கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, June 9, 2012

ஹொய்சாளர்களாலும் அதற்குப்பின் டெல்லி சுல்தான்கள் படையெடுப்பின் காரணமாகவும் ஸ்ரீரங்க ரங்கநாதன் ஒரு தலைமுறைக் காலம் வரை வெளியூர்களில் உலாச் செய்து அதற்குப் பின் மீண்டும் திருவரங்கம் வந்தடைந்தார் என வரலாறு உரைக்கிறது. இந்த நிகழ்வினை மையமாக வைத்து ‘திருவரங்கன் உலா’ மற்றும் ‘மதுரா விஜயம்’ என்கிற இரண்டு பெரிய நாவல்களை எழுதியிருந்தார் எழுத்தாளர் ஸ்ரீவேணுகோபாலன். ஸ்ரீரங்கநாதர் உலாப் போன இடங்களையும் அவரைக் காப்பாற்றிக் கொண்டு வர தொண்டர்கள் பட்ட பாட்டையும் அந்தக் கதைகளில்  விவரித்திருந்தார்.

ஸ்ரீரங்கநாதர் அப்படி உலாச் சென்றதன் பின்னிணியில் சுல்தான்களின் படையெடுப்பு மற்றுமல்ல, அதற்கு நிலத்தைப் பிளந்து வெளிப்பட்ட ‘அபரஞ்சிப் பொன்’னால் ஏற்பட்ட விளைவுகள்தாம் காரணம் என்பதை எடுத்துரைத்து, எதனால் ஸ்ரீரங்கநாதர் விக்ரம் வெளிச் செல்லவும் தாயார் விக்ரகம் மறைத்து வைக்கப்படவும் நேர்ந்தது என்பதை மிக விரிவாகவும், விளக்கமாகவும், சுவாரஸ்யமாகவும் எடுத்துரைக்கிறது காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய  ‘ரங்கராட்டினம்’ என்கிற சரித்திர, ஆன்மீக மர்மப் புதினம்.

ஸ்ரீரங்கம் ஆலயத்தில் ‘ஐந்து குழி, மூன்று வாசல்’ என்கிற விஷயம் புகழ்பெற்றது. ரங்கநாதர் வருகிறாரா என்று தாயார் கையை ஊன்றிப் பார்த்ததால் ஏற்பட்டதுதான் அந்த ஐந்து குழிகள் என்று சொல்வார்கள். உண்மயையில் பஞ்சேந்திரியங்கள் என்கிற படுகுழிகளை அடக்கி, ‘சித் அசித் ஈஸ்வரன்’ என்கிற மூன்று தத்துவங்களைப் புரிந்து கொண்டால் தாயார் நமக்கு பரமபதத்தை அடைய வழிசெய்வாள் என்பதைக் குறிக்கவே ‘அந்த ஐந்து குழி மூன்று வாசல்’ அமைக்கப்பட்டிருக்கிறது. அதைப் பற்றித் தெளிவாக நாவலில் எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். ஒரு குழி ஹொய்சாளர்களி்ன அழிவு, ஒரு குழி பாண்டிய சாம்ராஜ்யத்தின் சரிவு என்றெல்லாம் விவரித்துக் கொண்டே வந்துவிட்டு ஐந்தாவது குழிக்குத் தந்திருக்கும் விவரணம் பிரமிக்க வைக்கிறது.

ஹொய்சள நாட்டில் (கி.பி.1523) சூரிய கிரகணத்தன்று பூகம்பம் ஏற்பட, மலை பிளந்து, அதன் பிளவுகளில் தூய அபரஞ்சிப் பொன் வெளிப்படுகிறது. செய்தி ஹொய்சள அரசன் வீரசோமேஸ்வரனுக்குப் போகிறது. அந்தப் பொன்னைப் பற்றிய விவரம் பாண்டிய மன்னன் சடையவர்மன் சுந்தர பாண்டியனுக்குத் தெரிந்தால் படையெடுத்து வந்து அபகரிக்கப் பார்ப்பான் என்பதால் அவனுக்குத் தெரியாமல் மறைக்க நினைக்கிறார்கள் ஹொய்சளர்கள். பாண்டியனுக்குத் தெரிந்து விட, யுத்தம் ஏற்பட்டு ‌ஹொய்சள மன்னன் கொல்லப்படுகிறான். பாண்டியன் தங்கத்தை அபகரிக்கிறான். அதைக் கொண்டு திருவரங்கனுக்கு ஒரு பிரதிமை செய்துதர பாண்டியன் விரும்புகிறான். பாண்டியன் செய்த ‌‘ப‌ொன் வேய்ந்த பெருமாள்’ விக்ரகத்தை அரங்கன் கோயில் நிர்வாகத்தினர் ஏற்க மறுக்கின்றனர் தொடரும் நிகழ்வுகளில் அந்தப் பொன் பாண்டிய சாம்ராஜ்யத்தின் அழிவு்க்கு எப்படிக் காரணமானது என்பதும், சுல்தான்கள் படையெடுப்பினால் ரங்கநாதர் மறைந்துறைய வேண்டிய அவசியம் நேரிட்டதும், பொன் வேய்ந்த பெருமாளின் பின்னைய நிலையும் விவரிக்கப்படுகிறது. நாவலில். அதை நீங்கள் அவசியம் படித்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

கலிபுருஷன், பரீக்ஷித்து மகாராஜாவிடம் வந்து ‘‘கலியு்த்தில் என் சாம்ராஜ்யம் பரவ வேண்டும். அதற்க மக்கள் மனது பேதலிக்க வேண்டும். அதற்காக நான்கு இடங்களை நான் தேர்ந்தெடுத்து விட்டேன். மக்களின் மதியை மயக்கப் போகும் அவை: ஜீக்தம் (சூதாட்டம்), பானம் (மது), ஸ்திரீ (பெண்). சூன; (மாமிசம்) ஆகியவை. ஆனால் அவை போதாது. பெரிய அளவில் மக்கள் மனதை பேதலிககச் செய்ய ஒரு சாதனம் தேவை. அது என்னவென்பதை நீங்கள் சொல்லி உத‌வ வேண்டும்’’ என்று கேட்டார். பரீக்ஷித்து யோசித்துக் கொண்டே தன் இடக்கையில் அணிந்திருந்த சுவர்ண கணயாழியை வலக்கரத்தால் திருகிக் கொண்டேயிருந்தார். அது அவர் கையிலிருந்து நழுவி உருண்டோடி கலியின் காலடியில் விழுந்தது. அதைக் கையிலெடுத்த கலி ‘‘நல்லது மகாராஜா! அந்த ஐந்தாவது இடமாக சுவர்ணத்தை தேர்ந்தெடுத்து விட்டேன். இனி சுவர்ணத்தால் மக்கள் புத்தி பேதலித்து கொடுமைகள் புரிவார்கள்’’ என்று கூறி மறைந்தான்.

இந்த ஸ்வர்ணத்தின் காரணத்தால் ஏற்படும் மோதல்களையும், துரோகங்களையும், அநீதிக்கெதிரான நேர்மையாளர்களின் போராட்டங்களையும், அதற்கு அவர்கள் செய்த தியாகத்தையும், இடையில் மெல்லிய ஊடுபாவாக காதலையும் கதாசிரியர் விவரித்துச் சென்றுள்ள அழகு படிக்கையிலேயே மனதை வசிகரிக்கிறது. ஆசிரியரின் கூற்றுப்படி : நமது தர்மத்தை யார் காத்து நம்மிடம் கொடுத்துள்ளனரோ அவர்கள் தங்களை மகான்கள் என்றோ அவதார புருஷர்கள் என்றோ ஒருநாளும் கூறிக் கொண்டதில்லை. காடுகளிலும், மேடுகளிலும், குளிரிலும், வெயிலிலும் அலைந்து நூறு வயதைக் கடந்த ஒரு ஒப்பற்ற மகான் திருவரங்க அமுதனைக் காத்து நமக்குத் தந்திருக்கிறார். அவரைப் பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? ‘நான்தான் கடவுள்’ என்று கூறிக் கொண்டு ஃபோர்ட் ஐகான் காரில் செல்பவர்கள் பின்னே மக்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனர். -இந்தநாவல் அத்தகைய அடியவர்களின தியாகங்களை எடுத்துரைப்பதைப் படிக்கையில் மெய் சிலிர்க்கிறது.

திருவரங்கத்தின் கிழக்கு கோபுரம் ‘வெள்ளாயி கோபுரம்’ என்றே அழைக்கப்படுகிறது. அதற்குப் பின்னணியில் நிற்பது வெள்ளாயி செய்த தியாகம். அந்த வெள்ளாயி யார் என்பதையும், எப்படி அவள் தன்னைத் தியாகம் செய்து அரங்கனைக் காப்பதற்குத் துணை நின்றாள் என்பதையும் வெகு அழகாக இந்த நூலில விவரித்திருக்கிறார் நூலாசிரியர் காலச்சக்கரம் நரசிம்மா. அதுமட்டுமின்றி ‘மகரநெடுங்குழைக் காதர்’ ‘மெஹர் டுங் காதர்’ ஆக மாறிய விதத்தையும் இவரின் விவரணத்தில் படிக்கையில் ஏற்படுகிறது பிரமிப்பு!

இப்படி வியப்பு, மெய்சிலிர்ப்பு, பிரமிப்ப போன்ற கலவையான பலவித உணர்ச்சிகளுக்கு என்னை ஆட்படுத்திய இந்த ‘ரங்கராட்டினம்’ நாவல் அனைவரும் படித்தே தீர வேண்டிய நாவல்களில் ஒன்று என்று நான் பரிந்துரைக்கிறேன். திருவரங்கத்திலிருந்து நூலாசிரியருக்கு போன் செய்த ஒரு மூதாட்டி, ‘இந்த நாவலை எழுதியதற்காகவே உனக்கு மோட்சம் கிடைக்கும்’ என்று கதறியபடி சொன்னார் என்றால் அதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது?

8 comments:

 1. ரங்கராட்டினம் நாவலை உடனே படிக்கத்தூண்டுகிறது உங்கள் பதிவு.நான் ஸ்ரீவேணுகோபாலன்.அவர்களின் ‘திருவரங்கன் உலா’படித்திருப்பதால் அவசியம் இதை படிக்க இருக்கிறேன்.ஒரு மூதாட்டி,‘இந்த நாவலை எழுதியதற்காகவே உனக்கு மோட்சம் கிடைக்கும்’ என்று கதறியபடி ஒரு மூதாட்டி நூலாசிரியரிடம் சொன்னார் என்றால் அதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கிறது? என்று நீங்கள் சொன்னது எனக்கு உடன்பாடே.

  ReplyDelete
 2. சங்கதாரா பற்றி சென்னையில் நீங்கள் சொன்னதால் நேற்று முந்தினம் தான் உடுமலை.காம்-ல் புத்தகம் அனுப்பச் சொல்லி ஆர்டர் செய்தேன். இந்தப் புத்தகமும் வாங்கிப் படிக்கத் தூண்டி விட்டீர்கள் கணேஷ். நிச்சயம் படிக்கிறேன். உங்கள் விமர்சனம் அருமை....

  எங்க நம்ம பக்கம் காணோம்.... பிசி?

  ReplyDelete
 3. விமர்சனம் அருமை.

  ReplyDelete
 4. @ வே.நடனசபாபதி...
  அவசியம் படித்துப் பார்க்கிறேன் என்று சொன்ன உங்களுக்கு மனமகிழ்வுடன் கூடிய என் நன்றி!

  ReplyDelete
 5. @வெங்கட் நாகராஜ்...
  என் வார்த்தைகளை நம்பி சங்கதாராவைப் படிக்கத் துவங்கிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி! சங்கதாராவைப் போலவே இந்த ரங்கராட்டினமும் ஒரு நிறைவான வாசிப்பனுபவத்தைத் தரும் வெங்கட்!

  @ கோவி...
  நூல் அறிமுகத்தை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

  ReplyDelete
 6. ரத்தினச் சுருக்கமான, அதே சமயம் படித்தே தீர வேண்டும் எனும் ஆவலை ஏற்படுத்தும் விமர்சனம்... உங்கள் பணி தொடரட்டும்...

  ஸ்ரீ வேணுகோபாலனின் திருவரங்கன் உலா எனக்குப் பிடித்தமான ஒன்று. தினமணி கதிரில் தொடராக வந்தபோதே படித்திருக்கிறேன்...

  ReplyDelete
 7. @ balhanuman...
  ஸ்ரீவே.யின் கதையை தினமணி கதிரில் கோபுலுவின் ஓவியங்களுடன் படித்திருக்கிறீர்களா? You are lucky! விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

  ReplyDelete
 8. நல்ல எழுத்து கூடி வருகிறது உங்களுக்கு.. வாழ்த்துக்கள்

  ReplyDelete