கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Saturday, October 6, 2012

                            
                                  1. மாயமாய் மறைந்த மர்ம மங் கை

பயங்கரமான இருள் சூழ்ந்திருந்த அந்த நேரத்தில், நள்ளிரவு சுமார் பனிரெண்டு மணிக்கு துப்பறியும் பரஞ்சோதியின் ஜாகை டெலிபோன் அலறியது.

''பரஞ்சோதி பேசுகிறேன்'' என்றார் துப்பறியும் பரஞ்சோதி.

 ''நான் சுந்தர் பேசுகிறேன்'' என்று மூச்சு வாங்கக் கூறிய அந்த மனிதன், ''நீங்கள் துப்பறியும் பரஞ்சோதி தானே?'' என்று கேட்டான்.
 
''ஆமாம். என்ன விஷயம்?''
 
''என்னைக் கடத்துவதற்காக முயற்சி நடைபெறுகிறது. நீங்கள் தான் என்னைக் காப்பாற்ற வேண்டும்'' என்று தவித்தான் சுந்தர்.
 
''உன்னை எதற்காக ஒருவன் கடத்த வேண்டும்?'' என்று கேட்டார் பரஞ்சோதி.
 
''ஏனென்றால் நான் தான் பெரும்பணக்காரியும், சமூக சேவகியுமான தமயந்தியின் கணவன்'' என்று ஒரே மூச்சில் கூறினான் சுந்தர். அவனுக்கு பயத்தால் மூச்சு வாங்குவது துப்பறியும் பரஞ்சோதிக்குத் தெளிவாகக் கேட்டது.

''உன்னைக் கடத்துவதால் யாருக்கு என்ன லாபம்?'' என்று கேட்டார் பரஞ்சோதி.
 
''என் மனைவியை மிரட்டிப் பணம் பறிப்பதற்காக!'' என்று கூறிய சுந்தர், ''டெலிபோனில் பேசி நேரத்தைக் கழிக்காதீர்கள். நீங்கள் வீணாக்கும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு ஆபத்து நெருங்கிக் கொண்டிருக்கிறதென்பதை மறந்து விடாதீர்கள்'' என்று தவித்தான். பிறகு விலாசத்தைக் கூறினான்.
 
''உன்னைக் கடத்திக் கொண்டு போகப் போகிறார்கள் என்பது உனக்கு எப்படித் தெரியும்?''
 
''எனக்கு டெலிபோன் வந்தது...''என்று கூறிக் கொண்டே வந்த சுந்தர் சட்டென்று நிறுத்தினான். ஏதோ நாற்காலி கீழே விழும் சத்தமும், யாரோ தடதடவென்று ஓடும் சத்தமும் பரஞ்சோதிக்குக் கேட்டன.
 
''சுந்தர்... சுந்தர்...'' என்று பரஞ்சோதி பலமுறை அழைத்தும் பதிலில்லை. டெலிபோனை வைத்து விட்டு அவசர அவசரமாகத் தனது காரியதரிசியான ராஜுவை எழுப்பி அழைத்துக் கொண்டு தனது காரில், சுந்தர் கொடுத்திருந்த விலாசத்திற்கு விரைந்தார். வழியில் ராஜுவிற்கு நடந்தவைகளை விளக்கிக் கூறிக் கொண்டே சென்றார்.

சுந்தரின் ஜாகையை அடைந்த போது ராஜு அந்த மாளிகையைக் கண்டு பிரமித்துப் போய் விட்டான். அது மிகப் பிரம்மாண்டமாகக் காட்சியளித்தது. மாளிகை முழுவதும் இருளில் மூழ்கிக் கிடந்தது. தெரு வாயிற்கதவு விரியத் திறந்து கிடந்தது.

இருவரும் முன்னெச்சரிக்கையோடு மாளிகையில், நுழைந்து ஒவ்வொரு அறையாகச் சென்று விளக்கைப் பொருத்திப் பார்த்தார்கள்.
 
ஒவ்வொரு அறையிலும் பல விலையுயர்ந்த பொருட்களும், கலைப் பொருட்களும் அலங்காரமாக வீற்றிருந்து பணப் பெருமையை பறை சாற்றின.
மாடியிலிருந்த அறையில், அவர்கள் சோதனை போட்ட போது சோபா மறைவில் ஒரு மனிதனின் கால்கள் காட்சியளித்தன. உடனே இருவரும் அருகில் சென்று கவனித்தார்கள்.
 
கீழே விழுந்து கிடந்த மனிதனுக்கு சுமார் நாற்பது வயதிருக்கலாம். அவன் கண்கள் திறந்தபடி எதையோ வெறிக்கப் பார்த்தபடி இருந்தன. அவன் கைகள் முன்னால் நீட்டியபடி இருந்தன. அவனது மார்பில் யாரோ துப்பாக்கியால் சுட்டதினால், ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவன் கிடந்த நிலையே, அவன் இறந்து விட்டான் என்பதைத் தெளிவுபடுத்தியது.
 
அந்த அறையின் நடுவே போடப்பட்டிருந்த மேஜையில் டெலிபோன் வைக்கப்பட்டிருந்தது. டெலிபோன் ரிசீவர் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. மேஜையருகே போடப்பட்டிருந்த நாற்காலி ஒன்று கீழே சாய்ந்து கிடந்தது. அதிலிருந்துதான் சுந்தர் இழுத்துத் தள்ளப்பட்டிருக்க வேண்டுமென்று தீர்மானித்தார் பரஞ்சோதி.
 
''வெளியே எங்காவது டெலிபோன் இருந்தால் நீ போலீசாருக்குத் தகவல் கொடு, ராஜு'' என்றார் பரஞ்சோதி. உடனே ராஜு அங்கிருந்து கிளம்பினான்.
 
பரஞ்சோதி அந்த அறையை நன்றாகச் சோதனை போட்டார். ஆனால் அதில் எந்தவிதத் தடயங்களும் அவருக்குக் கிடைக்கவில்லை. பிணம் கிடந்த இடத்திற்கு சிறிது தூரத்திற்கப்பால் இருந்த ஒரு அழகிய மரச் சிலையின் கையில் ஒரு துப்பாக்கிக் குண்டு பாய்ந்திருந்தது.
 
அந்தச் சமயத்தில் வெளியே ஒரு கார் வந்து நிற்கும் சத்தம் கேட்டது. ஜன்னல் திரைச்சீலையை ஒதுக்கிக் கொண்டு வெளியே பார்த்தார் பரஞ்சோதி. காரிலிருந்து ஒரு அழகிய பெண், சுற்றும் முற்றும் பார்த்தபடி கீழே இறங்கினாள். காரின் கதவைச் சாத்தி விட்டு வீட்டை நிமிர்ந்து பார்த்த அந்தப் பெண், பரஞ்சோதியின் தலையைக் கவனித்தாள்.
 
''சுந்தர்... நீங்க தானே அது...?'' என்று குரல் கொடுத்தாள் அந்தப் பெண்.
 
"ஆமாம்" என்று தாயங்காமல் குரல் கொடுத்த பரஞ்சோதி. "மேலே வா!" என்றார்.

சில நிமிஷங்களில் அந்தப் பெண் மேலே ஏறி வரும் சத்தம் கேட்டது . உடனே பரஞ்சோதி அந¢த அறையின் வாயிலை நோக்கி நடந்தார். பரஞ்சோதியைக் கண்டதும் சங்கட உணர்ச்சியை அடைந்த அந்தப் பெண்,"நான்....நான்.... சுந்தரைப் பார்க்க வேண்டும்" என்றாள்.

அவ்வளவு அழகிய பெண்ணுக்கு, பனிரெண்டு மணிக்கு மேல் அங்கு என்ன வேலை இருக்கக் கூடுமென்று பரஞ்சோதிக்கு வியப்பாக இருந்தது.  அவர் மௌனமாக இருக்கவே அந்தப் பெண், "சுந்தர் என்னை இங்கே வரச் சொன்னார். இப்பொழுது அவர் இங்கே இருக்கிறாரா, இல்லையா?" என்று பொறுமை இழந்த குரலில் கேட்டாள்.

"இங்கு ஒரு மனிதன் இறந்து கிடக்கிறான்'. நானும் சுந்தரைத் தான் தேடுகிறேன்" என்றார் பரஞ்சோதி.

"என்ன,'" என்று அதிர்ச்சியோடு கூவிய அந்தப் பெண், பரஞ்சோதி எவ்வளவோ தடுத்தும் கேளாமல் அந்தச் சவத்தருகே சென்று பார்த்தாள்.

"இவனை உனக்குத் தெரியுமா?" என்று கேட்டார் பரஞ்சோதி.

"நல்ல வேளை" என்று நிம்மதிப் பெருமூச்சுடன் கூறிய அந்தப¢ பெண், "நான் சுந்தர்தான் இறந்துவிட்டாரோ என்று பதறிப் போய்விட்டேன்" என்றாள்.

"இந்த மனிதனை உனக்குத் தெரியுமா?" என்று மீண்டும் கேட்டார் பரஞ்சோதி.

"இவன், சுந்தருக்கும், அவர் மனைவி தமயந்திக்கும் மெய்க்காப்பாளனாக உள்ளவன், பெயர் மோகன்."

"நீ எதற்காக சுந்தரைப் பார்க்க வந்தாய்?"

"சென்னையிலிருந்து அவர் நேற்றுதான் சோலைப்£க்கத்திற்கு வந்தார். அவர் மனைவி இன்றிரவு ஏதோ பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாளை காலைதான் இங்கு வந்து சேருவார். இந¢த வீட்டை ஒரு வாரத்திற்கு முன்புதான் விலைக்கு வாங்கினார்கள். இங்கு சில முன்னேற்பாடுகளைச் செய்ய தனக்கு உதவிக்கு வரும்படிக் கூறியதால் நான் இங்கு வந்தேன்."

"இரவு பனிரெண்டு மணிக்கு இங்கு என்ன ஏற்பாடு செய்ய வந்தாய்?"

இந்தக் கேள்வியைக் கேட்டதும் அவள் முகம் சிவந்தது. இருந்த போதிலும் சமாளித்தவளாய், "சுந்தர் மாலை ஆறு மணிக்கே இங்கு வந்து விட்டார். எனக்கு சென்னையில் சில வேலைகள் இருந்ததால் எட்டு மணிக்குத்தான் இங்கு வந்து சேர்ந்தேன். ராம் விலாஸில் நான் அறை எடுத்துக் தங்கி இருக்கிறேன். எனக்கு டெலிபோன் செய்து பத்து மணிக்கெல்லாம் வந்து விடும்படி கூறினார் சுந்தர். எனக்கு சோலைப்பாக்கம் புதிதானதால் வழி தெரியாமால்  அலைந்ததில் நேரமாகி விட்டது" என்றாள்.

"உன் பெய்ரென்ன? நீ யார்?" என்று கேட்டார் பரஞ்சோதி.
 
"என் பெயர் அகல்யா. நான் ஸ்ரீமதி தமயந்தி சுந்தரின் காரியதரிசி" என்று கூறிய அந்தப் பெண், "எனக்கு இனி இங்கே வேலை இல்லை" என்றவள் திடீரென்று, "நீங்கள் யார்? எதற்காக இங்கே வந்திருக்கிறீர்கள்?" என்று கேட்டாள்.

"நான் தான் துப்பறியும் பரஞ்சோதி, சுமார் பனிரெண்டு மணிக்கு சுந்தர் எனக்கு டெலிபோன் செய்து, தன்னைக் கடத்துவதற்கு முயற்சி நடைபெறுவதாகவும், நான் உடனே புறப்பட்டு வரவேண்டுமென்றும் சொல்க் கொணடிருக்கும்போதே இங்கு ஏதோ தகராறு ஏற்பட்டதினால் அதற்குமேல் எனக்கு எதுவும் கேட்கவில்லை. உடனே நான் இங்கு வந்து சேர்ந்தேன்" என்றார் பரஞ்சோதி.

"தன்னைக் கடத்திச் செல்லப் போகிறார்கள் என்றா அவர் கூறினார்?" என்று வியப்போடு கேட்டாள் அகல்யா.
 
"ஆமாம்."
 
சிறிது நேரம் ஏதோ யோசனையோடு நின்று கொண்டிருந்த அகல்யா, "நான் போக வேண்டும்" என்று கூறியவளாய் திரும்பினாள்.
 
"கொஞ்சம் பொறு, இன்னும் சிறிது நேரத்தில் போலீசார் இங்கு வந்து விடுவார்கள். அவர்களிடம் கொஞ்சம் பேசவேண¢டி இருக்கும்" என்றார் பரஞ்சோதி.

"போலீசாருக்கு என் சாட்சியம் தேவையாக இருந்தால் நான் தங்கி இருக்கும் ஜாகைக்கு வரட்டும்" என்று கூறிய அகல்யா தனது டம்பப் வையை ஆட்டியபடி நடக்க ஆரம்பித்தாள்.

அவளது வழியை மறித்தவராய், "சில நிமிஷங்கள் நீ இங்கு இருந்துதானாக வேண்டும்" என்று கட்டளையிடும் பாவனையில் கூறினார் பரஞ்சோதி.

ஒரு கணம் அவரை வெறிக்கப் பார்த¢த அகல்யா, கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தனது கைப்பையிலிருந்து ஒரு துப்பாக்கியை உருவி அவர் நெஞ்சுக்கு நேராகப் பிடித்தபடி, "திரும்பி அறைக்குள் நடங்கள், சிறிது அசைந்தாலும் சுடுவதற்குத் தயங்க மாட்டேன்" என்று கடுமையாகக் கூறினாள்.
-தொடரும்
==========================
1977ல் வெளிவந்த ஒரு மர்ம நாவலை இங்கு தொடராக வெளியிடுகிறேன். துப்பறியும் கதைகள் எழுதுவதில் புகழ் பெற்றிருந்த அந்நாளைய எழுத்தாளர் யார் என்பதை கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.இயலாவிட்டால் தொடரின் இறுதியில் பெயர் வெளியிடப்படும்.
==========================


17 comments:

  1. தொடரைப் போலவே நாவலை எழுதியவரின் பெயரும் மர்மமாக இருக்கிறது. அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. யாராவது கில்லாடிகள் கண்டுபிடிக்கறாங்ளான்னு பாக்கலாம் ஸார். அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கும் உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
    2. கணேஷ் சார்! நான் கண்டுபிடிச்சுட்டேன். அவர் பழம்பெரும் துப்பறியும் எழுத்தாளர் மேதாவி தானே?

      Delete
    3. அசத்திட்டீங்க துரை. அவரே தான். அடுத்த பகுதியை அவர் பேர் போட்டே வெளியிட்டுடறேன். வாழ்த்துக்கள்.

      Delete
  2. தமிழ்வாணனா? சரியாக கணிக்க முடியவில்லை. ஆனால் அருமையாக இருக்கிறது. அடுத்த பகுதிக்காக வெயிட்டிங்.

    ReplyDelete
    Replies
    1. தமிழ்வாணனின் தனித் தமிழ் எழுத்து நடையே சொல்லி விடும் இது அவர் எழுதவில்லை என்று. கதையை ரசித்ததுடன் அடுத்த பகுதிக்காய் காத்திருக்கும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
    2. அதானே? தமிழ்வாணனின் துப்பறியும் நிபுணர் சங்கர்லால் அல்லவா?

      Delete
  3. மர்மமாக இருக்குதே... (எழுத்தாளரும்)

    தொடர்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. இரண்டு மர்மங்களையும் சீக்கிரமே உடைத்து விடலாம் தனபாலன். தொடரும் உங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றி.

      Delete
  4. துப்பறியும் கதை புத்தகம் வாங்கி படிப்பதில்லை.. அந்த குறை உங்களால் நிறைவடைகிறது.. ஆவலுடன் காத்திருக்கிறேன் அடுத்த பகுதிக்கு.. நன்றி சார்

    ReplyDelete
    Replies
    1. கதை நல்லாவே போகும். படிச்சுப் பாரும்மா. ஆவலுடன் காத்திருக்கும் உனக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  5. எழுத்தாளர் தேவன்???????

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ... தேவன் நகைக்சுவையில தான்மா பேர் வாங்கினவர், அவர் எங்க க்ரைம் கதை பக்கம் வந்தார்? அவர் இல்லம்மா... சீக்கிரமே சொல்லிடறேன். (அதுக்குள்ள யாராவது கண்டுபிடிக்கறாங்களான்னு பாப்பம்) உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  6. தமிழ்வானன்தானே? சிறுவயதில் துப்பறியும் நாவல்களைப் படிப்பதில் அதிக ஆர்வம். இக்கதைமூலம் அந்த ஆர்வத்தை மீண்டும் தூண்டிவிட்டுள்ளீர்கள், நன்றி

    ReplyDelete
    Replies
    1. துப்பறியும் கதையை விரும்பிப் படிக்கும் த்ஙகளுக்கு என் மனமார்ந்த நன்றி. எழுத்தாளர் யார் எனபது இப்போது வெளியாகி விட்டதே நண்பரே,

      Delete
  7. அருமை சகோ நன்றிகள் பல பல எங்க பக்கமும் வந்து போறது

    ReplyDelete
  8. ithu James hadley Chase in Figure it out for our self endra novelin appatamana copy .Wow

    ReplyDelete