கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, June 1, 2012

‘ரங்கநதி’ - இந்தத் தலைப்புக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாதத்தை நனைத்து ஓடுவதால் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, நாவலின் நாயகன் ரங்கனுக்கு வாழ்வாதாரமாய் இருந்து அன்னையாய் மாறும் ‘ரங்கநதி’ என்று பொருள் ‌கொண்டாலும் சரி, இரண்டுமே மிகப் பொருத்தமானவைதான். சில கதைகளை எழுத்தாளர்கள் எழுதுவார்கள். சில கதைகளோ எழுத்தாளர்களைக் கொண்டு தாங்களே வெளிப்பட்டு விடும். இந்த ‘ரங்கநதி’ அப்படித்தான். இந்திரா செளந்தர்ராஜனின் ‘மாஸ்டர் பீஸ்’களில் ஒன்றாகத்தான் எனக்குத் தோன்றியது.

காவிரி ஆறு சில சமயங்களில் காதல் பேசும் குமரியென அமைதியாய் நடையிடுவாள். சில சமயங்களிலோ ரெளத்திரம் கொண்ட கண்ணகி போன்று சீறிப் பாய்ந்து வந்து தன்னில் குளி்க்க வரும் உயிர்களைப் பலிகொண்டு விடுவாள். அப்படி காவிரியின் வெள்ளத்தால் யாராவது இழுத்துச் செல்லப்பட்டால், ‘ரங்கனைக் கூப்பிடு’ என்பார்கள். முடிந்தால் .உயிருடனோ, இல்லையேல் பிணமாகவோ காவிரியில் மூழ்கிக் கொண்டு வந்து விடுவான். இதுதான் ரங்கனின் தொழில்.

சக்கரவர்த்தி ஐயங்கார் பெரும் செல்வந்தர். ஊரில் மதிப்புப் பெற்ற பெரிய மனிதர்ளில் ஒருவர். அவருடைய மகள் மைதிலி ஒருமுறை ஆற்றில் குளிக்க வர, ஆற்றுச் சுழலில் சிக்கிக் கொள்ள, அதைப் பார்க்கும் ரங்கன், நதியில் பாய்ந்து நீந்திச் சென்று அவளைக் காப்பாற்றுகிறான். அவள் உடை ஆற்றில் போய்விட ஆடையவற்ற வளாய் ஆன அவளுக்கு சிகிச்சை செய்து, மாற்றுடை தந்து அவள் வீட்டில் விட்டு சலனமில்லாமல் திரும்பிச் செல்கிறான். ஆனால் மைதிலியின் மனதில் அவன் புகுந்து விடுகிறான்.

மைதிலி, ரங்கனிடம் தன் காதலைச் சொல்ல, அவன் நிதர்சனம் புரிந்து மறு்க்கிறான். கோடீஸ்வரனின் மகள், ஊர் பெயரோ, பெற்றோர் பெயரோ தெரியாத  பிணந்தூக்கியான ரங்கனைக் காதலிக்கிறாள் என்றால் பிரச்சனைகள் வராமல் இருக்குமா என்ன? ஆனால் ரங்கன் அனாதை இல்லை என்பதுதான் இங்கே சோகம். 

அவனைப் பெற்றவர், அதே ஸ்ரீரங்கத்தில் பலரால் மதிக்கப்படும், ஐயங்கார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர். தன் கண் முன்னாலேயே தன் மூத்த மகன் ‘பிணந்தூக்கி’யாக வாழ்வதைப் பார்த்து மனதிற்குள் குமையும்படியான ஒரு சூழலில் இருக்கிறார்.அவருக்கு மனக்குழப்பம் நேரிடும் போதெல்லாம் ஆறுதல் பெற அவர் நாடுவது ‘சிங்கராச்சாரியார்’ என்கிற ஒரு மகானை.

இப்படிக் கதையில் விழும் முடிச்சைத் தொடர்ந்து படிக்க ஆரம்பி்த்த என்னை ரங்கநதி இழுத்துச் சென்றது, புரட்டி்ப் போட்டது, ஒரே மூச்சில் படித்துவிட்டுத்தான் கீழே வைக்கச் செய்தது. இந்திரா செளந்தர்ராஜன் கதையின் மைய இழையாக காதலை வைத்திருந்தாலும் கதையினூடாக சிறு உறுத்தலும் இல்லாமல், திணிப்பாகத் தெரியாமல் பல சமூக விஷயங்களைக் கையாண்டிருக்கிறார். சுயநலம் சார்ந்த மனித உறவுகள், இயற்கையைச் சுரண்டும் மனிதனி்ன் பேராசை, போலி கெளரவம் பார்ப்பதால் பாதிக்கும் உறவுகள், பணத்தின் மீது வெறி கொண்டால் மற்றவர‌ை எண்ணாமல் தன்னை மட்டுமே முன்னிலைப்டு்த்தும் மனப்பாங்கு, பிரதிபலன் பாராமல் ஏற்படும் நட்புகள், உறவுகள்... இப்படி நிறைய விஷயங்களை நிறைவாகத் தொட்டுச் செல்கிறார் நூலாசிரியர்.

இந்த ‘ரங்கநதி’யில் வரும் அனைவரும் மனித வாழ்வின் இயல்புக்கு மீறாத பாத்திரங்களாகவே படைக்கப்பட்டுள்ளனர். ரவுடி இடும்பனுடன் மோதி அவனைத் தாக்கி, அவனால் கடுமையாகத் தாக்கப்படும் ‘ஹீரோ’ ரங்கன் (நான் என்ன ரஜினிகாந்த, விஜயகாந்தா- கண்ணு செவக்க டயலாக் பேசி சண்டைபோடுறதுக்கு), சொத்தின் மேல் ஆசை வைத்து மைதிலியின் காதலுக்கு எதிராக சூழ்ச்சி வலை பின்னும் அண்ணி ரேவதி, தன் கணவனைக் காப்பாற்றியதால் அனாதை ரங்கனை ‘அண்ணா’ என்றழைத்து (உண்மையில் அவன் அண்ணன் என்பதறியாமல்) பாசம் காட்டும் உஷா -இப்படி அனைத்துக் கதாபாத்திரங்களும் அவரவர் இயல்பின்படி பக்கத்து வீட்டு மனிதர்கள் போல படைக்கப்பட்டிருப்பது மிகச் சிறப்பான விஷயம்.

எத்தனை பெரிய சுழலாக இருந்தாலும் நீந்தி உள்ளே மூழ்கியவற்றை எடுத்து வரும் ரங்கனை அந்த நதி எதுவும் செய்வதில்லை. அதன் ஆசி பெற்றவன் அவன். அந்த நதியில் மூழ்கி உயிர் விட்ட அவன் தாயின் ஆன்மா போல காவிரி அவனைக் காத்தாலும் அதை ‘ராட்சசி’ என்றே ரங்கன் கருதி திட்டும் முரண் வெகு சுவாரஸ்யம்.

 தன் நிலை உணர்ந்தவனாய் ‘காதல் என்கிற விஷயம் தன் வாழ்வில் இல்லை’ என்று மைதிலிக்குப் புத்தி சொல்லும் ரங்கனின் மனம் எப்போது மாற்றம் பெற்று அவளைக் காதலிக்கத் தொடங்குகிறது என்பதையும், ‘‘நதியா இவ? என் வரைல ராட்சசி’’ என்று காவிரியை தூஷிக்கும் ரங்கன் அவளை அன்னையாக உணரத் துவங்குவதையும் திணிப்பில்லாமல் இயல்பாக விவரித்திருப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் இந்திரா செளந்தர்ராஜன்.

கதையின் ஊடாக அங்கங்கே தன்னுடைய சீரிய சிந்தகைனளையும் விதைக்கத் தவறவில்லை இந்திரா செளந்தர்ராஜன். இடும்பன் என்கிற கள்ளச்சாராய ரவுடியிடம் ரங்கன் பேசும் புள்ளிவிவரக் கணக்கு, சிங்கராச்சாரியாரை டி.வி. பேட்டி எடுக்கும் போது வெளிப்படும் கேள்வி பதில்கள் போன்று கதை நெடுகிலும் இந்திரா செளந்தர்ராஜனின் நற்கருத்துக்கள் விரவிக் கிடக்கின்றன.

எப்படிப் பார்த்தாலும் சுப முடிவு வராது சோக முடிவாத்தான் இருக்கும் என்று மனதை தயார்படு்த்திக் கொண்டு படிக்கையில் சுப முடிவையும் தந்து மகிழ்ச்சிப்படுத்துகிறார் ஆசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்திலும் இடம் பெற்றிருக்கும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும் (அவரே எழுதிய) கவிதைகள் இந்திரா செளந்தர்ராஜனின் ஆழ்ந்த தமிழறிவுக்குச் சான்றாக நிற்கின்றன.

‘ரங்கநதி’யின் அத்தியாயங்களில் குளி்த்தெழுந்தேன், சில அத்தியாயங்களில் மூச்சுத் திணறி காற்றுக்காய் போராடினேன், சில அத்தியாயங்களில் நீரினுள் ‘முங்கு நீச்சல்’ அடித்தேன்... இப்படி சுவாரஸ்யமான நதிக்குளியல் அனுபவ்ததை எனக்குத் தந்தது இந்த ‘ரங்கநதி’. ‘திருமகள் நிலையம்’ வெளியிட்டுள்ள இந்தப் புத்தகத்தின் விலை ரூ.275 என்பது ஒன்றுதான் கடினமான விஷயம். ஆனால் நூலின் உள்ளடக்கத்திற்காக இதை பொருட்படுத்தாமல் வாங்கி வாசிக்கலாம் என்பதே என் கருத்து.

பின்குறிப்பு: நான் படித்து வியந்து உங்களைப் படிக்கச் சொல்லும் இந்த ‘ரங்கநதி’ ஸ்ரீரங்கத்துக் கதை. அடுத்ததாக எழுதவிருக்கும் பு்த்தகமும் ஸ்ரீரங்கக் கதைதான். இதிலாவது ரங்கன் என்பவன் கதாநாயக்ன். அந்தக் கதையிலோ ஸ்ரீரங்கத்து ரங்கநாதனே கதாநாயகன்! பொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. கொடுத்து வைச்சவங்கப்பா!

23 comments:

  1. நல்லதொரு நூல் அறிமுகத்திற்கு நன்றிகள் நண்பரே.
    வாங்கிப் படித்துவிடுகிறேன்.

    ReplyDelete
  2. குமுதம் ஸ்நேகிதியை வாங்கியதுமே வீட்டுக்கு வரு வைலேயே நடந்த வண்ணம் படித்தது இக்கதையையேதான். பிறகு பல முறை ஒவ்வொரு அத்தியாயத்தையும் படித்தேன்.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

    ReplyDelete
  3. @ மகேந்திரன்...
    அவசியம் படியுங்கள் மகேன். நல்லதொரு வாசிப்பனுபவம் கிட்டும் என்பதற்கு நானே சாட்சி. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

    @ dondu...
    அட... தொடர்கதையாப் படிக்கற வாய்ப்புக் கிடைச்சதா உங்களுக்கு? நான்லாம் சில சமயம் இப்படியான வாய்ப்பை தவற விட்டுடறேன். முழுப் புத்தகமாத்தான் படிச்சேன். ஆனாலும் மகிழ்வான அனுபவம் கிடைச்சது ராகவன் ஸார். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் என் இதயம் நிறைந்த நன்றி.

    ReplyDelete
  4. பொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. கொடுத்து வைச்சவங்கப்பா!


    Thanks :)

    ReplyDelete
  5. @ ரிஷபன்...

    வாங்க ஸ்ரீரங்கத்துக்காரரே... நான் பொறாமைப்படும் நபர்களில் நீங்களும் ஒருவராயிற்றே... இந்தப் பதிவு பிடிச்சிருந்துச்சா... மிக்க நன்றி.

    ReplyDelete
  6. ‘ரங்க நதி’ நூல் அறிமுகமும் விமரிசனமும் அருமை! தங்கள் பதிவைப் படித்ததுமே நூலைப் படிக்க ஆவல் வருவதும் உண்மை.

    ReplyDelete
  7. @ வே.நடனசபாபதி...
    படித்துப் பாருங்கள். நான் சொல்லியவை சரியென்பதை உணர்வீர்கள் நண்பரே... உற்சாகம் தந்த உங்களின் வருகைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. தொடராக வாசித்து மகிழ்ந்த மலரும் நினைவுகள் ! பகிர்வுக்கு நன்றி.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
  9. தலைப்பு மிக அழகாக இருக்கிறது. நாவல் படைக்க ரொம்பப் பொறுமை வேண்டும்! படிக்க மனம்தான் வேண்டும். உங்கள் அறிமுகம் புத்தகத்தைப் படித்துப் பாரேன் என்கிறது. மனதின் கட்டளைகள் மீறப் படுவதில்லை!

    ReplyDelete
  10. @ இராஜராஜேஸ்வரி...
    அட, நீங்களு்ம் தொடராகப் படித்து அனுபவித்தீர்களா? மிக்க மகிழ்ச்சி. உங்களின் வருகைக்கும் வாழ்த்துக்கும் என் இதயம் நிறை நன்றி!

    @ ஸ்ரீராம்...
    ஆஹா... கவிதை போலும் உங்கள் கருத்தைச் சொல்லியிருக்கிறீர்கள். படித்துப் பாருங்கள். பிடித்துப் போகும் ஸ்ரீராம். மிக்க நன்றி!

    ReplyDelete
  11. நல்ல அறிமுகம். நிச்சயம் படித்து விடுகிறேன்.

    //பொதுவாகவே எனக்கு ஸ்ரீரங்கத்துக்காரர்கள் மேல் நிறையப் பொறாமை உண்டு. ஸ்ரீரங்கத்துக்காரர்கள் கதை எழுதினாலும் சரி... ஸ்ரீரங்கத்தை நிலைக்களனாக வைத்து மற்றவர்கள் எழுதினாலும் சரி... அவையெல்லாம் அற்புதமாக அமைந்து விடுகின்றன. // உண்மை.... :)

    ReplyDelete
  12. @ வெங்கட் நாகராஜ்...
    என் மீது நம்பிக்கை வைத்து படிக்கிறேன் என்ற நண்பருக்கு இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  13. நல்ல நூல் அறிமுகம் இனித்தான் படிக்கோணும் கணேஸ் அண்ணா!

    ReplyDelete
  14. இவ்வளவு சொல்றேன், இன்னுமா உனக்குப் படிக்கத் தோணவில்லையென்னும்படியான ஆழ்ந்த வாசிப்பனுபவத்துடன் கூடிய ஈர்ப்பான விமர்சனம். கிடைத்தால் படிக்கத் தவறவிடமாட்டேன். நன்றி கணேஷ்.

    ReplyDelete
  15. @ தனிமரம்...
    படித்து ரசியுங்கள் நேசன்! இங்கும் வருகை புரிந்து எனக்கு மகிழ்வு தந்த உங்களுக்கு என் இதய நன்றி!

    @ கீதமஞ்சரி...
    ‘ஆழ்ந்த வாசிப்பனுபவத்துடன்’ என்ற வார்த்தை எனக்கு மிகமிக மகிழ்வு தந்தது தோழி. இந்த நூல் அறிமுகத்தை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  16. Ganesh sir i will buy and read.
    Thanks for your information.

    ReplyDelete
  17. @ அ.குரு...

    படியுங்கள் குரு. நல்லதொரு வாசிப்பனுபவத்தை நீங்களும் பெற என் வாழ்த்துக்களும், உங்களுக்கு என் உளம்கனிந்த நன்றிகளும்!

    ReplyDelete
  18. இன்னிக்கு கமெந்ட பெட்டி வேலை செய்யுதே?
    நல்ல முயற்சி கணேஷ். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  19. @ அப்பாதுரை...
    முன்பே ஒரு முறை வந்தும் உங்களுக்கு கமெண்ட் பெட்டி வேலை செய்யலையா? அடடா... தெரியாமப் போச்சுதே! என் முயற்சியை வாழ்த்திய உங்களுக்கு என் இதய நன்றி!

    ReplyDelete
  20. நானும் தொடர் கதையாகத்தான் படித்தேன். And I enjoyed reading your blog.( Hey, how do you guys type that Tamil version..I had tough time)..I have tried it in my page too, but not very good.
    Best wishes Ganesh.
    Regards.

    ReplyDelete
  21. கட்டாயம் படித்தே ஆகணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்களே கணேஷ்

    ReplyDelete
  22. கட்டாயம் படித்தே ஆகணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்களே கணேஷ்

    ReplyDelete
  23. கட்டாயம் படித்தே ஆகணும் என்ற ஆவலைத் தூண்டிவிட்டீர்களே கணேஷ்

    ReplyDelete