கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Friday, July 13, 2012


இரண்டாவது தாலி
-ராஜேஷ்குமார்-
 
க்ரைம் கதை மன்னர் ராஜேஷ்குமாரின் ஆயிரத்துக்கு மேற்பட்ட க்ரைம் நாவல்களில் நிறையப் படித்திருப்பீர்கள். சமூகக் கதைகளையும் அவ்வப்போது அவர் எழுதுவதுண்டு. சாவி இதழில் தொடர்கதையாக அவர் எழுதிய ‘இரண்டாவது தாலி’ நாவல் எனக்கு மிகவும் பிடிக்கும். என் கல்லூரி நாட்களில் சாவிக்காக காத்திருந்து தொடர் படித்தது இன்றும் மனதில் பசுமையாய்! அந்தக் கதையின் ‘சுருக்’ இங்கே உங்களுக்காக.

சுபமதி பெரும் பணக்காரர் தணிகாசலத்தின் மகள். கல்லூரி மாணவியான அவளை அவளு‌டன் கல்லூரியில் படிக்கும் ஷ்யாம் என்பவன் விரும்புகி‌றான். ஷ்யாம் நல்லவனாக இருந்துவிட்டால் சுபமதி காதலித்திருப்பாள்... அவனோ சிகரெட், மது என்று சுற்றி படிப்பின் மீது அக்கறையில்லாத ஜாலி டைப். எனவே அவள் கண்டுகொள்வதல்லை அவனை.

அவர்கள் கல்லூரியில் கல்விச் சுற்றுப்பயணத்துக்காக முதுமலை காட்டுப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே ஒரு யானை மாணவிகளைத் துரத்த, சந்தர்ப்பவசமாக தோழிகளைவிட்டு தனியே பிரிந்து விடுகிறாள் சுபமதி. யானை அவளைத் துரத்தி வருகிறது. ‘புடவையை அவிழ்த்து எறிந்துவிட்டால் யானை நின்று விடும்’ என்று எங்கோ கேள்விப்பட்ட (தவறான) தகவலால் அதைச் செயலாக்கியபடி ஓடுகிறாள். யானை விட்டபாடில்லை. ஓடிய களைப்பில் ஓரிடத்தில் மயங்கி விடுகிறாள். மீண்டும் உணர்வு திரும்பியபோது அவள் உடலில் சேலைக்கு பதிலாக ஒரு கோட் இருக்கிறது. அருகி்ல் இலை, தழைகளால் நெருப்பு மூட்டியபடி ஒரு இளைஞன் குளிர் காய்ந்து கொண்டிருக்கிறான். அவன்தான் தன்னைக் காப்பாற்றியவன் என்பதை அறிகிறாள்.

அவன் பெயர் புவனேந்திரன். கோவையில் ஒரு தனியார் நிறுவனம் நடத்திக் கொண்டிருப்பவன். அவளை கல்லூரிக் குழுவினரிடம் பத்திரமாக ஒப்படைக்கிறான். சுபமதி அவனுடன் சிரித்துப் பேசுவதைப் பார்க்கும் ஷ்யாம் கொதிக்கிறான். சுபமதியின் அப்பா தணிகாசலம் பெற்றோரை இழந்துவிட்ட அவரது தங்கை மகன் சுந்தரத்தை படிக்க வைத்து, வேலையும் தந்து தன்னுடனேயே வைத்திருக்கிறார். அவனுக்கு சுபமதியைக் கல்யாணம் செய்து வைத்துவிட வேண்டுமென்பது அவரது விருப்பம். சுந்தரம் யா‌னை சுபமதியைத் துரத்திய விஷயத்தை தணிகாசலத்திடம் சொல்ல, அவர் அவள் மீது அளவுகடந்த பாசமுள்ள அவர், படிப்பையே நிறுத்தி விடலாம் என்கிறார். சுந்தரம் சமாதானப்படுத்துகிறான்.

சுபமதிக்கு அதன்பின் புவனேந்திரன் நினைவாகவே இருக்கிறது. அவள் வீட்டுக்கு ஒரு இன்டீரியர் டெக்ரேட்டர் போல பொய் சொல்லி வந்து அவளைச் சந்திக்கிறான் புவனேந்திரன். அவனுக்கும் தன் மீது காதல் இருப்பதை அறிந்து மகிழ்கிறாள். அவர்கள் காதல் வளர்கிறது. புவனேந்திரனுக்கு, சத்யேந்திரன் என்கிற பாதை மாறிப்போன ஒரு தம்பி மட்டும் இருப்பதையும் வேறு சொந்தபந்தங்கள் இல்லை என்பதையும் அறிகிறாள் சுபமதி. ஷ்யாம் ஒரு முறை சுபமதியிடம் ஓவராகப் பேசி, புவனேந்திரனிடம் உதை வாங்கி அவமானப்படுகிறான். வன்மம் வளர்க்கிறான் மனதில்.

வீட்டில் சுபமதியும், அவள் தோழி ஆஷாவும் இந்தக் காதலைப் பற்றிப் பேசுவதை அந்தப் பக்கம் எதேச்சையாக வரும் சுந்தரம் கேட்டு விடுகிறான். தணிகாசலம் ஜோசியரை வரவழைத்து, சுந்தரம்-சுபமதி திருமணத்துக்கு நாள் குறிக்கச் சொல்ல, ‌கால்,கை வலிப்பு வந்தவனாக நடிக்கிறான் சுந்தரம். விளைவாக... கல்யாணத் திட்டத்தை ஒத்தி வைக்கிறார் தணிகாசலம். சுபமதியிடம் தனக்கு நோய் எதுவும் இல்லையென்றும், அவளுக்காக நடித்ததையும் சுந்தரம் சொல்ல, அவனை மதிப்போடு பார்க்கிறாள் சுபமதி.

தணிகாசலம் பிடிவாதப் பேர்வழி என்பதால் காதலை ஒப்புக் கொள்ள மாட்டார், கல்யாணம் செய்து கொண்டு எதிரே வந்தால் சமாதானமாகி விடுவார் என்று வற்புறுத்துகிறார்கள் சுந்தரமும் ஆஷாவும். இவர்களும் ஒப்புக் கொண்டு திருப்பதி சென்று, திருமணம் செய்து கொள்கிறார்கள்.

 திரும்பி வருகையில் இரு மர்ம உருவங்கள் பாய்ந்து சுபமதியின் முகத்தி்ல் ஒரு துணியால் மூட, அவள் நினைவு தவறுகிறது. மீண்டும் கண் விழிக்கையில் ஆந்திராவில் ஒரு ரயில்வே ஸ்டேஷன் வெயிட்டிங் ரூமில் தான் கிடப்பதை உணர்கிறாள். முன்னேயுள்ள இருக்கையில் புவனேந்திரனும் அவன் நண்பனும் பேசிக் கொண்டிருக்கின்றனர். சுபமதி நல்ல ஸ்ட்ரக்ட்சர் உள்ள பெண் என்றும், நல்ல விலைக்குப் போவாள் மும்பையில் என்றும் புவனேந்திரன் சொல்லிக் கொண்டிருப்பதைக் கேட்டதும் நொறுங்கிப் போகிறாள் சுபமதி.

‘‘இந்த அதிரடித் திருப்பத்திற்குப் பின்னர் ராஜேஷ்குமார் கதையில் வைத்திருக்கும் திருப்பங்களை நீங்கள் படித்துப் புரிந்து கொள்ளுதலே சிறப்பு. ஆகவே ‘இரண்டாவது தாலி’ நாவலைத் தேடிப் பிடி்த்து படித்து விடுங்கள்’’ என்று எழுதி இத்துடன் நிறுத்தி விடலாமென்று தோன்றுகிறது. ஆனா... மதுரைத் தமிழனும், சீனுவும் இன்னும சிலரும் கைல கம்போட என் அட்ரஸ் விசாரிக்கறது என் மனக்கண்ல தெரியறதால... தொடர்ந்துடலாம்.

சுபமதி குபீரென்று எழுந்து ஓட, அவர்கள் இருவரும் அவளைப் பிடிக்கத் துரத்துகிறார்கள். வெறிகொண்டு ஓடிவரும் புவனேந்திரன் குறுக்கிடும் ரயிலைக் கவனிக்காமல் அதில் சிக்கி சுபமதியின் கண்ணெதிரி‌லேயே அரைபடுகிறான். கோவையில் வீட்டுக்கு வந்ததும் நடந்த விஷயங்களை சுபமதி சொல்ல சுந்தரம் மிகவும் வருந்துகிறான்.

இதற்கிடையில் அவனுக்கு உடல் நிலை தேறாது என்பதால் வேறொரு மாப்பிள்ளையைப் பேசி முடித்து கல்யாண ஏற்பாடுகளில் இறங்கியிருக்கிறார் சுபமதியின் தந்தை. அவரிடம் மறுத்துப் பேசினால் ஆபத்து, கல்யாணத்திற்கு முன் ஏதாவது செய்து நான் நிறுத்தி விடுகிறேன் என்று சுந்தரம் சமாதானம் சொல்கிறான். வேறு வழியின்றி தன் வேதனையை மறைத்து சந்தோஷமாக இருப்பவள் போல நடிக்கிறாள் அவள்.

கல்யாண தினத்தின் காலையி்ல்... கீழே மண்டபத்தில் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்க... மேலே சுபமதியின் அறைக்கு வரும் ஷ்யாம் அவளைக் கற்பழிக்க முயல, அருகில் இருக்கும் குத்துவிளக்கினால் அவன் தலையில் ஓங்கி அடிக்கிறாள் அவள். எதிர்பாராதவிதமாக அவன் கபாலமோட்சமடைந்து உயிரை விடுகிறான். அவள் திகைத்துப் போய் நிற்க, அங்கு வரும் சுந்தரம் அவளுக்கு தைரியம் சொல்லி, ஒரு பெட்ஷீட்டில் பிணத்தைச் சுற்றி, கட்டிலின் அடியில் உருட்டி விடுகிறான்.

கல்யாண வீட்டு வாண்டுகள் ‌‘ஹைட் அண்ட் ஸீக்’ விளையாட, ஒளியும் வாண்டுகளில் ஒன்று பிணத்தையும் ரத்தத்தையும் பார்த்துவிட்டு கீழே வந்து அப்பாவிடம் சொல்ல, பிரச்னையும் வாக்குவாதங்களும் வளர்கின்றன. கல்யாணம் நின்று போகிறது. போலீஸ் வந்துவிட்டிருக்க, தா‌னே கொலை செய்ததாகச் சொல்லி (சுபமதியைப் பேசவிடாமல் சத்தியம் வாங்கி) அவர்களுடன் செல்கிறான் சுந்தரம். தொடர்ந்த இந்தச் சம்பவங்களின் அதிர்ச்சியைத் தாங்க முடியாமல் இதயத் தாக்குதல் ஏற்பட, ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுகிறார் தணிகாசலம்.

ரைட்... க்ளைமாக்ஸே வந்துடுச்சு. கதை அவ்வளவுதான்னு நினைச்சீங்கன்னா அதான் இல்லை... அழகா ஒரு ஆன்டி க்ளைமாக்ஸ் (ஆன்ட்டி க்ளைமாக்ஸ் இல்ல) வைச்சிருக்கார் ரா.கு. அதை நீங்க புத்தகத்தை வாங்கி....

‘‌அதான் தொடராவும் புத்தகமாவும் வந்து பல வருஷமாச்சுல்ல.. சொல்லி முடிச்சா என்னய்யா?’ங்கறார் ஸ்ரீராம். ரைட், சொல்லிடலாம்...

சுந்தரம் ஜெயிலிலும், அப்பா ஆஸ்பத்திரியிலும் இருக்க, தனிமையில் அழுது கொண்டிருக்கும் சுபமதியிடம் அவளைப் பார்க்க விஸிட்டர் வந்திருப்பதாக வாட்ச்மேன் சொல்ல, படியிறங்கி வருகிறாள். அங்கே ஹாலில் பேப்பர்படித்தபடி அமர்ந்திருப்பது.... புவனேந்திரன்! அதிர்ந்து போகிறாள். அவனும் அவன் தம்பி சந்யேந்திரனும் ட்வின்ஸ் என்பதை சஸ்பென்ஸாக அவளிடம் சொல்ல நினைத்தது தப்பாயிற்று என்றும் அயோக்கியனான அவன், தன்னை அடித்து மலையிலிருந்து உருட்டிவிட்டு சுபமதியை தூக்கிச் சென்றதையும், நினைவிழந்து ஆந்திராவில் சிகிச்சை பெற்ற தனக்கு நினைவு திரும்ப இத்தனை நாட்கள் ஆனதையும் அவன் சொல்கிறான்.

ஆனந்த அதிர்வுடன் இங்கு நிகழ்ந்தவைகளை அவள் விவரிக்கிறாள். இருவரும் சிறைக்குச் சென்று சுந்தரத்தை சந்திக்கின்றனர். புவனேந்திரன் அயோக்கியன் அல்ல என்பதை அறிந்து மகிழும் அவன் தன் முன்னிலையில் திருமணத்துக்காக வாங்கிய தாலியை அவளுக்குக் கட்டச் சொல்கிறான். புவனேந்திரன் அப்படியே செய்கிறான். அவள் அப்பாவிடம் தான் பேசிக் கொள்வதாகவும், சிறையிலிருந்து வரும்போது அவள் குழந்தையை பள்ளியில் கொண்டு விடுவது தானாகத்தான் இருக்குமென்றும் அவன் கண்ணீரோட சொல்லிச் சிரிக்க, அவன் கண்ணீர் பட்டு, அவளின் இரண்டாவது தாலி மினுமினுக்கிறது.

-சைவ-அசைவ ஹோட்டல்கள்னு சிலது உண்டு. அங்க சைவம் சாப்ட்டாலும் அசைவம் பரிமாறின கரண்டிங்கறதால கொஞ்சம் அசைவம் வந்துடும் சுத்த சைவர்கள் அந்தப் பக்கம் போக மாட்டாங்க. அப்படித்தான் ராஜேஷ்குமார் இந்‌தக் கதைய ப்யூர் லவ் ஸ்டோரியாவே கொண்டுட்டு வந்திருந்தாலும் பழக்க தோஷத்துல ‌மைல்டா கொஞ்சம் க்ரைமும் சஸ்பென்ஸும் வந்துடுது. அதனால என்னங்க.... முதப் பக்கத்துல ஆரம்பிச்சா, கடைசிப் பக்கம் முடிச்சுட்டுத்தான் கீழ வைக்கவே தோணும் இந்த நாவலை. அதைவிட நமக்கு வேறென்னங்க வேணும்?

பி.கு.: இந்தப் புத்தகம் இப்ப என்கிட்ட இல்ல. நினைவிலருந்து எழுதினதால ஹீரோயினோட அப்பா பேர் பன்னீர்செல்வமா, தணிகாசலமா... ரா.கு. என்ன வெச்சார்னு நினைவில்ல.


31 comments:

  1. அழகாக சுருக்கி கதையைச் சொல்லிவிட்டீர்கள்..இந்தக் கதையை க்ரைம் ஸ்பெஷலில் படித்ததாய் ஞாபகம்..தங்கள் சேவை ஓங்கட்டும்..

    ReplyDelete
    Replies
    1. க்ரைம் ஸ்பெஷலில் வந்ததா என்ன... உங்களிடம் வாங்கிப் படித்துவிடலாம் போல. உற்சாகம் தந்த உங்களுக்கு மிக்க நன்றி கவிஞரே...

      Delete
  2. Nice recall for the Novel. Ithey pola muthal pagal nu oru samuga novel eluthiiruppar. Athuvum nandraga irukkum.

    ReplyDelete
    Replies
    1. பார்வையிழந்த ஒரு பெண் பற்றி அவர் தேவி இதழில் எழுதி மனம் தொட்ட அந்தக் கதையை மறக்க முடியுமா மாதவ்... நினைவுபடுத்திய உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  3. சிறப்பா சுருக்கி சொன்ன விதம் அருமை.

    ReplyDelete
    Replies
    1. சுருக்கத்தை ரசித்த உங்களுக்கு பெருக்கமான என் நன்றி தென்றல்.

      Delete
  4. சைவ அசைவ ஹோட்டல் விளக்கம் மிக மிக அருமை
    மிக மிக அழகான கதைச் சுருக்கம்
    மனம் கவர்ந்த அறிமுகம்
    அவசியம் கதையப் படித்துவிடுகிறேன்
    பகிர்வுக்கு நன்றி
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. கதைச் சுருக்கத்துடன் உவமை சொன்னதையும் ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பரே...

      Delete
  5. ராஜேஷ்குமார் அவர்களுடைய கதையை இதைவிட சிறப்பாக சுருக்கி யாராலும் சொல்ல இயலாது. படித்தேன் இரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. கதைச் சுருக்கத்தைப் படித்து ரசித்த உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  6. //ஆகவே ‘இரண்டாவது தாலி’ நாவலைத் தேடிப் பிடி்த்து படித்து விடுங்கள்’’// எவ்ளோ விருவிருப்ப படிச்சிட்டு வந்தேன் தெரியுமா, ஆக நமக்காக கதைச் சுருக்கம் லா எழுதி இருக்காங்கன்னு, இந்த வரியப் படிச்சதும் மூர்ச்சை ஆகாத குறை தான்.

    // மதுரைத் தமிழனும், சீனுவும் இன்னும சிலரும் கைல கம்போட என் அட்ரஸ் விசாரிக்கறது என் மனக்கண்ல தெரியறதால... தொடர்ந்துடலாம்.//
    தப்பிச்சீங்க சின்ன வாத்தியாரே பட் உங்க டீலிங் எனக்குப் பிடிச்சிருக்கு

    // இந்தப் புத்தகம் இப்ப என்கிட்ட இல்ல. நினைவிலருந்து எழுதினதால ஹீரோயினோட அப்பா பேர் பன்னீர்செல்வமா, தணிகாசலமா...// உங்க நியாபக சக்திய நினைச்ச பொறாமையா இருக்கு சார், நா நேத்து படிச்சா புத்தகத்த இனிக்கு மறந்துட்டு நாளைக்கு எங்க அண்ணன் கிட்ட அந்த புக் படிச்சிய நல்ல இருக்க இல்லியான்னு கேப்பேன், என்ன கொடும சார் இது.

    கதை சுருக்கம் அருமை அற்புதம்


    படித்துப் பாருங்கள்

    தல போல வருமா (டூ) பில்லா டூ

    http://seenuguru.blogspot.com/2012/07/blog-post_13.html

    ReplyDelete
    Replies
    1. கதைச் சுருக்கத்தை ரசிச்சுப் படிச்சதோட என் நினைவுத் திறமையும் பாராட்டின சீனுவுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  7. ஆனாலும் இந்த சுந்தரம் கேரக்டர் நம்ப முடியாத அளவுக்கு நல்லவனா இருக்குங்க..

    ReplyDelete
    Replies
    1. தொடர்கதையாப் படிக்கும் காலத்துல பின்னால சுந்தரம் வில்லனா ஆயிடுவான்னு எதிர்பார்ப்போடதான் படிச்சேன். கடைசிவரை அவனை அநியாயத்துக்கு நல்லவனாகவே கொண்டு போய் என்னை ஏமாத்திட்டாரு க்ரைம் கிங். ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  8. நிஜமா நான் ரா கு படிச்சதில்லை (என்றுதான் நினைக்கிறேன். விகடனில் வந்த ஒரு காதல் தொடர்கதை படித்திருக்கிறேனோ...) இந்தக் கதை எதிர்பார்த்த எதிர்பாராத திருப்பங்களோட நல்லாவே இருந்திருக்கும் என்றும் தெரிகிறது. உங்கள் 'சுருக்'குக்கு மறுபடி பாராட்டுகள். (ஐ.... பதிவில் என் பெயர்.... நன்றிங்கோ...)

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்... கிடைத்தால் விடாதீர்கள் ஸ்ரீராம். விறுவிறுப்பாகவே இருக்கும. உங்களுக்கு என் இதய நன்றி.

      Delete
  9. அருமையான கதைச்சுருக்கம்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. கதைச் சுருக்கத்தை ரசித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி.

      Delete
  10. ஒரு காலத்தில் ராஜேஷ் குமாரின் தீவிர வாசகன் நான்! அவரது நிறைய நாவல்கள் என்னிடமிருந்தன. பின்னர் வேறொருவருக்கு கொடுத்து திரும்ப வரவில்லை! இரண்டாவது தாலியும் படித்து இருக்கிறேன். இப்போது நினைவில்லை! தாங்கள் நினைவூட்டியமைக்கு நன்றி! இந்த பதிவு மீண்டும் புத்தகங்கள் சேகரிக்க என்னை தூண்டுகிறது! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நானும் மற்றவர்களுக்கு இரவல் கொடுத்து இழந்த புத்தகங்கள் நிறைய. இப்போதெல்லாம் ஞாபகமாக கேட்டு வாங்கி விடுவேன். ரசித்துப் படித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  11. யார் பேர் என்னவா இருந்தா என்ன?ஒரு நல்ல கதையை சுவாரஸ்யம் குறையாமச் சொல்லியிருக்கீங்க!

    ReplyDelete
    Replies
    1. அதானே... சம்பவங்களிலும் எழுத்திலும் நான் சொன்னது மிகச் சரியாகவே இருக்கும். பெயர் எதுவானால் என்ன... ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் உளம் கனிநத நன்றி.

      Delete
  12. எத்தனை திருப்பங்கள் கதையில்.... நிச்சயம் நீங்கள் சொன்னது போல, படிக்க ஆரம்பித்தால் புத்தகத்தினை கீழே வைத்திருக்க முடியாது தான்....

    ரா.கு. வின் எழுத்தினையும், உங்கள் எழுத்தினையும் ஒரு சேர ரசித்தேன் கணேஷ். வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ரா.கு. என்கிற ஜாம்பவானின் எழுத்தோடு என் எழுத்தையும் ரசித்துப் படித்த உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி நண்பா.

      Delete
  13. என்கிட்ட கிட்டத்தட்ட ராஜேஷ்குமார் சாரோட 500 புக்கு இருக்கு (வீட்டில்), இங்க (பஹ்ரைன்) எடுத்துட்டு வந்தது 75 புத்தகம்.. இருப்பினும் இந்த கதை படிச்சதா நினைவில் இல்லை :( :( :(

    ReplyDelete
    Replies
    1. அத்தனை கலெக்ஷன்களை வைத்திருக்கும் விசிறி நீங்கள் என்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கு என் இதயம் நிறை நன்றி.

      Delete
  14. எப்படி கணேஷ் ஏராளக் கதைகளை மனதில் அப்படியே பதிஞ்சிவைக்கிறீங்க? புத்தகம் இல்லாமலேயே கதைமாந்தர்களின் பெயரையும் கதைச் சுருக்கத்தையும் இந்த அளவுக்குக் கொடுக்க முடிகிறதென்றால்... எத்தனை ஈடுபாட்டோடு படித்திருப்பீர்கள்? அனைவரையும் வாசிக்கத் தூண்டும் பதிவு. நன்றி கணேஷ்.

    ReplyDelete
    Replies
    1. மிகச் சரியாகச் சொன்னீர்கள். நான் ரசித்து ருசித்துப் படித்த கதை இது கல்லூரி நாட்களில். ஞாபகசக்தி என்பது என் பலம். பலவீனம் இரண்டுமே கீதா. ரசித்துப் படித்து உற்சாகம் தந்த கருத்திட்ட உங்களுக்கு என் மனம் நிறைநத நன்றி.

      Delete
  15. சுருக்கமே சுவையாக உள்ளது!

    சா இராமாநுசம்

    ReplyDelete
    Replies
    1. இதன் சுவையை ரசித்துப் பாராட்டிய தங்களுக்கு என் இதயம் நிறை நன்றி ஐயா.

      Delete