கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, March 27, 2013

உங்களுக்காக அடுத்த படக்கதையை ரெடி பண்ணிட்டிருக்கேன். சுலபமா படிக்கற மாதிரி செய்யறதுக்கு டயம் எடுக்கறதால இந்த ரெண்டு அத்தியாயங்களையும் இப்ப தந்திருக்கேன். அடுத்து படக்கதையோட வர்றேன்...!

                                          5. டெலிபோனில் ஒலித்த மர்மக் குரல்

ன்னைப் பார்ப்பதற்கு ஒரு அழகிய பெண் வந்து காத்துக் கொண்டிருப்பதாக ராஜு கூறியதும், அவள் யாராக இருக்கக் கூடுமென்று எண்ணி வியந்தபடி தனது ஆபீஸ் அறைக்குச் சென்றார் பரஞ்சோதி. அப்பொழுது பிற்பகல் மூன்று மணி. அந்தப் பெண் பரஞ்சோதியைக் கண்டதும் எழுந்து நின்றாள். அவள் பேரழகியாகவே இருந்தாள். அவளை இதற்கு முன்பு பரஞ்சோதி பார்த்ததில்லை. அவள் அழுததற்கடையாளமாக அவள் கண்கள் சிவந்திருந்தன.

‘‘நீங்கள் துப்பறியும் பரஞ்சோதி தானே?’’ என்று கேட்ட அந்தப் பெண், ‘‘என் பெயர் லீலா. நான் இன்னும் சில நாட்களில் சங்கரை - உங்களை பாஸ்கரிடமிருந்து காப்பாற்றியவரை... மணந்து கொள்ளப் போகிறேன். ஆனால் அரை மணி நேரத்திற்கு முன்னால் சுந்தர் கடத்தல் சம்பந்தமாக அவரைப் போலீசார் கைது செய்து அழைத்துக் கொண்டு போய் விட்டார்கள். போலீஸ் லாரியில் மாற்றப்படுவதற்கு முன் உங்கள் விலாசத்தைக் கூறி, உங்களைப் பற்றியும் கூறி என்னை, இந்த விஷயத்தை உங்களிடம் தெரியப்படுத்தும்படி கூறினார்.’’ என்றாள்.

‘‘அவன் நிரபராதி என்று உனக்குத் தெரியுமா?’’ என்று கேட்டார் பரஞ்சோதி. ‘‘நிச்சயமாகத் தெரியும்’’என்றாள் லீலா. அவள் கண்களில் கண்ணீர் வழிய ஆரம்பித்திருந்தது. அதைத் தன் கைக்குட்டையால் துடைத்துக் கொண்டாள்.
‘‘நான் இதைப் பற்றி விசாரிக்கிறேன் லீலா! நீ கவலைப்படாமல் போ’’ என்று ஆதரவோடு கூறினார் பரஞ்சோதி. ஆறுதல் அடைந்தவளாய் அங்கிருந்து கிளம்பினாள் லீலா.

அவள் சென்று வெகு நேரம் வரை சிந்தனையில் ஆழ்ந்திருந்தார் பரஞ்சோதி. சங்கர் உண்மையில் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று அவருக்குத் தெரியாது. அவன் அக்குற்றத்தைச் செய்தும் இருக்கலாம், செய்யாமலும்  இருக்கலாம். எப்படி இருந்தாலும் தன் உயிரைக் காப்பாற்றியவனுக்காக அந்த விசாரணையில் இறங்குவதென்று தீர்மானித்தார். உடனே அவன் குடியிருந்த கட்டிடத்திற்குத் கிளம்பினார்.
 
அவர் அந்த இடைந்த அடைந்த பொழுது மணி ஐந்தாகி விட்டது. அந்தக் கட்டிடத்தை ஒரு சுற்றுச் சுற்றி வந்த பரஞ்சோதி, தெரு வாயிற்கதவைத் தவிர வேறு எந்த வழியாலும் அதற்குள் நுழைய முடியாதென்று புரிந்து கொண்டார்.
அவர் வாசலுக்கு வந்தபொழுது காவல்காரனான வேணு மாலை செய்தித்தாள் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்தான். முதலில் பரஞ்சோதியை அவன் கவனிக்கவில்லை. ஆனால் அவனை அழைத்த பிறகுதான் அவன் அவரைத் திரும்பிப் பார்த்தான்.

‘‘இந்த சங்கர் எவ்வளவு உத்தமனாக நடித்துக் கொண்டிருந்தான்! இப்பொழுதுதான் அவன் எப்படிப்பட்டவனென்று தெரிகிறது’’ என்ற வேணு, ‘‘பணத்தை தமயந்தி அம்மா கூரை மீது வைத்த போது, ஒரு தூண்டிலைக் கொண்டுதான் அந்தக் கடத்தல்காரன் பணத்தை எடுத்துக் கொண்டானாம். அதோடு, ஒரு பாலிதீன் பையில் ஐம்பதாயிர ரூபாய் பணம் போட்டு சங்கரின் தலையணைக்கடியில் வைக்கப்பட்டிருந்தது. இதற்கு சாட்சியங்கள் இல்லை எனில் அவனைக் கைது செய்திருக்க முடியாது’’ என்றான்.

‘‘சங்கர்தான் இந்தக் காரியத்தைச் செய்திருப்பான் என்று நினைக்கிறாயா?’’ என்று கேட்டார் பரஞ்சோதி.
 
“இல்லை, ஏனென்றால் அவ்வளவு தைரியம் அவனுக¢கு இருந்ததில்லை. அவனுக்கு, லீலா என்ற பெண்ணுடன் திருமணமாக நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது. ஒருக்கால் தங்களுக்குத் திருமணமானதும் இருவரும் வெளியூர் செல்லத் தீர்மானித்து அதற்காக சங்கர் இந்தக் காரியத்தைச் செய்து பணம் சம்பாதிக்க முயன்று இருக்கலாம்.”
 
“அவன் அந்தத் தூண்டிலை தன் அறைக்கு துக்கிச் செல்வதை நீ பார்த்தாயா?”

“இல்லை”
 
“எப்படி நீ பார்க்காமல் போனாய்? எப்பொழுதும் தான் நீ இங்கேயே உட்கார்ந்திருக்கிறாயே?”

“நேற்று மாலை எனக்கு லீவு. எனக்குப் பதிலாக இங்கு சந்தியா என்ற ஒரு பெண் இருந்தாள். ஒருக்கால் அவள் பார்த்திருக்கலாம்” என்றான் வேணு.

“அவள் விலாசத்தை எனக்குக் கொடு.” ஆனால் வேணு வாயைத் திறக¢கவில்லை. தனது சட்டைப் பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை உருவி அவன் கையில் திணித்தார் பரஞ்சோதி. அதன்பிறகு மனம் மாறிய வேணு அந்த விலாசத்தை எழுதிக் கொடுத்தான். அவனிடம் வேறொன்றும் பேசாமல் அங்கிருந்து கிளம்பினார் பரஞ்சோதி.

மறுநாள் காலை அவர் சந்தியாவின் ஜாகையை அடைந்த பொழுது, அது ஒரு பெரிய விடுதியாக இருப்பதைக் கண்டார். அங்கு பல பெண்கள் குடி இருந்தனர். சந்தியாவின் அறை மாடியில் இருந்தது.

பரஞ்சோதி மாடிப் படிகளில் ஏறிச்செல்லும்பொழுது, ஒரு ஒல்லியான மனிதன் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தான். பரஞ்சோதியை யோசனையோடு சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த அந்த மனிதன், பிறகு கீழே இறங்கிச் சென்றான். அவன் யாராக இருக்குமென்று எண்ணியபடி சென்றார் பரஞ்சோதி.

அவர் சந்தியாவின் அறையை அடைந்தபொழுது, அது திறந்திருப்பதைப் பார்த்தார். அவர் உள்ளே நுழைந்து சுற்றும்முற்றும் பார்த்தார். அங்கே, ஒரு ஆண் இருந்ததற்கடையாளமாக சிகரெட் துண்டுகள் கிடந்தன. அந்த ஜாகை, ஒரு அறையையும், ஒரு குளியலறையையும் கொண்டதாக இருந்தது. சந்தியா குளித்துக் கொண்டிருப்பாளென்று நினைத்த பரஞ்சோதி, அவள் வருவதற்குள் அந்த இடத்தை நன்றாகச் சோதனை செய்துவிட வேண்டுமென்று எண்ணியவராய் சோதனையிட ஆரம்பித்தார்.

மேஜை ஒன்றின் அருகே இருந்த ஒரு குப்பைக் கூடையில் யாரோ அப்பொழுதுதான் அருந்திய காப்பிக் கோப்பை இருந்தது. அது நன்றாகச் சுட்டுக் கொண்டிருந்தது. காப்பிக் கோப்பையை எதற்காக குப்பைக் கூடையில் வைக்க வேண்டும் என்று நினைத்தார் பரஞ்சோதி. ஆனால் அதை அப்படியே விட்டு விட்டார். அதுவரை சந்தியா வரவில்லை. குளியலறையிலிருந்து எந்த விதமான சத்தமும் வரவில்லை. எனவே, அவள் எங்காவது வெளியே சென்றிருக்கக் கூடுமென்று நினைத்தவராய், குளியலறை கதவைத் தள்ளித் திறந்தார்.

அங்கே, விட்டத்திலிருந்து தொங்கிய ஒரு கயிற்றில் தொங்கிக¢ கொண்டிருந்தாள் சந்தியா. அவளைச் சோதித்து பார்த்த பரஞ்சோதி, அவள் முதல் நாளிரவே இறந்திருக்க வேண்டுமென்று புரிந்து கொண்டார்.

அப்படியானால் சற்றுமுன் இங்கிருந்து இறங்கிச் சென்ற மனிதன்தான் அவளைக் கொலை செய்திருக¢க வேண்டும். ஏனெனில் சந்தியாவின் கழுத்தில் நகக் கீறல்கள் இருந்தன. கொலையை செய்துவிட்டு அதைத் தற்கொலையாக்கிக் காட்ட அவன் முயன்று இருக்கிறான். இரவே கொலையைச் செய்துவிட்டு, காலைவரை பிணத்துடன் அதே ஜாகையில் இருந்த அவனுக்கு ரொம்ப நெஞ்சழுத்தம் இருக்க வேண்டுமென்று நினைத்த பரஞ்சோதி பக்கத்து டெலிபோன் பூத்திலிருந்து இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்கு, செய்தியைத் தன் குரலை மாற்றியபடி கூறிவிட்டு, அவர்கள் உடனே அங்கே கிளம்பி வந்தால் குப்பைக் கூடையில் ஒரு தடயம் கிடைக்கும் என்று கூறி வைத்து விட்டார்.

                                                         6. பரஞ்சோதி கைது

னது ஜாகையை பரஞ்சோதி அடைந்த பொழுது அவரை பார்ப்பதற்காக தமயந்தி வந்திருந்தாள். தனது மேஜை அருகே சென்ற பரஞ்சோதி, அங்கிருந்த ஒரு ஸ்விட்சைப் போட்டார். பிறகு, தமயந்திக்கு எதிரே இருந்த ஒரு நாற்காலியில் வந்து அமர்ந்தார். “நீங்கள் இந்திக கேஸிலிருந்து விலகி விடுங்கள் பரஞ்சோதி! என் கணவர் எனக்குக் கிடைப்பாரென்ற நம்பிக்கையே எனக்கு போய்விட்டது. இனி நீங்கள் இதில் வேலை செய்து உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம்” என்றாள் தமயந்தி.

பரஞ்சோதி மௌனமாக அமர்ந்திருந்தார். எதற்காக அவள் தன்னைக் கேஸிலிருந்து விலகி விடும்படி அவ்வளவு தீவிரமாகக் கூறுகிறாள்--? அதில் ஏதோ மர்மம் இருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது.

“சங்கர்தான் அவரைக் கடத்திச் சென்றான் என்று போலீசார் கூறினர். அவரை இந்நேரம் அவன் கொலை செய்திருக்க கூடும். இந்த நம்பிக்கையற்ற நேரத்தில் உங்களை விலகச் சொல்வதைத் தவிர வேறு வழியில்லை. நான்தான் உங¢களை இந்த விவகாரத்தில் இழுத்து விட்டேன். எனவே நானே வந்து உங்களை விலகிக் கொள்ளச் சொல்கிறேன்” என்ற கூறிய தமயந்தி, “உஙகளுக்கு எவ்வளவு பணம் நான் தரவேண்டும்?” என்று கேட்டாள்.

“நான் இந்த விவசாரத்திலிருந்து விலகுவதில்லை என்று முடிவு கட்டி விட்டேன்” என்று நிதானமாகக் கூறினார் பரஞ்சோதி.

“உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன். நீங்கள் இந்த விவகாரத்திலிருது விலகி விடுங்கள்” என்றாள் தமயந்தி.
 
“என்னை, பணத்தைக் கொடுத்து விலைக¢கு வாங்க முடியாது, அம்மா, நான், என் உயிரைக் காத்த சங்கரின் சார்பில், பணம் எதுவும் வாங்காமல் இந்தக் கேஸில் வேலை செய்யப் போகிறேன். உன் பணம் எனக்குத் தேவையில்லை” என்று தீர்க்கமான குரலில் கூறினார் பரஞ்சோதி.

“நீங்கள் இதற்குச் சம்மதிக்காவிட்டால், நான் உங்களை சில வருஷங்கள் ஜெயிலில் தள்ளி விடுவேன்” என்று மிரட்டினாள் தமயந்தி.
 
“நீ என்ன வேண்டுமானாலும் செய்து கொள்” என்று அமைதியாகக் கூறினார் பரஞ்சோதி.

“உங்கள் பிடிவாதத்தை விட்டு விடுங்கள், பரஞ்சோதி. நான் பெரும் பணக்காரி என்னால் சாதிக்க முடியாததொன்றுமில்லை. அதிலும் நான் பெண்! எனவே உலகம் நான் சொல்வதைத்தான் நம்பும். என்னைப் பகைத்துக்கொண்டு நீங்கள் சோலைப்பாக்கத்தில் தொழில் நடத்த முடியாது. எனவே கடைசியாக கேட்கிறேன். உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்? இருபதாயிர ரூபாய் வேண்டுமா? முப்பதாயிர ரூபாய் வேண்டுமா? அந்த பணத்தை வைத்துக் கொண்டு நீங்கள் வாழ்நாள் முழுவதும் உட்கார்ந்து கொண்டே சாப்பிடலாம். சீக¢கிரம் ஒரு முடிவுக்கு வாருங்கள்” என்று நிறுத்தினாள் தமயந்தி.

“நான் என் முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை.”
 
“கடைசியாகக் கேட்கிறேன், பரஞ்சோதி, உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள முடியுமா, முடியாதா?”
 
“முடியாது.” சில வினாடிகள் அவரையே மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்த தமயந்தி, தனது ஆசனத்தை விட்டு எழுந்து நேராக டெலிபோன் இருந்த இடத்திற்குச் சென்று இன்ஸ்பெக்டர் கதிர்வேலுக்கு டெலிபோன் செய்தாள்.

“இன்ஸ்பெக்டரா?”... நான் இங்கே தமயந்தி பேசுகிறேன். இங்கே பரஞ்சோதியின் ஜாகையில் இருக்கிறேன். என்னை இங்கு கொண்டு வந்து அடைத்து வைத்திருக்கிறார். நீங்கள் உடனே புறப்பட்டு இங்கே வாருங்கள்” என்று பரபரப்போடு கூறிவிட்டு டெலிபோனை வைத்து விட்டு வந்து நாற்காலியில் அமர்ந்தவளாய், சில வினாடிகள் யோசனையில் ஆழ்ந்தாள். பிறகு திடீரென தனது சட்டையையும், புடவையையும் கிழித்து விட்டுக் கொண்டாள். பிறகு தனது கை நகங்களால் தனது கையிலும் முகத்திலும் கீறிக் கொண்டாள். தனது தலைப் பின்னலை அவிழ்த்து அலங்கோலமாகக் கலைத்து விட்டு கொண்டாள்.

அவள் என்ன நோக்கத்தோடு இம்மாதிரி செய்து கொள்கிறாள் என்று பரஞ்சோதிக்குத் தெரிந்து விட்டது. இருந்தபோதிலும் அவர் மௌனமாகவே அமர்ந்திருந்தார்.

“இப்பொழுது இங்கு வரும் போலீசாரிடம், நீங்கள் என்னை பலாத்காரம் செய்ய முயன்றதாக நான் கூறினால் அவர்கள் நிச்சயம் என் கூற்றை நம்பி உங்களைக் கைது செய்வார்கள். நீங்கள்  எவ்வளவு மறுத்தாலும் உங்கள் பேச்சை அவர்கள் நம்ப மாட்டார்கள். ஒரு பெண் என்ன வேண்டுமானாலும் சாதிக்க முடியும் என்பதை இப்பொழுதாவது தெரிந்து கொள்ளுங்கள்” என்று இகழச்சியாகக் கூறினாள் தமயந்தி.

இவள், தன் பணத்திமரினால், தான் ஒரு பெண் என்பதையும் மறந்துவிட்டு இம்மாதிரி நடந்து கொள்கிறாளென்று புரிந¢து கொண்ட பரஞ்சோதி, தனக்குள் சிரித்துக் கொண்டார். பிறகு தமயந்தியின் பக்கம் திரும்பி, “நான் என் காரியதரிசிக்கு டெலிபோன் செய்வதையாவது அனுமதிப்பாயா?” என்று கேட்டார். ஒரு கணம் அவரைச் சந்தேகத்தோடு பார்த்த தமயந்தி, சரி என்ற பாவனையில் தலையை அசைத்தாள். தனது ஆசனத்தை விட்டு எழுந்த பரஞ்சோதி டெலிபோன் அருகே நடந்து சென்று சுசீலாவின் நம்பருக்கு டெலிபோன் செய்தார். சில வினாடிகளில் சுசீலாவின் குரல் லைனில் ஒலித்தது.

“சுசீலா பேசுகிறேன்.”

“பரஞ்சோதி பேசுகிறேன்” என்று கூறியவர், “என்னை இன்னும் சில நிமிஷங்களில் போலீசார் கைது செய்து கொண்டு போய் விடுவார்கள். நீ ஆபீசுக்கு வந்து கறுப்புப் பெட்டி எடுத்துக கொண்டு நேராக போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து விடு’’ என்றார்.

“என்ன தகராறு?” என்று பதறினாள் சுசீலா.

“அங்கே வந்ததும் தெரிந்து கொள்வாய்” என்று கூறிவிட்டு டெலிபானை வைத்துவிட்டார் பரஞ்சோதி, பிறகு தனது ஆசனத்தில் வந்து அமர்ந்து கொண்டார்.

ஐந்து நிமிஷத்திற்கெல்லாம் ஒரு போலீஸ்ஜீப் வந்து சேர்ந்தது. அந்த சத்தத்தைக் கேட்டதும் தனது ஆசனத்தை விட்டுத் துள்ளி எழுந்த தமயந்தி, வீரிட்டலறியபடி வெளியே ஒடினாள். அவளது சூழ்ச்சி நன்றாகப் பலித்தது. ஜீப்பிலிருந்து இறங்கிய இன்ஸ்பெக்டர் கதிர்வேல் அவசரமாக அவளருகே ஒடி வந்தார். அவள் இருந்த கோலத்தைக¢ கண்டதும் பதறியவராய், “என்ன நடந்தது?” என்று கேட்டார்.

“அந்த படுபாவி பரஞ்சோதி என்னைப் பலாத்காரம் செய்ய முயன்றான்” என்று கதறினாள் தமயந்தி. உடனே இரண்டு போலீஸ் வீரர்களை விட்டு உள்ளே சென்று பரஞ்சோதியைக் கைது செய்யும்படி உத்தரவிட்ட கதிர்வேல், தமயந்தியின் பக்கம் திரும்பி, “நீங்கள் என்னுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து ஒரு புகார் எழுதிக் கொடுத்து விட்டால் சுலபமாக இருக்கும்” என்றார்.

தமயந்தி அவரோடு சென்று ஜீப்பில் ஏறிக்கொண்டாள். இதற்குள் பரஞ்சோதியைக் கைது செய்து அழைத்துக¢ கொண்டு வந்தனர். பரஞ்சோதி ரொம்ப அமைதியாகக் காட்சியளித்ததைக் கண்டதும் இன்ஸ்பெக¢டர் கதிர்வேலுக்கு ஆச்சர்யமாக இருந்தது. இருந்தபோதிலும் அதைக காட்டிக் கொள்ளாமல் மௌனமாக இருந்தார்.

போலீஸ் ஜீப் அந்தத் தெருவின் திருப்பத்தில் திரும்பிய பொழுது, சுசீலா ஓடி வருவதை பரஞ்சோதி பார்த்தார்.
அப்புறம்...?

3 comments:

  1. பதியைக் கொன்ற பாவை -

    தலைப்பே கதையை சொல்லிவிடுகிறதே ..!

    ReplyDelete
  2. ஆஹா சஸ்பென்ஸ்... அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்...

    ReplyDelete
  3. அடுத்து என்ன நடந்தது என அறிய காத்திருக்கிறேன்!

    ReplyDelete