கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, April 3, 2013


                                         7. பூட்டிய அறையின் மர்மம்

போலீஸ் ஸ்டேஷனை அடைந்ததும், தமயந்தி வெற்றிப் பெருமிதத்துடன் பரஞ்சோதியைப் பார்த்தாள். இருந்தபோதிலும் அவர் ஆத்திரப்படவில்லை. ஏனென்றால், பரஞ்சோதியின் மனதில் வேறொரு சந்தேகம் தலைதூக்கியது. எதற்காகத் தன்னை கேஸிலிருந்து விலகும்படி இவள் வற்புறுத்துகிறாள்? ஒருக்கால் இவளே தன் கணவனை மறைத்து வைத்திருப்பாளோ....?

இன்ஸ்பெக¢டர் கதிர்வேல், தமயந்தி கூறிய புகாரை ஒரு பேப்பரில் எழுதி, அவளிடம் கையெழுத்து வாங்கினார். அந்தச் சமயத்தில் ஒரு கறுப்புப் பெட்டியை சுமந்தபடி சுசீலா அங்கு வந்து சேர்ந்தாள். “நீங்கள் குற்றத்தை ஒப்புக் கொள்கிறீர்களா, பரஞ்சோதி?” என்று கேட்டார் இன்ஸ்பெக்டர். சுசீலாவின் பக்கம் திரும்பிய பரஞ்சோதி, “நீ அதைச் சுழலவிடு, சுசீலா,” என்றார். சுசீலா அந்தக் கறுப்புப் பெட்டியைத் திறந்து, அதனுள்ளிருந்த ஒரு டேப் ரிக்கார்டரை இயக்கினாள். பரஞ்சோதி புன்னகை பூத்தபடி நின்று கொண்டிருந்தார். டேப் ரிக்கார்டரிலிருந்து குரல்கள் ஒலிக்க ஆரம்பித்தன-.

“....உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் நான் தருகிறேன், நீங்கள் இந்த விவகாரத்திலிருந்து விலகி விடுங்கள்” என்று தமயந்தியின் குரல் ஒலித்தது. பிறகு, பரஞ்சோதியின் குரலும் தமயந்தியின் குரலும் ஒலித்தது. “......உங்கள் பிடிவாதத்தை விட்டு விடுங்கள், பரஞ்சோதி, நான் பெரும் பணக்காரி என்னால் சாதிக்க முடியாததொன்றுமில்லை, அதிலும் நான் பெண். எனவே உலகம் நான் சொல்வதைத்தான் நம்பும். என்னைப் பகைத்துக் கொண்டு நீங்கள் சோலைப்பாக்கத்தில் தொழில் நடத்த முடியாது. எனவே கடைசியாகக் கேட்கிறேன், உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டும்....”

“நிறுத்துங்கள்!, நிறுத்துங்கள்!” என்று அலறிய தமயந்தி, “நான் என் கேசை வாபஸ் வாங்கிக¢ கொள்கிறேன்” என்று தவித்தாள். சுசீலா டேப் ரிக்கார்டரை நிறுத்தி விட்டாள். பரஞ்சோதி புன்னகையோடு தமயந்தியைப் பார்த்தார். அவள் அவரை முறைத்துப் பார்த்துவிட்டு, இன்ஸ்பெக்டர் கதிர்வேலிடமிருந்து கேஸ் சீட்டை வாங்கிக் கொண்டாள்.

“இது மாதிரி ஏதாவது அசம்பாவிதம் நடக்குமென்று தெரிந்துதான், நான் பணக்காரப் பெண்மணிகளிடம் பேசும்போது இந்த டேப் ரிக்கார்டரை சுழல விடுவேன். ஆனால் கைதாகி போலீஸ் ஸ்டேனுக்கு நான் வருவது இது தான் முதல் தடவை” என்றார் பரஞ்சோதி. தமயந்தி ஆத்திரத்தோடு முணு முணுத்தபடி அங்கிருந்து கிளம்பினாள்.

“மன்னித்துக் கொள்ளுங்கள், பரஞ்சோதி, நான் அந்தப் பெண் கூறியதை உண்மை என்று நம்பி விட்டேன்” என்றார் கதிர்வேல்.

“பரவாயில்லை” என்று பெருந்தன்மையாகக் கூறிய பரஞ்சோதி, “தன்னை இந்தக் கடத்தல் சம்பந்தமாகக் கேள்விகள் கேட்டுத் துன்புறுத்துவதைத் தடுக்க அவள் என்னை விலகிடும்படி கூறினாள் போலிருக்கிறது” என்று தனக்குத் தானே கூறிக் கொள்வதைப் போல் கூறிக் கொண்டு, இன்ஸ்பெக்டரிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கிருந்து கிளம்பினார்.

அடுத்ததாக என்ன செய்ய வேண்டுமென்று திட்டம் போட்டார் பரஞ்சோதி. தன் உயிரைக் காப்பாற்றியதற்காக ஆத்திரப்பட்டுத்தான் சங்கர் மீது சந்தேகம் விழும்படி பாஸ்கர் செய்திருக்க வேண்டுமென்று அவருக்குத் தோன்றியது. எனவே பாஸ்கர் இல்லாத நேரத்தில் அவன் அறையைச் சோதனை செய்து பார்க்க வேண்டுமென்று முடிவு கட்டினார். எதனாலோ, இந்தக் கடத்தலையும் கொலைகளையும் பாஸ்கர்தான் செய்திருக்க வேண்டுமென்று அவருக்குச் சந்தேகம் இருந்தது.

உடனே தன் ஜாகைக்குச் சென்று தனது கைத்துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, சுசீலாவை அங்கேயே இருக்கும்படிக் கூறிவிட்டு, பாஸ்கரின் ஜாகையை நோக்கிக் கிளம்பினார். தனது காரை எடுத்துக் கொண்டு செல்லாமல், ஒரு வாடகைக் காரில் ஏறிக்கொண்டு கிளம்பினார்.  போகும் அவசரத்தில், தான் எங்கே போகிறோம் என்பதை சுசீலாவிடம் சொல்ல மறந்து விட்டார். இருந்த போதிலும் அதற்காக அவர் கவலைப்பட்டு’ கொள்ளவில்லை.

பாசுதேவ் வீதியை அடைந்ததும், வாடகைக்காருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு பாஸ்கர் குடியிருந்த கட்டிடத்தை நோக்கி நடந்தார். அவர் அந்தக் கட்டிடத்தில் அடி எடுத்து வைத்தபோது, வேணு சுவாரசியமாக ஒரு நாவலைப் படித்துக் கொண்டிருப்பதைக் கண்டார். “வேணு, வேணு,’’ என்று அவர் இருமுறை அழைத்தபிறகு தான் அவன் அவரைத் திரும்பிப் பார்த்தான்.

“பாஸ்கர் இருக்கிறானா, அல்லது எங்காவது வெளியே போய் இருக்கிறானா?” என்று கேட்டார் பரஞ்சோதி.  “வெளியே போயிருக்கிறார், வருவதற்கு ஒருமணி நேரமாகும்” என்றான் வேணு. தனது சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டு ஒன்றை உருவி எடுத்த பரஞசோதி, அதை வேணுவின் கையில் திணித்தபடி, “அவன் அறையின் மாற்றுச் சாவி உன்னிடம் இருக்கிறதல்லவா? அதை எனக்கு ஒரு பத்து நிமிஷங்களுக்கு இரவல் கொடு” என்றார்.

வேணு தயங்கினான். உடனே இன்னொரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவனிடம் நீட்டினார் பரஞ்சோதி. உடனே அவன் அந்தச் சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு, “இது பாஸ்கருக்குத் தெரிந்தால் என் உயிர் போய்விடும்” என்றான் கதி கலக¢கத்தோடு.

“நான் விரைவில் உன்னிடம் இதைக் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். நீ உன் வேலையைப் பற்றிப் பயப்படவேண்டியதில்லை” என்று அவனுக்குத் தைரியமளித்த பரஞ்சோதி மாடிக்குச் சென்றார். மாடியில் எல்லா ஜாகைகளும் பூட்டப்பட்டிருந்தன. சங்கரின் ஜாகை போலீசாரால் சீல் வைக்கப்பட்டிருந்தது. சில வினாடிகள் அந்தக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார் பரஞ்சோதி. “பாவம், சங்கர்” என்று முணு முணுத்துக் கொண்டார் பரஞ்சோதி.

அந்தக் கட்டிடம் முழுவதும் நிசப்தத்தில் ஆழந்திருந்தது. எங்கோ ஒரு அறையில், ஒரு பழைய காலத்துக் கடிகாரத்தின் “டிக! டிக்!” என்ற பலமான சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அங்கு யாருமே இல்லை என்பதை நிச்சயப்படுத்திக் கொண்ட பரஞ்சோதி தன்னிடமிருந்த சாவியால் பாஸ்கரின் ஜாகைக் கதவைத் திறந்தார்.

உள்ளே அவர் கண்ட காட்சி அவரை அதிர்ச்சி அடையச் செய்தது.
-தொடரும்...

9 comments:

  1. என்ன அங்கே பாஸ்கர் கொலையுண்டு கிடந்தானா?

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே நாவல்ல பல கொலைகள் விழுந்தாச்சு. இன்னும் ஒரு கொலைய எதிர்பார்க்கறீங்களா? நானும் உங்களோட தொடர்ந்து வந்து தெரிஞ்சுக்கறேன்... இன்னும் 6 அத்தியாயங்கள்தானே பாக்கி மர்மங்கள் விடுபட... உற்சாகம் தந்த உங்கள் கருத்துக்கு உளமார்ந்த நன்றி நண்பரே!

      Delete
  2. அட அடுத்த கொலையா? இல்லைன்னா இப்படி இருக்குமோ?

    கதவைத் திறந்து உள்ளே நுழைந்தால், பாஸ்கர் அங்கே அமர்ந்த படி, ‘வாங்க உங்களைத் தான் நான் எதிர்பார்த்தேன்’ என்று சொன்னானா? :)

    ReplyDelete
    Replies
    1. அட... க்ரைம் த்ரில்லர் படிக்க சரியான ஆள்தான் வெங்கட் நீங்க... கிட்டத்தட்ட சரியா சொல்லிட்டீங்க... அதேதான்... ஆனா அந்த வார்த்தைகளை சொல்றது வேறொரு எதிர்பாராத நபர்! அடுத்த பகுதில பாருங்க.. உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

      Delete
  3. மிகவும் எதிர் பார்புடன் வைத்து முடிப்பது நல்லதா...?

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்வது ஐயா...? க்ரைம் கதைகளை ஒரே மூச்சில் படிப்பதை விட சற்றுப் பொறுத்துப் படித்தால்தான் சுவாரஸ்யம் என்பார்கள். எனவேதான்... விரைவில் அடுத்த பகுதியை வெளியிட்டு விடுகிறேன். மிக்க நன்றி!

      Delete
  4. .. சுவாரஸ்யமான பகிர்வு..

    ReplyDelete
  5. ...ம்... அடுத்த பதிவு வரை காத்திருக்கிறேன்...!

    ReplyDelete
  6. க்ரைம் கதை..ராஜேஷ்குமாமா,பிகேபி,ராஜேந்திரகுமார் ரேஞ்சுக்கு போகுது.சூப்பர்.அடுத்தாற்போல் பின் டி சாமி போல் பேய் கதை ஒன்று எழுதுங்கள்.:)

    ReplyDelete