கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Monday, July 15, 2013

எழுத்தாக்கம்: அமரர் திரு.கி.வா.ஜ.
 
                         4. தெருவில் காட்சிகள்

சுதமதி சொல்கிறாள்:

‘‘உபவனத்தல் பளிங்கினால் ஆன அறை ஒன்று இருக்கிறது. அதன் உள்ளே போனவர்களின் உருவம் வெளியே தெரியுமேயன்றி, அவர்கள் பேசும் பேச்சுக் கேட்காது. அந்தப் பளிங்கு மண்டபத்தில் ஒரு பத்ம பீடம் இருக்கிறது. அதன் மேல் அரு‌ம்பை இட்டால் அது மலரும்; மலர்ந்தவை பின்பு வாடுவதில்லை; வண்டு மொய்ப்பதில்லை. அந்த வனத்தில் அன்பும் அருளும் ஆர் உயிர் ஓம்பும் ஒரு பெருங் கொள்கையும் என்றும் ஒழியாத நோன்மையுடைய பகவான் புத்தருடைய ஆணையினால் பலமரங்களும் மலரும். அந்த வனத்துக்குத்தான் உன் மகள் செல்ல வேண்டும். நானு்ம் அவளோடு செல்வேன்.’’

இவ்வாறு சொல்லிய சுதமதி, மணிமேகலையை அழைத்துக் கொண்டு உபவனத்தை நோக்கிப் புறப்பட்டாள்.

வழியில் எத்தனை ஆரவாரம்! அதோ ஒரு சமணத் துறவி. கையிலே உறி; அதில் ஒரு பாத்திரம்; மற்றொரு கையில் ஒரு கோல்; ஆடை அணியாத் திருமேனி; நீராடாத கோலம். இப்படிப் போகிறவனைக் கள்ளைக் குடித்து ஆட்டம் போடுகிறவன் ஒருவன் அணுகி, ‘‘இந்த உடம்புச் சிறையில் தடுமாறுகிற சுவாமி, ‌கொழு மடல் தெங்கில் விளையும் தேறலை உண்டு பாரும்; அதன் பயனை நீர் அறிந்தால் பிறகு வேறு ஒன்றிலும் நாட்டம் எழாது!’’ என்று கெஞ்சுகிறான்.

இதோ மற்றொரு கோலம். இவன் கோலமோ, அலங்கோலமோ காணக் காணச் சிரிப்பு வருகிறது. தோளிலே அரளி மாலை, மார்பில எருக்கமாலை; இடையிலே கந்தல் துணி; அதனோடு இலைகளையும் சேர்த்துக் கட்டியிருக்கிறான். உடம்பெல்லாம் சாம்பல்; அதனோடு சந்தனம். என்ன என்னவோ உளறுகிறான். ஒரு சமயம் அழுகிறான்; ஒரு சமயம் விழுகிறான்; அரற்றுகிறான்; தொழுகிறான்; இப்படி வரும் பைத்தியத்தைச் சுற்றிச் சிலர் நின்று வேடிக்கை பார்க்கிறார்கள்.


மற்றோரிடத்தில் ஆணும் அல்லாமல் பெண்ணும் அல்லாமல் இருக்கும் பேடி ஒருவன் போகிறான். அவனைச் சுற்றிப் பத்துப் பேர்; இந்திர விழாவுக்காக வெளியூர்களிலிருந்து வந்தவர்கள் பூம்புகாரிலுள்ள அழகிய மாளிகைகளின் ஓவியங்களைக் கண்டு நிற்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் தம் குழந்தைகளை அலங்கரித்து விளையாட்டு வண்டியின் மேலுள்ள யானையின் மீதே ஏற்றி, ‘‘எல்லாரும் வந்து பாருங்கள். முருகன் திருவிழாவை வந்து காணுங்கள்’’ என்று சொல்லி அந்தக் குழந்தைகளின் அழகைக் கண்டு நிற்கிறார்கள். குழந்தைகளின் வாயிலிருந்து அழுது ஒழுகி மார்பிலுள்ள ஐம்படையை நனைக்கிறது. இடையில் ஆடையை உடுத்தினார்களேயன்றி, அது பேருக்குத்தான். குழந்தையிடம் மறைக்க என்ன இருக்கிறது?

செவ்வாய்க குதலை மெய்பெறா மழலை
சிந்துபு சின்னீர் ஐம்படை நனைப்ப
அற்றம் காவாச் சுற்றுடைப் பூந்துகில்
தொடுத்த மிக்கோவை உடுப்பொடு துயல்வரத்


தளர்நடை நடக்கும் குழந்தைகள் அவர்கள்.

இந்தக் கூட்டத்தினிடையே மணிமேகலை சென்றாள். அவள் அலங்காரமற்ற கோலத்தைக் கண்ட மக்கள், ‘‘இவளைத் தவக்கோலப்படுத்திய தாய் மிகக் கொடியவள். மலர் கொய்ய மலர் வனத்துக்கு இவள் போகிறாள். அங்கு உள்ள அன்னம் இவள் நடையைக் கற்குமோ? சாயலை மயில் உணருமோ? கிளி செஞ்சொல்லைப் பயிலுமோ?’’ என்று ஏங்கினார்கள்.

குரவம், மரவம், குருந்து, கொன்றை முதலிய பல மலர்கள் விரிந்து வித்தகர் இயற்றிய விளங்கிய கைவினைச் சித்திரச் செய்கைப் பாடம் போர்த்ததுவே போலத் தோன்றிய உபவனத்தை அவள் சுதமதியுடன் அடைந்தாள்.

                                                                                                     -‌இன்னும் வரும்....

11 comments:

 1. தமிழ் கொஞ்சி விளையாடுகிறது.. படிக்க அருமையாக இருக்கிறது..

  ReplyDelete
 2. அருமை... அடுத்த பகுதிக்காக ஆவலுடன்

  ReplyDelete
 3. அன்னம் இவள் நடையைக் கற்குமோ? சாயலை மயில் உணருமோ? கிளி செஞ்சொல்லைப் பயிலுமோ?’’ என்று ஏங்கினார்கள்.

  அருமையான பகிர்வுகள்..

  ReplyDelete
 4. மக்களின் ஏக்கம் ரசிக்கவும் வைத்தது...

  ReplyDelete
 5. நாங்களும் கூடவே வனத்தினுள் வந்து விட்டோம்.....

  ReplyDelete
 6. உபவனம் செல்லும் வழியில்தான் எத்தனைக் காட்சிகள்! சமணத்துறவியிடம் குடிகாரனின் சீண்டல் பேச்சும், பைத்தியக்காரனின் கோலமும், குழந்தைகளின் அழகும்... பார்க்கும் ஒவ்வொன்றையும் ரசிப்புக்குள்ளாக்கும் எழுத்து. சித்திரமேகலையை சிறப்புறச்செய்யும் சித்ரலேகா ஓவியம். ரசிக்கவொரு வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றி கணேஷ்.

  ReplyDelete
 7. நல்ல வர்ணனைகள். தொடர்கிறேன்.....

  ReplyDelete
 8. படிக்க சுவாரஸ்யமா இருக்கு... ஏன் சார் பாதிலேயே விட்டுடீங்க..
  தொடர்ந்து எழுதுங்க...

  ReplyDelete

 9. Exactly what a fantastic blogessentially the most study info
  Qassim University

  ReplyDelete
 10. மிக்க நன்றி .பால கணேஷ் ஐயா தங்களின் வரவும் வாழ்த்தும் கண்டு
  மகிழ்ந்தேன் .உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும்
  என் இனிய தைப் பொங்கல் +தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் !

  ReplyDelete
 11. உபவனத்தை அவள் சுதமதியுடன் அடைந்தாள்.

  congratz.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete