கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Tuesday, November 6, 2012


                                        3. தமயந்தியின் அழைப்பு

"என் பெயர் சங்கர், நான் எதிர் அறையில்தான் தங்கியிருக்கிறேன்" என்றான் அந்த மனிதன்.

"நீ எப்பொழுதுமே மணல் மூட்டையுடன் தான் உலாவுவாய் போலிருக்கிறது" என்று இடக்காகக் கேட்டார் பரஞ்சோதி.

"இல்லை. நான் குத்துச் சண்டை பழகுவதால் இம்மாதிரி மணல் மூட்டையையும், தோல் உறையிட்ட மூட்டைகளிலும் குத்திப் பழகுகிறேன்" என்று கூறிய சங்கர்," நான் வெளியே புறப்படும்பொழுது, இங்கு ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து, எட்டிப் பார்த்தேன். நீங்கள் இருவரும் பயங்கரமாகச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு, என் அறைக்குச் சென்று இதை எடுத்து வந்தேன்" என்றான்.

"இந்தப் பெண்ணை இங்கிருந்து நான் அழைத்துச் செல்வதற்காக வந்தேன். என் பெயர் துப்பறியும் பரஞ்சோதி" என்று கூறியவர், "நீ என் உயிரைக் காப்பாற்றி இருக்கிறாய். உனக்கு எப்பொழுதாவது தேவைப்பட்டால், நீ அவசியம் என்னிடம் வந்தால், என்னால் முடிந்த அளவு நான் உனக்கு உதவி செய்வேன்" என்று கூறிவிட்டு தன் விலாசம் அடங்கிய ஒரு சீட்டை சங்கரிடம் கொடுத்தார்.

இருவரும் சேர்ந்து லலிதாவைக் கீழ்த் தளத்திற்குத் தூக்கிச் சென்றனர். பிறகு ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஏறிக்கொண்டார் பரஞ்சோதி.. அவர் அருகே லலிதாவை அமர வைத்துவிட்டு வாடகைக் காரின் கதவைச் சாத்தினான் சங்கர். அவனிடம் விடை பெற்றுக் கொண்ட பரஞ்சோதி, பிரகாஷ்ராவ் வீட்டிற்குப் போகும்படிக் கூறினார் டிரைவரிடம். அவர் அருகே இன்னும் மயக்க நிலையிலேயே அமர்ந்திருந்தாள் லலிதா.

பிற்பகல் மூன்று மணிக்கு, தன் ஜாகைக்கு வருமாறு டெலிபோன் செய்தாள் ஸ்ரீமதி தமயந்தி சுந்தர். "நான் உங்களிடம் சில விஷயங்களைக் கலந்தாலோசிக்க வேண்டி இருக்கிறது. பரஞ்சோதி, நான்கு மணிக்கெல்லாம் வந்து விடுகிறீர்களா?" என்று கேட்டாள் தமயந்தி.

"அவசியம் வருகிறேன்" என்று பரஞ்சோதி கூறியதும், வேறு ஒன்றும் பேசாமல் டெலிபோனை வைத்து விட்டாள் தமயந்தி.

ரியாக நான்கு மணிக்கெல்லாம் தமயந்தியின் ஜாகையை அடைந்தார் துப்பறியும் பரஞ்சோதி. அவரை, தமயந்தியின் தந்தையான மாணிக்கம்தான் வரவேற்றார். "உட்காருங்கள், பரஞ்சோதி, நான் தமயந்தியின் தந்தை. தமயந்தி சில வினாடிகளில் வந்து விடுவாள்" என்று சொன்னார் மாணிக்கம். அங்கு கிடந்த சோபா ஒன்றில் அமர்ந்து கொண்டார் பரஞ்சோதி. தன்னை எதற்காக தமயந்தி கூப்பிட்டாள் என்று அவருக்குத் தெரியவில்லை.

"வாருங்கள்...." என்று கூறியபடி உள்ளே வந்தாள் தமயந்தி அவளது உடலெங்கும் வைரங்கள் மின்னின. தன் கணவனைக் காணோம் என்ற கலக்கம் அவளிடம் சிறிதுகூடக் காணவில்லை ஓயிலாக நடந்து வந்து ஒரு சோபாவில் அமர்ந்தாள். "உங்கள் திறமையைப் பற்றி நான் ரொம்பக் கேள்விப்பட்டு இருக்கிறேன்" என்று ஆரம்பித்த தமயந்தி, "எனக்காக நீங்க ஒரு வேலையைச் செய்ய வேண்டும்" என்று அர்த்த புஷ்டியோடு நிறுத்தினாள்.

"நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார் பரஞ்சோதி.

சில வினாடிகள் மௌனமாக அமர்ந்திருந்த தமயந்தி, "எனது கணவரைக் கடத்திப் போனவர்களிடமிருந்து எனக்குத் தகவல் வந்திருக்கிறது. நான் மூன்று லட்ச ரூபாய் கொடுத்தால் என் கணவரை என்னிடம் திருப்பி அனுப்பி வைப்பதாக அவர்கள் டெலிபோன் செய்தார்கள்" என்றாள்.

மாணிக்கம் குறுக்கிட்டு, "இந்த விஷயத்தைப் போலீசாரிடம் விட்டு விடுவது நல்லது" என்றார்.

"இல்லை, அப்பா,நான் அப்படிச் செய்தால் என் கணவரை ஈவு இரக்கமில்லாமல் கொன்றுவிடப் போவதாகக் கூறுகிறார்கள். எனவே, மூன்று லட்ச ரூபாய் பணத்தைக் கொடுத்துவிட்டு சுந்தரைத் திரும்பப் பெறுவதென்று நான் தீர்மானித்து விட்டேன்," என்றாள் தீர்க்கமான குரலில் தமயந்தி.

"பணத்தை எங்கே கொண்டு போய்க் கொடுக்க வேண்டுமென்று கூறினார்களா?" என்று கேட்டார் பரஞ்சோதி.

"மூன்று பாலிதீன் பைகளில், ஒவ்வொன்றிலும் ஒரு லட்சம் வீதம் பணத்தைப் போட்டுக் கட்டி, வைத்துக் கொள்ளவேண்டுமென்றும், காரில் வந்து அவர்கள் குறிப்பிடும் இடத்தில் அந்தப் பணக்கட்டுகளை வைத்துவிட்டு நாம் உடனே திரும்பி்ப் பாராமல் கிளம்பி வந்துவிட வேண்டுமென்றும் டெலிபோனில் செய்தி வந்தது. இன்றிரவு சுமார் எட்டு மணிக்கு டெலிபோன் செய்து இடத்தைக் குறிப்பிடுவதாகக் கூறினார்கள். அந்தப் பணத்தை அந்த இடத்தில் வைப்பதற்கு உங்களைத் தவிர வேறு தகுந்த ஆள் இல்லை. எனவே, நீங்கள் எனக்காக இந்தவேலையைச் செய்ய வேண்டும்" என்று நிறுத்தினாள் தமயந்தி.

"சரி, நான் அப்படியே செய்து விடுகிறேன்" என்றார் பரஞ்சோதி.

"நானும் உங்களோடு வரப்போகிறேன்" என்றாள் தமயந்தி.

"நீ போக வேண்டாம், தமயந்தி, அவரே அந்தப் பணத்தை வைத்துவிட்டு வந்து விடுவார்" என்றார் மாணிக்கம்.

"நானே அந்தப் பணம் அங்கு வைக்கப்படுவதைப் பார்க்க வேண்டும். என்முடிவை யாரும் மாற்ற முடியாது. நான் அங்கு போகத்தான் போகிறேன்" என்று பிடிவாதமாகக் கூறினாள் தமயந்தி.

"அப்படியானால் நான் இன்றிரவு எட்டு மணிக்கு இங்கு வந்து சேர்ந்து விடுகிறேன்" என்று கூறியபடி எழுந்தார் பரஞ்சோதி. அவரை வாசல்வரை வழி அனுப்ப வந்தார் மாணிக்கம். "சுந்தரை மீண்டும் நான் பார்ப்பேன் என்று எனக்குத் தோன்றவில்லை. பணத்தை இப்படி வீணாக்குவதற்குப் பதிலாக போலீசாரின் உதவியோடு அந்தக் கும்பலை வளைக்க ஏற்பாடு செய்வதுதான் புத்திசாலித்தனமானது" என்றார்.

"ஒருக்கால் தன் கணவன் மீது அவள் உயிரையே வைத்திருக்ககூடும். அதனால்தான் இப்படிப் பிடிவாதாமாக இருக்கிறாள் போலிருக்கிறது" என்று கூறிய பரஞ்சோதி, அவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பினார்.

னது ஜாகையை அடைந்ததும், தனக்காத் தன் பெண் காரியதரிசியான சுசீலா காத்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ராஜூவும் அங்கே இருந்தான். "ராஜூ, இன்றிரவு சுமார் எட்டு மணிக்கெல்லாம் நீ நமது சிறிய காரை எடுத்துக்கொண்டு, தமயந்தியின் வீட்டினருகே காத்துக் கொண்டிரு, நானும் தமயந்தியும் காரில் கிளம்புவதைப் பார்த்ததும், எங்களைத் தொடர்ந்து வா. ஆனால் நீ தொடர்ந்து வருவது தமயந்திக்குத் தெரியாமல் நீ வரவேண்டும். நாங்கள் பணத்தைக் குறிப்பிட்ட இடத்தில் வைத்ததும், திரும்பி விடுவோம். நீ, யார் வந்து பணத்தை எடுக்கிறார்களெனன்று பார்த்துத் தெரிந்து கொண்டு வா" என்றார் பரஞ்சோதி.

சுமார் எட்டு மணிக்கெல்லாம் தமயந்தியின் ஜாகையை அடைந்தார் பரஞ்சோதி. தமயந்தி அவருக்காதத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தாள். "செய்தி வந்ததா?" என்று கேட்டார் பரஞ்சோதி.

"வந்து விட்டது, எல்லைப் பக்கம் இருக்கும் ஒரு பாழடைந்த கட்டடத்தின் கூரையில் நாம் அந்தப் பணத்தை வைக்க வேண்டும்" என்று கூறியபடி, மேஜை டிராயரிலிருந்து பாலிதீன் பேப்பர்ளால் சுற்றப்பட்ட மூன்று கட்டுகளை எடுத்து அவரிடம் கொடுத்துவிட்டு அவருடன் கிளம்பினாள்.

அவர்கள் கார் கேட்டைத் தாண்டும் பொழுதே, வேறு ஒரு கார் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டது. ராஜூதான் தன் காரை கிளப்பிகிறானென்று புரிந்து கொண்டார் பரஞ்சோதி. தமயந்தியின் ஜாகையிலிருந்து சுமார் மூன்று மைல் துாரத்தில இருந்தது அந்தக் கட்டிடம். வழியில் இருவரும் ஒன்றுமே பேசவில்லை. அந்தப பாழடைந்த கட்டிடத்தை அடைந்ததும், அதன் மேல் கூரையின் மீது மூன்று கட்டுகள் பணத்தையும் வைத்து விட்டு காருக்குத் திரும்பினார் பரஞ்சோதி.

அவர் காரில் ஏறி அமர்ந்து கதவைச் சாத்தியபொழுது கூரைமேல் அவர் வைத்த பணக்கட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக ஒரு தூண்டில் கொண்டு எடுக்கப்படுவதைப் பார்த்தார். பிறகு அவர் காரைக் கிளப்பிக் கொண்டு சென்றபோது, அங்கு கிடந்த ஒரு பெரிய பாறையின் மறைவிலிருநத ஒரு மனிதன் மெதுவாகக் கட்டடத்தை நோக்கி நகர்வதைப் பார்த்து ராஜூதான் அது என்று திருப்திப்பட்டுக் கொண்டார்.

ஆனால் ஒரு மணி நேரம் கழித்து ராஜூ கொண்டு வந்தத் தகவல் அவரை ஏமாற்றமடையச் செய்தது.

-தொடரும்...


8 comments:

  1. முந்தய பதிவுகளைப் படிக்காததால் அதையும் படித்து விட்டு வந்தேன்.

    ReplyDelete
    Replies
    1. சேர்த்து வைத்துப் படித்து ரசிக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஸ்ரீராம்.

      Delete
  2. ம்ம்ம்ம்.. எடுத்துக் கொண்டு போனது யார்....

    காத்திருக்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. தொடரும் பகுதிகளில் விடை கிடைக்கும் வெங்கட். மிக்க நன்றி.

      Delete
  3. ம்.ம்.ம் கதை சுவாரஸ்யமாக போகிறது. நானும் பரஞ்சோதியை தொடர்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. பரஞ்சோதியுடன் பல திடுக்கிடும் திருப்பங்களையும் தொடர இருக்கிறீர்கள் நண்பரே. மிக்க நன்றி.

      Delete
  4. Replies
    1. தொடரும உங்கள் அன்பிற்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete