கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, July 3, 2013

அமரர் திரு.கி.வா.ஜகந்நாதன் அவர்களின் சிறந்த ரசனையான எழுத்தில் இந்த சித்திர மேலை தொடர்கிறது...
 
                                               3. கண்ணீர் நனைத்த மாலை

‘‘அடடா! இந்த மாலையைக் கெடுத்து விட்டாயே! ஏன் அம்மா அழுகிறாய்?’’ என்று மாதவி, மணிமேகலையைக் கேட்டபடியே அவள் கண்ணீரைத் துடைத்தாள். அவள் பேச இயலாமல் விம்மினாள். தன் தந்தையாகிய கோவலனுக்கும் தாயாகிய கண்ணகிக்கும் உண்டான துன்பங்களைச் செவியேற்ற மணிமேகலை அவற்றை நினைத்து வருந்தினாள். அவள் விட்ட கண்ணீர் அப்போது அவள் தொடுத்துக் கொண்டிருந்த மலர்மாலையை நனைத்து விட்டது.

‘‘ஏன் அம்மா வருந்துகிறாய்? உன் கண்ணீரால் இந்த மாலை தூ்மை இழந்து விட்டதே! நீ போய் புதிய மலர்களைப் பறித்துக் கொண்டு வா’’ என்றாள் மாதவி.

அவர்களுடன் அருகில் பூத்தொடுத்துக் கொண்டிருந்த சுதமதி, ‘‘இவளைத் தனியாகவா அனுப்புகிறாய்?’’ என்று கேட்டாள். அவள் மாதவியின் தோழி.

‘‘ஆம்’’ என்றாள் மாதவி.

‘‘நல்ல காரியம் செய்தாய்! இந்த அழகியின் நீல மலர் விழியில் நீர்த் துளிப்பதைக் கண்டால் காமனும் தன் கையில் உள்ள வில்லையும் அம்பையும் போட்டுவிட்டு நடுங்குவானே! இவள் அழகைக் கண்டால் உலகிலுள்ள ஆடவர் என்ன பாடு படுவார்கள் தெரியுமா? அவர்கள் இவளைக் கண்ட பிறகும் அகன்று  போனால் பேடிகளாகத்தான் இருக்க முடியும்.’’

‘‘காவிரிப்பூம்பட்டினத்தில் அப்படியெல்லாம் நடக்குமா?’’

‘‘நன்றாக நடக்கும். என் சொந்த அனுபவத்தைச் சொல்கிறேன். கேள். இதுவரைக்கும் நான் சொன்னதில்லை.’’

‘‘அது என்ன?’’

‘‘நான் கெளசிகன் என்ற அந்தணனுடைய பெண். இப்போது தனியே இப்படி வாழ்கிறேன். அதற்குக் காரணம் நான் தனியாகப் போனதுதான்.’’

‘‘உன் கதையைச் சொல், கேட்கிறேன்.’’


‘‘அன்று ஒரு நாள் - அப்போது நான் இளமையும், எழிலும் பொங்க விளங்கினேன். - பூம்பொழிலில் தனியே மலர் கொய்திருந்தேன். ஊரில் இந்திர விழா நடந்து கொண்டிருந்த காலம். அப்போது மாருதவேகன் என்ற வித்தியாதரன், விழாவைப் பார்க்க இந்த ஊருக்கு வந்திருந்தான். ஊரைச் சுற்றிப் பார்க்கும் போது என் எழில் அவனை வா என்று அழைத்தது. என்னை வலியத் தூக்கிக் கொண்டு சென்று விட்டான். நான் அவனுடன் சில காலம் வாழ்ந்தேன். பின்பு அவனே மீ்ண்டும் இந்நகரத்தில் கொண்டுவந்து விட்டுப் போய்விட்ாடன். இதே நகரத்தில் நடந்தது இது.’’

‘‘அப்படியா! இது எனக்குத் தெரியாதே!’’

‘‘தெரிந்தவள் நான் சொல்கிறேன். இவளைத் தனியே அனுப்பக் கூடாது. கண்ட இடங்களுக்கும் போகக் கூடாது. மலர் கிடைக்கும் வனங்கள் பல இந்நகரில் உண்டு. இருந்தாலும் எல்லா இடங்களுக்கும் போகக் கூடாது.’’

‘‘ஏன்?’’

‘‘வாவிக்கரையில் இருக்கும் இலவந்திகைச் சோலைக்குப் போனால் அங்கே அரசனைச் சேர்ந்தவர்கள் இருப்பார்கள். உத்தியான வனத்தைப் பூதம் காக்கிறதென்று சொல்கிறார்கள். சம்பாதி வனம், கவேர வனம் என்ற இரண்டிலும் துன்பத்தைச் செய்யும் சிறு தெய்வங்கள் இருக்கும். ஆகையால் புத்தபிரானுடைய அருளாணையால் மலர்கள் மலரும் உபவனம் என்ற வனமே இவள் போவதற்கு உரியது.’’

‘‘அந்த வனம் எத்தகையது?’’ என்று மாதவி கேட்டாள்.

சுதமதி உபவனத்தைப் பற்றிச் சொல்லலானாள்.

                                                                                                   -இன்னும் வரும்....

7 comments:

 1. காமனும் நடுங்குவான் என்றால்... அதிக கவனம் தேவை தான்...!

  ReplyDelete
 2. அருமையான தமிழ்ப்பணி செய்து வருகிறீர்கள்..தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 3. உபவனம் பற்றி சுதமதி என்ன சொன்னாள் என அறிய தொடர்கிறேன்.

  ReplyDelete
 4. உபவனம் பற்றி அறிய ஆவலுடன்...

  ReplyDelete
 5. உபவனம் பற்றி மேலும் தெரிந்து கொள்ளூம் ஆவலுடன் நானும் காத்திருக்கிறேன் கணேஷ்....

  ReplyDelete
 6. ஆவலுடன் தொடர்கின்றேன்.

  ReplyDelete
 7. சுதமதி உபவனத்தைப் பற்றிச் சொல்லலானாள்.

  congratz.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete