கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Wednesday, May 29, 2013

சுஜாதாவின் எழுத்தை ஆரம்ப காலம், இடைக்காலம், பிற்காலம் என மூன்றாகப் பிரிக்கலாம் என்பது என் கருத்து. ஆரம்பகால சுஜாதாவிடம் எழுத்தில் ஒரு துள்ளலும், புதுமைகள் படைக்க வேண்டும் என்ற தீராத துடிப்பும் இருந்ததைக் காணலாம். இடைக்காலத்தில் எழுத்து நடையில் ‘கிம்மிக்ஸ்’களுக்கு விடைகொடுத்து விட்டு அழகாய் கதையை வர்ணித்து நகர்த்திச் செல்வார். பிற்காலத்தில் வந்த எழுத்துக்களில் அவருக்கே உரித்தான வார்த்தைச் சிக்கனம் மறைந்து நெடிய கதைகளாக எழுதினார். ஆன்மிகமும் அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டது அவரது எழுத்துக்களை. சுஜாதா என்கிற எழுத்தாளரின் பெயர் பிரபலமான இடைக்காலத்து எழுத்துக்களில் எனக்கு மிகவும் பிடி்த்தமானது ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ நாவல்.

பாஸஞ்சர் திருநிலத்தில் போனால் போகிறது என்று நின்றது. ஒரு பெண் ஓடிஓடி வெள்ளரிப் பிஞ்சு விற்றாள். முதல் வகுப்புப் பெட்டியிலிருந்து ஒரே ஓர் இளைஞன் நீலநிற சூட்கேஸ், ஒரு கித்தாருடன் இறங்கினான். அவன் கழுத்தி்ல காமிரா மாலை. அந்தப் பிரதேசத்தில் மிக வினோதனாக, அன்னியனாக நின்றான். -இப்படி ஆரம்பிக்கிற பாராவிலேயே ஒரு காட்சியை உங்கள் மனக்கண்ணின் முன்னால் விரித்து, கட்டிப் போட்டு விடுவார் சுஜாதா. அதன்பின் புத்தகத்தைக் கீழே வைக்க முடியாதபடி கதையைக் கொண்டு செல்வது சுஜாதாவின் எழுத்துத் திறனிற்கு மற்றுமொரு சாட்சி.

நாவலின் ஊடாக ஆங்காங்கே தெறிக்கும் சுஜாதா ஸ்பெஷல் வர்ணனைகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. ‘‘நீலச் சட்டைக்காரன் அன்னியனை ஒரு வஸ்துவைப் போல் பார்த்துக் கொண்டே நடந்தான்.’’ , ‘‘நகரத்தி்ல் கேட்டே அறியாத பட்சிகள் எல்லாம் ‘கல்யாணராமன்’ என்று அவனை எழுப்பின’’ ‘‘பெண் கிச் என்று நெருப்புக்குச்சி கிழித்தாற் போல் சிரித்தது எரிச்சலாக இருந்தது’’ என்று படிக்கிற பக்கங்களில் எல்லாம் ரசனையான வர்ணனைகளில் சிக்ஸர் அடித்திருப்பார் சுஜாதா. பொதுவாகவே சுஜாதாவின் எழுத்தில் ‘மிகவும்’ என்ற வார்த்தையின் பிரயோகம் அதிகம் இருப்பதைக் கவனித்திருக்கிறேன் நான். இதிலும் ‘கல்யாணராமன் மிகவும் விரும்பினான்’ என்கிற வாக்கியம் நாவலில் பலமுறை கையாண்டிருப்பார்.

கிராமத்துப் பாடல்களை வியக்கிற ஒரு இளைஞனாக கதாநாயகனை அமைத்து, அந்த கேரக்டர் மூலமாக அழகான நாட்டுப் புறப் பாடல்கள் சிலவற்றைச் சொல்லி ரசனையைத் தூண்டுவார் நாவலின் துவக்கத்தில். ஒருபுறம் கிராமத்து ஜோடிகளான வெள்ளியின் மேல் கல்யாணராமனுக்கு உள்ள ஒருவிதமான இச்சையையும், மருதமுத்துவுக்கு சினேகலதாவின் மேல் இருக்கும் அதேரக இச்சையையும் விவரித்து உணர்ச்சிப் போராட்டங்கள் நடத்துவார். மற்றொரு புறம் கிராமத்து சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் சனங்களில் இயல்புகளையும் போகிற போக்கில் விவரித்து தனியாக ரசனைக்குத் தீனி போடுவார். இன்னொரு புறம் ஜமீன் பங்களாவில் இரவில் கேட்கும் மர்ம சப்தங்கள், சினேகலதாவின் கொலை, அதைத் தொடரும் விசாரணைகள், இறுதியில் வெளியாகும் திடுக்கிடும் உண்மை என்று விறுவிறுப்புக்கு உத்தரவாதம் தந்திருப்பார். ஆக இந்தக் கதையை மூன்று பரிமாணங்களில் நாம் ரசிக்க முடியும்.

பின்னாளில் இந்த நாவல் ‘கரையெல்லாம் செண்பகப் பூ’ என்ற பெயரிலேயே திரைப்படமாக வெளியானது. பிரதாப் போத்தன், ஸ்ரீப்ரியா, மனோரமா, தங்கவேலு போன்றவர்கள் நடித்திருந்தார்கள். திரைப்படமான சுஜாதாவின் கதைகளைப் பொறுத்தவரையில் மூலத்தில் அவர் எழுதியது நிறைய
மாற்றப்பட்டு கொத்துக்கறி போடப்பட்டிருக்கும். ஆனால் இந்தக் கதையைப் பொறுத்தவரை கூடியவரை சுஜாதாவின் கதையை மாற்றாமலேயே படமாக்கியிருந்தார்கள். என்றாலும், (ஒருவேளை அதனால்தானோ) படம் பரபரப்பாக ஓடவில்லை. சுமாராகத்தான் ஓடியது. ‘காடெல்லாம் பிச்சிப்
பூ, கரையெல்லாம் செண்பகப் பூ, நாடெல்லாம் மணக்குதுல்ல அந்த நல்லமகன் போற பாதை’ என்று சுஜாதா எழுதிய நாட்டுப்பாடலைக் கூட இளையராஜா ட்யூனில் படத்தில் பயன்படுத்தியிருந்தார்கள். இப்பக் கேட்டாலும் நன்றாகவே இருக்கும்.

ஆனந்த விகடன் வார இதழில் இந்தத் தொடர்கதை வெளியான சமயத்தில் வாசக உலகில் பெரும் வரவேற்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. அப்போதைய ஆ.வி. ஆசிரியர் இந்தத் தொடர்கதை வெளியான சமயம் அடிக்கடி தொடர்பு கொணடு உற்சாகப்படுத்தியதையும், தொடர் முடிந்ததும் உடனடியாக இன்னொரு தொடர் எழுதுங்க என்று ‌சொன்னதையும் தன் ‘கற்றது்ம பெற்றதும்’ பகுதியில் பகிர்ந்து கொண்டிருந்தார் சுஜாதா. அத்தகைய வெகுமதிக்கும், பாராட்டுக்கும் முழுத் தகுதி பெற்ற இந்த நாவலை நீங்கள் இதுவரை படித்ததில்லை என்றால் உடன் படித்து ரசிக்குமாறு பரிந்துரைக்கிறேன்.

இந்தக் கதையின் சுருக்க வடிவினைப் படிக்க இங்கே க்ளிக் : கேப்ஸ்யூல் நாவல்-8

21 comments:

 1. தொடர்கதையாகவும் படித்து , திரைப்படமாகவும் ரசித்த அருமையான கதையை பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. படித்து ரசித்த உங்களுக்கு என் மனம் நிறை நன்றி!

   Delete
 2. ஒரு வாக்கியம் (கல்யாணராமன் மிகவும் விரும்பினான்) பலமுறை வந்துள்ளது குறிப்பிட்டது, உங்களின் நுணுக்கமான ஆர்வமும் ரசனையும் வியக்க வைக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. வியந்த உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி!

   Delete
 3. சுஜாதா அவர்களின் எழுத்தில் கண்ட வேறுபாட்டை அழகாக அலசிவிட்டீர்கள். கரையெல்லாம் செண்பகப்பூ படத்தை பல வருடங்களுக்குமுன் பார்த்திருக்கிறேன். அப்போது அவ்வளவாக ரசிக்கவில்லை. கதையாகப் படித்தால் ரசிக்கும் என்பதை உங்கள் பதிவே பறைசாற்றுகிறது. வாய்ப்பு அமையும்போது கட்டாயம் வாசிப்பேன். நன்றி கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. அவசியம் வாசிக்கிறேன் என்ற உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
 4. இங்கேயும் க.செ. தானா?

  ReplyDelete
  Replies
  1. ஒரு முறையாவது டபுள் ஷாட்டாக அடிக்க வேண்டும் என்று நீண்ட நாளாக நினைத்ததுண்டு. இப்ப இப்படி வெடிச்சுட்டேன் ஸ்ரீராம். நல்லாருக்குதானே...!

   Delete
 5. எனது வாலிப வயதில், ஓவியர் ஜெயராஜ் அவர்களின் ஓவியங்களை ரசித்தபடி படித்த தொடர் சுஜாதாவின் “ கரையெல்லாம் செண்பகப் பூ”. உங்கள் விமர்சனம், இளமை ததும்பும் அந்த நாவலை மீண்டும் படிக்கத் தூண்டுகிறது. சிறப்பான விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. விமர்சனத்தை ரசித்த உங்களுக்கு என் மனம் நிறைய நன்றி!

   Delete
  2. !
   மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் இந்த பகுதியானது மிகவும் முக்கியமானதாகும் ஒரு MP MLA அவர்களுக்கு அவர்களது தொகுதி பற்றி என்ன தெரிந்து இருக்குமோ அதே அளவு அதற்கும் மேலாக நீங்கள் தெறிந்து செயலாற்றவும், ஒரு MP MLA மக்கள் நலனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை சாதாரண மக்களாகிய நம்மால் முடியும் என்று முடித்துக் காட்ட முடியும்.
   more click http://vitrustu.blogspot.in/

   Delete
 6. எனக்கு ஏனோ தெரியவில்லை சுஜாதா நாவல்களின் மீது பெரிதாக ஈர்ப்பு வந்ததில்லை..இனிமேல் படிக்க முயற்சிக்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. படிக்க ஆரம்பித்தால் ஈர்த்து விடுவார் மனுஷன். படித்துப் பாருங்கள் ஐயா. மிக்க நன்றி!

   Delete
 7. இதுவும் சினிமாவா வந்துச்சா?

  ReplyDelete
  Replies
  1. படம் ஏதோ வந்துச்சு... போச்சு...! ஹா... ஹா...!

   Delete
  2. !
   மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் இந்த பகுதியானது மிகவும் முக்கியமானதாகும் ஒரு MP MLA அவர்களுக்கு அவர்களது தொகுதி பற்றி என்ன தெரிந்து இருக்குமோ அதே அளவு அதற்கும் மேலாக நீங்கள் தெறிந்து செயலாற்றவும், ஒரு MP MLA மக்கள் நலனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை சாதாரண மக்களாகிய நம்மால் முடியும் என்று முடித்துக் காட்ட முடியும்.
   more click http://vitrustu.blogspot.in/

   Delete
 8. நல்லதோர் கதை பற்றிய உங்கள் கேப்சூல் சுவையோ சுவை!

  மிகவும் [!] ரசித்தேன் கணேஷ்.

  ReplyDelete
  Replies
  1. ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

   Delete
  2. புதுமை இனிமை இரண்டுக்கும் ரைட்டர் சார் காரண்டி.
   கதை ஒருபக்கம்.ஜெ அவர்களின் ஓவியம் ஒருபக்கம்.

   கவர்ந்திழுத்தகதை.படமாக்கியவிதம் ஒத்துப் போகவில்லை என்று நினைக்கிறேன். கதையும் திரைகதையும் கவர்ச்சியாக மாறியிருந்தால் ஒருவேளை எடுபட்டிருக்கும். நல்ல விமர்சனம் கணேஷ்.

   Delete
 9. !
  மீண்டும் உங்களை சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றோம் இந்த பகுதியானது மிகவும் முக்கியமானதாகும் ஒரு MP MLA அவர்களுக்கு அவர்களது தொகுதி பற்றி என்ன தெரிந்து இருக்குமோ அதே அளவு அதற்கும் மேலாக நீங்கள் தெறிந்து செயலாற்றவும், ஒரு MP MLA மக்கள் நலனுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை சாதாரண மக்களாகிய நம்மால் முடியும் என்று முடித்துக் காட்ட முடியும்.
  more click http://vitrustu.blogspot.in/

  ReplyDelete
 10. படத்தை பார்த்து திகிலுற்ற நினைவுகளை இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கு ஒரு எதிர்பார்ப்புடன் நகரும் அந்த படத்தை பார்த்து இருக்கிறேன் உங்கள் பதிவை படித்தபின் நாவலை தேடி போகிறேன் உங்கள் விமர்சனங்கள் சிறப்பு

  ReplyDelete