கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, June 10, 2013

திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்கள் ‘இலக்கியச் சித்திரம் - சித்திர மேகலை’ என்ற தலைப்பில் சித்ரலேகா என்கிற ஒவியர் வரைந்த அற்புதமான சித்திரங்களுடன் பழைய ஆனந்தவிகடன் 59-60 ஆண்டுகளில் எழுதியிருக்கிறார். வாராவாரம் ஒரு பக்கம் ஓவியமும், மறுபக்கம் கி.வா.ஜ. அவர்களின் அழகுத் தமிழுடனும் படிக்க ரசனையாக இருந்தது. அதை அவ்வப்போது தொடர்ந்து இங்கு வெளியிடலாம் என்று விருப்பம் எனக்கு.  உங்களுக்குப் பிடிச்சிருக்கான்னு சொல்லுங்க...

                                                                    1. இந்திர விழா

ணார்! டணார்! டணார்! டணார்!

முரசொலி முழங்கியது. காவிரிப்பூம்பட்டினத்து வீதிகளில் உலாவிய மக்கள் யாவரும் அந்த ஒலி வந்த பக்கம் திரும்பிப் பார்த்தார்கள். ‘‘என்ன ஒலி இது? அரண்மனையில் ‌ஏதேனும் திருமணமா? அல்லது வேறு புதிய நிகழ்ச்சி உண்டா?’’ என்று தங்களுக்குள் கேட்டுக் கொண்டனர்.

‘இந்திரன் கோவில் பக்கமிருந்தல்லவா வருகிறது?’’ என்று ஒருவர் இடைமறித்தார்.

வச்சிரக்கோட்டம் என்ற இந்திரன் கோயில் முரசுதான் அது. அதை யானையின் மேல் ஏற்றிச் செய்தி வள்ளுவன் என்ற அதிகாரி அதை அடிக்கிறான்.

இப்போது அவனுடைய குரல் கணீர் என்று கேட்கிறது. ‘‘புகார் நகரம் வாழ்க! மாதம் மும்மாரி பொழிக! ‌சோழ மன்னர்பிரான் செங்கோல் சிறந்து விளங்குக! அவன் வாழ்க!’’ என்று செய்தியைச் சொல்லத் தொடங்கி விட்டான். தெருவில் உள்ள மக்கள் அத்தனை பேரும் மூச்சை அடக்கிக் கொண்டு கேட்கிறார்கள்.

‘‘நகரத்தில் உள்ள மக்கள் யாவரும் இந்த ஆண்டு மிகச் சிறப்பாக இந்திர விழாவைக் கொண்டாட வேண்டும். இது அரசர் ஆணை!’’ என்று அவன் உரக்கச் சொல்லி முழங்குகிறான்.

இந்திர விழா என்பது காதில் விழுந்தவுடன் எல்லோருடைய முகத்திலும் ஒரு புதிய மலர்ச்சி புகுகிறது. பலகாலமாக நின்றுபோன விழா அல்லவா?

‘‘இந்திர விழா எப்படி உண்டாயிற்று தெரியுமா?’’ என்று ஒருவர் கேட்கிறார்.

‘‘தெரியுமே... பழங்காலத்தில் அகத்தியரே இந்த விழாவை நடத்த ஏற்பாடு செய்தாராம். தூங்கெயில் எறிந்த ‌தொடித்தோள் செம்பியன்தான் முதல் இந்திர விழாவை நடத்தினானாம். இந்திரனையே அந்தச் சோழ மன்னன் நேரே வேண்டிக் கொண்டதாகவும் அல்லவா கதை சொல்கிறார்கள்?’’

‘‘இந்திர விழா எத்தனை நாள் நடக்கும்?’’

‘‘சரியாக இருபத்தெட்டு நாள்...’’


முரசொலி நின்று மறுபடியும் செய்தியைச் சொல்கிறான் யானை மேல் இருப்பவன். ‘‘வீதியெல்லாம் தோரணம் நாட்டுங்கள். பூரண கும்பமும் பாலிகைகளும் வைத்து அலங்கரியுங்கள். பாவை விளக்குகளை வரிசையாக ஏற்றுங்கள். கமுகங் குலைகளையும், வாழைக் குலைகளையும், பூங்கொடிகளையும், கரும்புகளையும் கட்டுங்கள். திண்ணைகளை அலங்கரியுங்கள். முத்துமாலைகளைத் தொங்க விடுங்கள்...’’

மறுபடியும் முரசு முழங்குகிறது. மீட்டும் அவன் அறிவிக்கிறான். ‘‘மக்கள் கூடும் இடங்களிலும் வீதிகளிலும் பழைய மணலை மாற்றிவிட்டுப் புதுமணலைப் பரப்புங்கள். எல்லாக் கோயில்களிலும் அலங்காரஞ்‌ செய்து விழா நடத்துங்கள். அங்கங்கே நல்லுரை வழங்குவோர் வழங்கட்டும். பட்டிமண்டபத்தில் சமயப் புலவர்கள் கூடி ஆராய்ச்சியுரை நிகழ்த்தட்டும். சண்டையின்றிச் சச்சரவின்றி அமைதியாக நடந்து கொள்ளுங்கள்.’’

டண்டணார்! டண்டணார்! - முரசொலி இது.

இறுதியில் அவன் சொல்லி முடிக்கும் வாழ்த்தின் உயர்வை என்னவென்று சொல்வது! லட்சிய நாட்டின் வளவாழ்வுச் சூத்திரம் அது! பசியும் பிணியும் பகையும் போக, மக்களுக்குப் பொலிவும், நாட்டில் வளமும் சுரக்க வேண்டும் என்று வாழ்த்துகிறான்.

‘‘பசியும், பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க...!’’ என்பது அவன் கூறும் வாழ்த்து. அதன் ஒலியோடு மக்கள் இதயங்கள் உவகை பொங்க, இன்பத் துள்ளல் துள்ளுகின்றன. எல்லோருடைய வாயிலும் ‘‘இந்திர விழா! இந்திர விழா!’’ என்ற வார்த்தைகள்தான் உரத்து ஒலிக்கின்றன!

25 comments:

 1. //வீதியெல்லாம் தோரணம் நாட்டுங்கள். பூரண கும்பமும் பாலிகைகளும் வைத்து அலங்கரியுங்கள். பாவை விளக்குகளை வரிசையாக ஏற்றுங்கள். //

  இன்னா சார்் இது. அநியாயமா கீது. அம்மாம் பெரிய ஆளு இந்திரன். ஒரு ப்ளக்ஸ் போர்டு கிடயாதா..

  ReplyDelete
  Replies
  1. அதான்னே..நல்லா கேளுங்க ஆவி..

   Delete
  2. நாமல்லாம் இந்திர விழாவைப் புதுப்பிச்சு நடத்தி ஃப்ளெக்ஸ் எல்லாம் வெச்சு கலக்கிரலாம் ஆவி! ரைட்டா? நன்றி உஙகள் இருவருக்கும்!

   Delete
 2. லட்சிய நாட்டின் வளவாழ்வுச் சூத்திரம் அது! பசியும் பிணியும் பகையும் போக, மக்களுக்குப் பொலிவும், நாட்டில் வளமும் சுரக்க வேண்டும் என்று வாழ்த்துகிறான்.


  அருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

  ReplyDelete
  Replies
  1. ரசித்துப் படித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 3. கி.வா.ஜ என்றாலே அவரது அழகுத்தமிழும் சிலேடைப் பிரயோகமும் தான் நினைவுக்கு வரும். அவரது அருமையான படைப்புகளை வெளியிடுவதற்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்து வாழ்த்திய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 4. இதுவரை படிக்காத அருமையான சொற்சித்திரம்
  பதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 5. இந்திரவிழாவின் வரலாற்றோடு அவ்விழாவுக்கான ஏற்பாடுகளை முரசறைந்து அறிவிக்கும் பாங்கையும் எழுத்தில் வடித்தமை ரசிக்கவைக்கிறது. படமோ காட்சியை நேரிலேயே கொண்டுவந்து நிறுத்துகிறது. கி.வா.ஜ அவர்களையும் ஓவியர் சித்ரலேகா அவர்களையும் தங்களால் நினைவுகூர்ந்து மகிழ்வாய் வணங்குகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. படத்தையும், தமிழையும் ரசித்த உங்களுக்கு மனமகிழ்வுடன் என் நன்றி!

   Delete
 6. சொற்சித்திரம் அருமை...

  கி.வா.ஜ. அவர்களின் படைப்புகளை மேலும் தொடரவும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. தொடர்கிறேன் தனபாலன். மிக்க நன்றி!

   Delete
 7. பிடிச்சிருக்கு; தொடரவும். படிக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. உற்சாகம் தந்த கருத்துக்கு உளம் கனிந்த நன்றி!

   Delete
 8. அந்த யானையைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது ... அடேயப்பா என்ன ஒரு கம்பீரம்... இன்னும் பார்த்துக் கொண்டே உள்ளேன்...

  எனக்கு மிக மிக பிடிச்சிருக்கு... பண்டை தமிழ் அழகுத் தமிழ் தெளிவுத் தமிழ் ... வாழ்க நீர்

  ReplyDelete
  Replies
  1. மிக ரசித்த சீனுக்கு இதயம் நிறை நன்றி!

   Delete
 9. எழுத்துசித்திரமும் ஓவிய சித்திரமும் அருமை! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 10. ''‘‘பசியும், பிணியும், பகையும் நீங்கி, வசியும் வளனும் சுரக்க...!’'' இவை இன்று கனவாகிவிடும் சூழலில் இருப்பதை என்னை மனம் கசந்து போனாலும் பசுமையான அந்த நினைவுகளை நினைதேனும் ........இப்படி வார்த்தைகளில் சுவைத்தேனும் பசியார சந்தர்ப்பம் கொடுத்த உங்களுக்கு நன்றி

  ReplyDelete
  Replies
  1. தமிழை சுவைத்துப் பசியாறிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
 11. I read this today and I will continue.. Congratz.
  Vetha. Elangathilakm.

  ReplyDelete
 12. இதிலுள்ள படம் எங்கோ பார்த்திருக்கின்றேன் . ஆரம்பமே நன்றாக இருக்கிறது தொடர்கிறேன்..

  ReplyDelete
 13. இந்திர விழா!’’ என்ற வார்த்தைகள்தான் உரத்து ஒலிக்கின்றன!
  i read this today.. I like this...
  Congratz..
  Vetha.Elangathilakam

  ReplyDelete