீக்கிரம் கிளம்புங்கள். அவை இங்கும் வந்துவிடும்” என்று கூறியபடி அகல்யாவின் பெட்டியைத் தூக்கிக் கொண்டு அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தார் பரஞ்சோதி. சுசீலாவும் அகல்யாவும் அவரைப் பின் தொடர்ந்தனர். பாஸ்கரின் கூட்டத்தினர் எழுப்பிய மரண ஓலம் அந்தப் பகுதி எங்கும் எதிரொலித்தது.

                             -‘திடுக்’ க்ளைமாக்சுடன் அடுத்த பகுதியில் முடிகிறது...!

5 comments:

  1. ஜெட் ஸ்பீடாப் போகுதே!!!

    ReplyDelete
  2. நிறைவுப் பகுதிக்கு காத்திருக்கிறேன்,

    ReplyDelete
  3. படித்தேன் விறுவிறுப்பை ரசித்தேன்

    ReplyDelete
  4. நல்ல விறுவிறுப்பு... 'திடுக்'யை ஆவலுடன் எதிர்ப்பார்க்கிறேன்...

    ReplyDelete
  5. நல்ல விறுவிறுப்பு. இனிமேல் தான் க்ளைமேக்ஸ்? காத்திருக்கிறேன் கணேஷ்....

    ReplyDelete