கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, January 29, 2014

சித்திரமேகலை இதுவரை......

புகாரில் இந்திர விழா நடைபெறும் சமயம், ஊரே கோலாகலக் கொண்டாட்டத்தில் இருக்கிறது. மாதவி துறவறம் பூண்டிருப்பதால் வருந்திய அவள் தாய் சித்திராபதி, வசந்தமாலை என்ற தோழியை அனுப்பி, துறவறக் கோலத்தைத் துறக்கும்படி மாதவியிடம் வேண்டச் சொல்ல, மாதவி அவ்வேண்டுகோளை ஏற்க மறுக்கிறாள். அதனால் வருந்தும் தன் மகள் மணிமேகலையை பூக்கொய்து வரச் சொல்கிறாள் மாதவி. மேகலையின் தோழி சுதமதி, முன்பொரு சமயம் அவள் மலர் கொய்யச் சென்றிருந்தபோது ஒரு கந்தர்வன் அவள்மேல் மையல் கொண்டு தூக்கிச் சென்றதையும், அவனோடு சில காலம் வாழ்ந்தபின் மீண்டும் இங்கு கொண்டு வந்துவிட்ட¬துயும் சொல்லி, புத்தர் அருள் பெற்ற உபவனத்திற்கு மட்டுமே மேகலை செல்ல வேண்டும் என்கிறாள். உபவனத்திலுள்ள பளிங்கு அறை ஒன்றில் உள்ளே போனவர்களின் உருவம் தெரியுமேயன்றி அவர்கள பேசுவது கேட்காது என்றும், அங்குள்ள பத்ம பீடத்தில் அரும்புகளை இட்டால் அவை மலர்ந்த பின்பு வாடுவதில்லை, வண்டு மொய்ப்பதில்லை என்று கூறி அத்தகைய வனத்துக்கு மேகலையை அழைத்துச் செல்கிறேன் என்கிறாள். அவர்கள் புகாரின் அழகுக் கோலங்களைப் பார்த்தபடி உபவனத்தை அடைகிறார்கள். அப்போது...

                                 5. உதயகுமாரன் வருகை

ங்கும் ஒரே குழப்பம்! ஆரவாரம்!

மக்கள் அங்கும் இங்கும் நிலைதடுமாறி ஓடுகிறார்கள். ‘‘என்ன செய்தி?" என்று கேட்பார்க்கு விடை சொல்லக் கூட அவர்களுக்கு அமைதியில்லை. ‘‘யானைக்கு மதம் பிடித்து விட்டது. அதோ அங்கே வருகிறது. ஓடுங்கள்! ஓடுங்கள்!" என்று சிலர் கூவுகிறார்கள். காவிரிப் பூம்பட்டிணத்தில் அரசரது பட்டத்து யானையாகிய காலவேகத்துக்கு மதம் பிடித்துவிட்டது. பாகர் முதலியவர்கள் அடக்கியும் அடங்காமல் அது ஓடி வருகிறது. மக்களை அச்சத்தில் நிலைகுலையச் செய்து திரிகிறது.

சிறிது நேரத்தில் குதிரையின் மேல் விரைந்து வந்தான் உதயகுமாரன். அவன் அரசிளங்குமரன்; வீரன். மதத்தால் அடக்குவார் இன்றித் திரிந்த யானையை அவன் அடக்கி விட்டான்! என்ன ஆச்சரியம்! ஊரே அவனை வாழ்த்தியது. அந்த வெற்றி மிடுக்கோடு அவன் ஒர தேரில் ஏறி அரண்மனைக்குத் திரும்பினான். அவனைப் பார்த்தால் முருகனைப் போலத் தோன்றியது; அத்தனை அழகன். அவன் அணிந்திருக்கும் சோழர் அடையாள மாலையாகிய ஆத்தியே அவனை அடையாளம் காட்டியது.

காரலர் கடம்பன் அல்லன் என்பது
ஆரங் கண்ணியிற் சாற்றினன் வருவோன்


அப்படி வரும்போது நாடக மடந்தையர் வாழும் வீதி வழியே சென்றான். அங்கே அவனுடைய நண்பனாகிய எட்டிகுமரன் என்பவன் ஓர் அழகியுடன் இருந்தான். அவள் கையில் வீணை இருந்தது. ஆனால் அதை வாசிக்காமல் சித்திரத்தில் எழுதிய பாவையைப் போல் மயங்கியிருந்தாள். அவளை உதயகுமாரன் கண்டான்.


தேரில் இருந்தபடியே, ‘‘உனக்கு என்ன இடுக்கண் அப்பா வந்தது? இப்படி மயங்கியிருக்கிறாயே?" என்று கேட்டான். அதைக் கேட்ட எட்டிகுமரன் தன் காதல் அணங்கோடு ஓடடிவந்து அரசிளங்குமரனை வணங்கி, ‘‘செப்புக்குள் வைத்த பூவைப் போல வாடிய அழகியாகிய மணிமேகலை மலர்வனத்துக்குப் போவதைப் பார்த்தேன். அப்போது கோவலனுடைய நினைவு வந்தது. துயரம் மீதூர்ந்தது. யாழைச் சரியாக வாசிக்க முடியவில்லை" என்றான்.

‘‘அப்படியா?" என்று உதயகுமாரன் மகிழ்ச்சியோடு கூவினான். ‘‘அவளை என் தேரில் ஏற்றிக் கொண்டு வருகிறேன்" என்று உபவனத்தை நோக்கித் தேரை ஓட்டினான்.

அங்கே சுதமதி பூம்பொழிலின் எழிற் காட்சிகளையும் பொய்கையையும் மணிமேகலைக்குக் காட்டிக் கொண்டிருந்தாள். அப்போது வேகமாகத் தேரில் உதயகுமாரன் வருவதை மணிமேகலை அறிந்தாள். ‘‘இளவரசன் என் மேல் விருப்பம் உடையவன் என்பதை வசந்தமாலை ஒரு நாள் என் தாயிடம் சொன்னதைக் கேட்டேன். இப்போது இவன் என்னை ஏதேனும் செய்தால் என் செய்வேன்?" என்று மருண்டு உரைத்தாள். சுதமதிக்கும் நடுக்கம் உண்டாயிற்று. உடனே ‘‘இதோ, இந்தப் பளிங்கு அறைக்குள் புகுந்து கொள்" என்று சொல்லி அவளை உள்ளே போகச் செய்தாள். மணிமேகலை சென்று தாழைப் போட்டுக் கொண்டாள். அந்த அறைக்குச் சற்று தூரத்தில் சுதமதி ஒன்றும் அறியாதவளைப் போல நின்று கொண்டிருந்தாள்.

உதயகுமாரன், மணிமேகலை எங்கே இருக்கிறாள் என்று நான்கு திசைகளையும் பார்த்துக் கொண்டே வந்தான். சுதமதியைக் கண்டு, ‘‘மணிமேகலை பருவம் அடைந்து மெல்லியலாகி விட்டாளோ? மாதவர் இருக்கும் இடத்தை விட்டுத் தனியாக இங்கே வந்திருக்கிறாளாமே! ஏன் வந்தாள்?" என்று கேட்டான். சுதமதி சற்றே கலங்கி நின்றாள். பிறகு பேசத் தொடங்கினாள்...

என்ன பேசியிருப்பாள்...? வெய்ட் ப்ளீஸ்...!

4 comments:

  1. மணிமேகலையை சந்திப்பாரா... ? தேரில் கொண்டு வருவாரா...?

    ஆவலுடன்...

    ReplyDelete
    Replies
    1. விடை தர விரைவிலேயே மேகலை தொடர்வாள் டி.டி. தொடர்ந்து படிக்கும் உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றி!

      Delete
  2. என்ன சொன்னாள்.... நானும் காத்திருக்கிறேன் அவள் மொழி கேட்க!

    ReplyDelete
    Replies
    1. மிக நீண்ட மொழி அவள் பதிலாய்த் தந்தது! அதை விரைவில் எடுத்து வருகிறேன் நண்பரே! உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

      Delete